திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணியை மதுரைக்கு போகவிடாமல் கைது செய்து இந்துத்துவ, சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறைக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்

நேற்று முன் தினம் 1-8-2017 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணியை மதுரைக்குள் போகவிடாமல் கைது செய்து இந்துத்துவ, சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டது காவல்துறை. இதற்கு காவல்துறை சொன்ன காரணம் தோழர் கொளத்தூர் மணி மதுரை வந்தால் சிலர் ஆர்ப்பாட்டம் செய்து பிரச்சனை செய்வார்கள் என்பதும் தம்மால் பாதுகாப்பு தர இயலாது என்பதுமாகும்.
2012 ஆம் ஆண்டு நடந்த பயிலரங்கம் ஒன்றில் தோழர் கொளத்தூர் மணி முத்துராமலிங்கத் தேவர் பற்றி விமர்சனப்பூர்வமாகப் பேசியதாக சொல்லப்படும் காணொளியைக் குறிப்பிட்டு சாதிப் பெருமைவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் சாதிய அமைப்புகளும் இந்துத்துவ அமைப்புகளும் வம்பு செய்துவருகின்றனர். அவரது தொலைபேசியில் அழைத்து வாய்க்கு வந்தபடி பேசுவதில் தொடங்கி முகநூலில் கண்டபடி எழுதுவதுவரை குழப்பம் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி வழக்கறிஞர்கள் நடத்திவரும் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்திற்கு போகும் பொழுதுதான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார் தோழர் கொளத்தூர் மணி. முன்னதாக ஜூலை 31 ஆம் தேதி செல்லவிருந்தவரை காவல்துறை  தொலைபேசியில் அழைத்து, ”இன்று இந்து மக்கள் கட்சியினர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதால் நாளை வாருங்கள்” என்று சொல்லியுள்ளனர். எனவே, ஜூலை 31 ஆம் தேதி அன்று செல்லாமல் அடுத்த நாள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று செல்ல முயன்றுள்ளார். ஆனால், நிலகோட்டையில் காலை 10.30 மணி அளவில் அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை சுமார் 3 மணி நேரம் காக்க வைத்து, கடைசியில் தோழர் கொளத்தூர் மணி மதுரைக்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று சொல்லி தடுத்துள்ளனர். இந்நிலையில் தடையை மீறி செல்ல முற்பட்ட போது, அவரைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளனர். சட்டம் ஒழுங்குக்கு சவால்விட்டு மிரட்டும் சாதி ஆதிக்க அமைப்புகள், இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவ அமைப்புகள் அடாவடித்தனம் செய்தால் அது போன்றவர்களிடம் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் காவல்துறை என்ற ஒன்றே இருக்க வேண்டும். மாறாக அச்சக்திகளுக்கு ஆதரவாக நின்று தோழர் கொளத்தூர் மணியைக் கைது செய்வதற்கா காவல்துறை? தமிழக அரசு மத்திய அரசின் பொம்மை அரசாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துத்துவ அமைப்புகள் தமக்கு மக்கள் செல்வாக்கு இல்லாத போதும்கூட, தங்களுடைய ஆட்சி நடப்பது போல் தாங்கள் வைத்ததே சட்டம் என்பதாக வலம் வருகின்றனர். காவல்துறை காவிப் படைக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கிறது.
 
மக்களிடம் உள்ள சாதிப் பெருமித உணர்ச்சியைத் தூண்டிவிட்டு சாதி வெறியூட்டி அதன்வழி தம் பக்கம் அணி திரட்டும் முயற்சியை ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார கும்பல் திட்டமிட்டு செய்து வருவது இது முதல் முறையல்ல. முன்பு தோழர் பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலை ஒட்டி எழுந்த சிக்கலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பங்களிப்புதான். அதிலும் 2012 இல் வெளிவந்த நாவலைத் தூசிதட்டி அது பற்றிய சர்ச்சையை 2015 இல் எழுப்பி சாதி வெறியர்களும் இந்துத்துவக் கூட்டமும் சேர்ந்து கொண்டு கருத்துரிமைக்கு சவால்விட்டது இன்னும் நம் நினைவைவிட்டு அகலவில்லை. பிற மாநிலங்களில் இந்துத்துவ பிற்போக்குப் பழமைவாதக் கோட்பாட்டை தோலுரித்த பன்சாரே, கல்புர்கி, தபோல்கர் போன்ற அறிவுத்துறையினரை சங் பரிவார் கும்பல் கொலை செய்து வெறி தீர்த்து கொள்வதும் நடந்து கொண்டிருக்கிறது.
 
தமிழ்நாட்டு உழைக்கும் மக்களுடைய நியாயமான கோரிக்கை எல்லாவற்றிலும் நேரெதிர் நிலையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம், சாதி ஆதிக்க உணர்வு பொதிந்துள்ள பிரச்சனைகளில் மட்டும் முன்னுக்கு வந்துநின்று எண்ணெய் ஊற்றி வளர்கிறது. இந்த அராஜவாதக் கூட்டத்திடம் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ, நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவர்களைக் குண்டர் சட்டத்தில் போட்டு சிறையிலடைக்கிறது. குண்டர்களைப் போல் நடந்து கொள்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு மாறாக அவர்களின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க பிறரைக் கைது செய்கி|ற காவல்துறை, அவர்களை ஊருக்குள் நுழையவும் தடைவிதிக்கிறது. இதில் இந்த அரசின் ஜனநாயகம் யாருக்கானது என்று தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறது.
 
ஆகஸ்ட் 22 ஆம் தேதி பா.ச.க. தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அவர் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று முற்போக்கு இயக்கங்கள் அறிவித்தால் அமித் ஷாவைக் கைதுசெய்து தமிழ்நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்குமா தமிழக காவல்துறை, இல்லை எதிர்க்கப் போவதாக அறிவித்த இயக்கத்தினரைக் கைது செய்து தடுத்து வைப்பார்களா?  எத்தனை நாட்கள் பல கிலோ மீட்டர் தொலைவில் நின்று கருப்புக் கொடி காட்டுமாறு நிர்பந்தித்து தமிழகத்திற்குள் வந்துபோகும் மக்கள் விரோத சக்திகளுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கும் தமிழக காவல்துறை! காவல் துறை ஆளும் வர்க்கத்தின் ஏவல் துறை என்பதற்கு இதுவும்கூட ஓர் எடுத்துக்காட்டாகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை சாதி ஆதிக்க, இந்துத்துவ வெறிக் கூட்டத்திற்கு கும்பிடு போட்டு வருவதை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சாதி உணர்வைத் தூண்டிவிட்டு அந்த சாதி மக்களுக்குள் நுழைந்து தமக்கான சமூக அடித்தளத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிடும் கனவில் இருக்கும் பா.ச.க. வையும் இளந்தமிழகம் இயக்கம் எச்சரிக்கிறது. சாதி ஆதிக்கச் சக்திகளுடன் கூட்டுப் போட்டுக் கொண்டு குந்தகம் விளைவிக்கும் இந்துத்துவக் கும்பலை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி அவர்களின் ஆபத்தான முயற்சியை முறியடித்து முன்னேற உறுதியேற்போம் என இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
 
தோழமையுடன்,
செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *