எம்மைப் பற்றி

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையில் ‘பயங்கர-வாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் சிங்கள அரசு, ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இன அழிப்புப் போர் மிகக்கொடூரமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் அன்றாடம் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தன. இக்கொடூரப்போரை நிறுத்த வலியுறுத்தி, அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களையும் கடந்து வழக்குரைஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், மகளிர் அமைப்புகள், திருநங்கைகள் என பலதரப்பினர் வீதிக்குவந்து போராட்டங்களை நடத்தினர்.

அதுவரை எந்த அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபட்டிராத தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த இளைஞர்கள் சிலர், அப்போரை நிறுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையில் உள்ள ‘டைடல் பூங்கா’ முன்பு ‘போரை நிறுத்து; தமிழர்களைக் காப்பாற்று’ (Stop War; Save Tamils) என்ற முழக்கத்துடன், படித்த நகர்ப்புற இளைஞர்களை ஒன்றுதிரட்டி மனிதசங்கிலிப் போராட்டத்தை நடத்தினார்கள். இச்செயல்பாட்டினால் ஒன்று சேர்ந்த இளைஞர்கள், போரை நிறுத்தவும் ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்கவும் வலியுறுத்தி தொடர்ந்து செயல்படத் தொடங்கினர். போராட்டத்தில் இயல்பாக எழுந்த மேற்கண்ட முழக்கமே இயக்கத்தின் பெயராக நிலைத்துவிட்டது. இப்படித்தான் ‘‘சேவ் தமிழ்ஸ்” (Save Tamils) இயக்கம் 2008ஆம் ஆண்டு உருவானது.

இயக்கத்தின் பெயர் தமிழில் இல்லை என்பதாலும், அதன் பொருள் தமிழர்களைக் கையறு நிலையினராகக் காட்டுவதாக உள்ளதாலும் இப்பெயரை மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. 13 சூலை 2014 அன்று, “இளந்தமிழகம்” என்று பெயர் மாற்றப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட புதிய தொழில்வளர்ச்சியின் விளைவாக விரிவடைந்து வரும் நகரங்களில் வாழ்ந்துவரும் புதிய நடுத்தர வர்க்கப் பிரிவினரை இவ்வியக்கம் மிகுதியாகக் கொண்டிருக்கிறது.

Young Tamil Nadu Movement
Formerly, Save Tamils Movement, an independent political movement comprising IT professionals and youths, campaigns for the political, democratic and human rights of the oppressed people of Tamil Nadu. The movement was formed in November 2008 in the backdrop of Sri Lanka’s genocidal war against Eezham Tamils with an effort to “Stop the war, Save Tamils”. The movement will continue to work towards the goal of lining up the newly evolved middle class section to the ongoing struggles spanning decades, in order to attain the democratic rights of the oppressed section.