அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்!

நடப்பவை யாவும் கேலிக் கூத்து அல்ல, நாடாளுமன்ற சனநாயகத்தின் சட்டப் பூர்வமான நகைச்சுவைப் பக்கங்கள்..

மேகதாத்தின் குறுக்கே அணை, பிளஸ் 2 மதிப்பெண்படி மருத்துவ இடங்களை நிரப்புதல், கதிராமங்கலம், நெடுவாசல் மக்களின் உரிமைப் போராட்டம், நடுக்கடலில் அடித்து விரட்டப்படும் மீனவர்கள், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் என ‘அற்பமான’ விசயங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு அணிகள் இணைப்புக்காக நடந்த அடுத்ததடுத்த காட்சிப் படங்களால் அரசியல் சூழல் பரப்பரப்பாகிக் கிடக்கிறது. மக்களின் மாபெரும் ஜனநாயக உரிமை என்று பறைசாற்றப்படும் வாக்குகளைப் பெற்று சட்ட மன்ற உறுப்பினர்களாக ஆனவர்கள் கோமாளிகளாகவும் நாளுக்கொரு பேச்சு பேசியபடி ‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்கள்’ என்று நம்ப வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகின்றனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட இந்நடிகர்கள் நாடக மன்றத்தில் தங்கள் ஆடைகளை களைந்து வெவ்வேறு வேடம் பூண்டுக் கொள்ளவும் இடம். ராமனாய் நடித்தவன் ராவணன் ஆகலாம், இலட்சுமனன் வாலியாகலாம், ஏன் சீதையாய் நடித்தவர் கூனியாகலாம், கைகேயி சீதையாகலாம்.. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்களோ நாடகம் முடியும் வரை அதாவது ஐந்தாண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திவிட்டால் மீண்டும் ஒரு ஐந்தாண்டுகளுக்கு பார்வையாளர் ஆக வேண்டிய மாபெரும் ஜனநாயக உரிமையை மக்களின் எஜமானர்கள் வழங்கியுள்ளனர்.

.பி.எஸ். ஸின் நீதிக்கான ’தர்மயுத்தம்’ நிதி அமைச்சகம் கிடைத்தவுடன் முடிவுக்கு வந்துவிட்டது. சேர்வதற்கோ, பிரிவதற்கோ ஆசி வழங்குவதற்கு அம்மாவின் ஆன்மா இருக்கிறது. .பி.எஸ். தியானம் செய்துதான் தனது கலகக்கார வேடத்தை வெளிப்படுத்தினார். அம்மாவின் கல்லறை மீது சத்தியம் செய்து சிறைக்குப் போயுள்ளார் சின்ன அம்மா. அம்மாவின் ஆன்மாவின் ஆசிக்காக கல்லறையின் முன்பு எடப்பாடி விழுந்து எழுகிறார் டி.டி.வி. அணியில் உள்ள 19 பேரும் அம்மாவின் கல்லறையில் தியானத்தில் இருக்கிறார்கள். மோடி, மோடி என்று நாடெங்கும் உச்சாடனம் நடந்து கொண்டிருந்த வேளையில் மோடியா? லேடியா? என முழங்கிய ’அம்மா’ இறந்ததாக அறிவிக்கப்பட்ட அன்றே அவசர அவசரமாய் அவரது பக்த கேடிகளால் அடக்கம் செய்யப்பட்டு லேடிக்குப் பின் மோடி என காலில் விழுந்தனர். மோடியோ, லேடியோ பதவிக்காக விழ வேண்டிய கால்கள் எது? என்பது மட்டும்தான் இங்கே கேள்வி. அம்மாவின் அருளாசி யாருக்கென்று அவர்களுக்கு தெரியாது. ஆனால், யாருக்கும் விதிவிலக்கில்லை. கல்லறையில் வந்து விழுந்து கும்பிட்டாக வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரம்.

கேலிக்கூத்து நடக்கின்றது, பதவி பேரம் நடக்கின்றது, ஊழல், ஊழல் என்று மேடையைச் சுற்றிலும் அரிதாரம் பூசிய நடிகர்கள் குழு சத்தம் எழுப்பியபடி இருக்கின்றன. ஏனென்றால் அவர்கள் எவ்வளவுக்கு உரக்கப் பேசுகிறார்களோ அவ்வளவுக்கு அவர்கள் அடுத்த நாடக மன்றத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால் – மிக தொன்மையான வரலாறு கொண்ட, பாரம்பரியமிக்க கலை, இலக்கிய, பண்பாட்டுச் செழுமை கொண்ட, கீழடி சொல்லும் காலந்தொட்டு நகர நாகரிகம் கண்ட, இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் இருக்கும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலாவது இடத்தில் இருக்கும் ஏழரை கோடி மக்களைக் கொண்ட ஒரு மாநிலத்தை ஓ.பி.எஸ்., .பி.எஸ். டி.டி.வி. போன்ற கோமாளி நடிகர்கள் சேர்ந்து முட்டாளாக்கிவிட முடியுமா?

மனிதர்கள் தமது வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால், அவர்கள் விரும்பும்படி அவர்களால் அதை உருவாக்க முடிவதில்லை. தமக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட வரலாற்று நிலைமைகளில், கடந்த காலம் தம் முன் விரித்துள்ள சூழ்நிலைமைகளின் மீது வினையாற்றுவதன் மூலம்தான் தமது வரலாற்றை உருவாக்கிக் கொள்கின்றனர். அது போலவே, பிரிவும் இணைப்பும் என கேலிச் சித்திரங்களால் நிரப்பப்பட்ட இந்தக் காட்சிகளைத் தீர்மானித்த வரலாற்று நிலைமைகள் என்ன?

பளபளக்கும் பாத்திரத்தில் கமகமக்கும் பழைய கஞ்சி…

மகாராணி அப்பல்லோவில் அட்மிட் ஆனதொரு படலம். அங்கேயே மரித்தது முதல் அடுத்த படலம். மகாராணியின் ஆன்மாவை உள்ளிழுத்துக் கொண்டு சின்னம்மா அவதாரம் எடுத்தவர் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அடுத்த படலம். சிறையில் அடைக்கப்பட்ட சின்னம்மாவின் தளபதி திகாரில் பூட்டப்பட்டது துணை படலம். மகாராணியின் கால் பிடித்து நடந்து பழகியவர்கள் தில்லி சக்கரவர்த்தியின் கால் பிடித்து எழுந்த ‘தில்’ இருந்து ’நாயக’னின் தர்மயுத்தப் படலம் தொடங்கியது. அம்மா ஆன்மாவை உள்ளிழுத்துக் கொண்டதாக எண்ணிக் கொண்ட சின்னம்மாவால் நியமிக்கப்பட்ட சேவகனின் உடம்பில் ஓ.பி.எஸ். ஸின் ஆவி புகுந்து கொள்ள அவனும் தில்லியிடம் மண்டியிட்டது திருப்பம். சிறைமீண்ட தளபதி தோள்தட்டி திமிறி எழ சேவகர்களை கரம் கோர்க்கச் சொன்னார் சக்கரவர்த்தி. இணைந்த கைகளாய் பிக் பிரேக்கிங் நியூஸால் பரபரப்பூட்டி, மன பாரத்தை இறக்கி வைத்து முடி சூடியபடி காட்சிகள் தொடர்கின்றன.

அம்மா மீளக் கூடிய சிறைக்குப் போன அழுது கொண்டே பதவியேற்ற காட்சி, அம்மா மீள முடியாத கல்லறைக்குப் போன போது இறுக்கமாக பதவி ஏற்றக் காட்சி, அம்மாவின் ஆன்மாவை உள்வாங்கிய சின்னம்மா சிறையில் இருக்கும்போது சக்கரவர்த்தியின் கால்களை இறுகப் பிடித்தப்பிடி சிரித்த முகத்துடன் துணை முதல்வரென முடிசூட்டிய காட்சி..மக்களுக்குப் பிரமிப்பூட்டும் வகையில் நவரசத்தையும் காட்டி அதிரடி ஆக்சனுடன் நடிகர் திலகமாய் முன்னாள் தேநீர் கடைக்காரர். படலங்கள் ஒவ்வொன்றிலும் விலை பேசப்படும் பதவிகள். பதவிகள் கைமாறும் போதெல்லாம் மறை பொருளாய் தமிழக மக்களின் சொத்துக்களும் வளங்களும் கண்ணுக்கு தெரியாதபடி கைமாறிக் கொண்டே இருக்கின்றன.

மன்னர்கள் மரித்துவிட்டார்கள். அரண்மனைகள் அருங்காட்சியகங்கள் ஆகிவிட்டன. குறுநிலம், பேரரசு , சக்கரவர்த்தி போன்றவை எல்லாம் வரலாற்றுப் புத்தகத்தில் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றம் , சட்டமன்றம், ஆளுநர் மாளிகை, வாக்குச் சாவடிகள், தலைமைக் கழக அலுவலகங்கள், தேர்தல் அறிக்கைகள், நீதிமன்றங்கள், அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் ஆணையம் என அலங்கரிக்கப்பட்ட முதலாளித்துவ சனநாயகத்தின் பட்டு உடுப்புகள். அதனை அன்றாடம் புனிதமாக்கி வரும் நேருக்கு நேர், நேசன் வாண்ட்ஸ் டு நோ, சுட சுட விவாதங்கள், தலையங்கப் பக்கங்கள் என ஊடக பாராயணங்கள். ஆனால், மன்னர் கால நினைவுகள் சமூகத்தின் நினைவுகளில் இருந்து அகலவில்லை. மன்னர் கால கலாச்சாரம் மறையவில்லை. மன்னர் கால மறுபதிப்புகளே காட்சிக்கு காட்சி இடம் பெறுகின்றன. குறுநில மன்னர்கள், மாமன்னர்கள், சக்கரவர்த்திகள், அரண்மனை அமைச்சரவை, முடி சூட்டும் ஆச்சாரியர்கள், மகாராணிகள், அந்தப்புரத்து அழகிகள், ரத்த வாரிசுகள், ரத்த வாரிசுகளை பின்னுக்கு தள்ளி முன்னேறும் தூரத்து உறவுகள் என எல்லாக் கதாப்பாத்திரங்களுக்கும் இங்கேயும் இடமுண்டு. ஒரு ராஜகுரு( துக்ளக் சோ) மறைந்துவிட்டால் அவ்விடத்தில் அடுத்தவர்( குரு மூர்த்தி). இப்போதும் கூட வாரிசு இல்லாத குறைதான். சேக் அப்துல்லாவுக்கு இருந்தது போல் நேருவுக்கு இருந்தது போல், முலாயம் சிங்குக்கு இருப்பது போல், கருணாநிதிக்கு இருப்பது போல் மகாராணியோ மகனோ மகளோ என உடனடி ரத்த உறவொன்று ஜெயலலிதாவுக்கு இல்லாத குறைதான் நாடக மன்ற சனநாயகத்தின் நிர்வாணக் கோலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

1300 களில் குலசேகரப் பாண்டியனான தன் தந்தையைக் கொன்றுவிட்டு பதவிக்கு வந்தான் சுந்தர பாண்டியன். ஆனால், இதை ஏற்காத குலசேகரப் பாண்டியனின் அதிகாரப்பூர்வமற்ற மனைவியின் மகன் வீரபாண்டியன் சுந்தர பாண்டியனை விரட்டி ஓடவிட்டான். தில்லையை ஆண்டுவந்த அலாவுதீன் கில்ஃசியின் தளபதி மாலிக் கபூர் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வர அவனோடு கைக் கோர்த்தான் சுந்தர பாண்டியன். அது போல் இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் படையெடுத்து வந்த தில்லிக்கார மோடியுடன் கைக்கோர்த்து கொங்கு நாட்டு பழனிச்சாமிக்கு கிடுக்கிப்பிடி போட்டு அரியணையில் அரைபாதி பங்கு பெற்றது பாண்டிநாட்டு சிங்கம். பூசாரியோ(ஆளுநர்) அரசியின் தோழிக்கு முடிசூட்ட வேண்டும் என்ற தருணத்தில் முதுகைக் காட்டிக் கொண்டு போனதையும் கண்டோம். பதவிப் பங்குப்பிரிப்பு உற்சவத்திற்கு தம்பிமார்கள் சேர்ந்து வந்தபோது மந்திரங்களை உச்சாடனம் செய்து முடிசூட்டியதையும் கண்டோம். சக்கரவர்த்தியின் கட்டளைக்கு இணங்கப் பூசாரியின் கைங்கர்யங்கள் அமைகின்றன.

சட்டை புதிது. அழுக்கேறிய புண்களால் நிரம்பிய உடல் பழையது. பாத்திரம் புதிது, கஞ்சி பழையது. கட்டிடம் புதிது. ஆனால், செங்கோலும் ஓலைச் சுவடிகளும் வாளும் வேலும் வெட்டரிவாளும் பலிபீடங்களும் சிறைக் கொட்டடிகளும் பாதாள சிறைகளும் அரியணைகளும் கிரீடமும் அந்தப்புரத்து அழகிகளும் மகாராணியின் பணிப் பெண் தோழிகளும் மதக்குருமார்களும் தேரோட்டிகளும் அடிமைச் சேவகர்களும் தளபதிகளும் அன்னியப் படையெடுப்புகளும் தங்க நாணயங்களும் பொற்கிலிகளும் பரிசில்களும் அவைப்புலவர்களும் என பொருட்களும் மனிதர்களும் சிந்தனையும் செயல்களும் என யாவும் பழையது. முதலாளித்துவ அரசும் அதன் வடிவங்களும் புதிது. ஆனால், மன்னர் கால நினைவுகள், நிலவுடைமைப் பண்புகள் நிரம்பி ததும்பும் சமூக வளர்ச்சி நிலையின் காட்சிப் படிவங்களாக ‘பிக் பிரேக்கிங் நியூஸ்கள்’ வந்து போகின்றன. எழுபது ஆண்டுகாலமாக நாம் பார்த்து வரும் நாடகத்தின் கேலிக் கூத்தான படலங்கள் இவையென்றால் இதன் திரைக்கதை, வசனம், இயக்கம், மற்றும் ஒத்திகைகள் தொடங்கியது எங்கே?

நகைச்சுவைப் படலங்களுக்கான ஒத்திகை தொடங்கிய இடம் ராபின்சன் பூங்கா!

ஓரிரவில் எல்லாம் மாறிவிட்டதா? இந்த கோமாளிகள், பதவிப் பித்தர்கள், யாருடைய கால்களையாவது பிடிக்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த கொள்கையும் அற்றவர்கள் என்கிறார் பங்காளித் தளபதி. ஆனால், இவர்களோடு இத்தனை ஆண்டுகாலமாய் சண்டைப் போட்டு தோற்றுக் கொண்டு இருக்கிறார்கள் கொள்கை குன்றுகள்? கொள்கை குன்றுகள், சமூக நீதி வீரர்கள், பதவியை தோளில் போடும் துண்டென சொல்லி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்தவர்கள் திரை நடிகரிடமும் அவரது ஆன்மாவை உள்ளிழுத்துக் கொண்ட நடிகையிடமும் அவரது ஆன்மாவை உள்ளிழுத்துக் கொண்ட கோமாளிகளிடமும் சண்டைப் போட்டு மூச்சிறைத்தனர். ஓய்ந்து வயதாகிச் செயலற்றுப் போன மன்னரும் அவரைத் தொடர்ந்து பட்டம் சூட்டிக் கொள்ளத் துடிக்கும் வாரிசுத் தளபதியும் என பங்காளிச் சண்டை தலைமுறைத் தாண்டி நீண்டுக் கொண்டே போகிறது. ஆனாலும் இவர்கள் கொள்கை வீரம் பற்றிய கூப்பாடும் குடைப் பிடித்தலும் மட்டும் குறைந்தப் பாடில்லை. ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டது போல் வெவ்வேறானவைப் போல் முரண்பட்டது போல் தோற்றம் காட்டிக் கொண்டே ஒன்றாய் ஒன்றின் பலவாய் உருவான இவர்களின் ஆதிமூலம் மட்டும் புனிதமாக்கப்பட்ட பிம்பமாய் இன்றும் காட்சிப்படுத்தப்படுகிறது. இவர்கள்தான் ஓரிவில் கொள்கைகளை விற்று பதவிக்காக சல்யூட் போட்டவர்கள் என திட்டித் தீர்த்துவிட்டு இவர்களுக்கு முன்னாள் இருந்தவர்களின் புனிதத்தின் பெயரால் நாடக மன்றங்களின் புனிதத்தனம் புதுப்பிக்கப் படுகிறது. எனவே, கோமாளிகளின் , கோமகன்களின் தலைவனைத் தேடிச் சென்று அவனது அலங்கரிக்கப்பட்ட பிம்பங்களை உடைத்து ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கிப் பார்க்கச் சொல்கிறாள் வரலாற்றுக் கிழவி. இந்தக் கண்டிப்பான கிழவியின் கட்டளைக்கு கீழ்படியாவிட்டால் கிழவியின் கைத்தடி நம்மைப் பதம் பார்த்துவிடும்.

இன்றைய கோமாளிகளின் மறைந்த தலைவி அடிக்கடி புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆவியெழுப்புவார். அவரும் சரி இவர்களது பங்காளிகளும் சரி என எல்லோரும் சேர்ந்து அண்ணன்களுக்கும் அம்மாக்களுக்கும் எல்லாம் அண்ணனாக விளங்கியவரின் ஆவி எழுப்பி ஆனந்தக் கூத்தாடுவர். பதவி தோளில் போடும் துண்டென்று ஒரு நாள் சொல்வார். கொள்கையா? கட்சியா? என்றால் கட்சி என்பார் மறுநாள். அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு? என்பார் ஒரு நாள். மறுநாள் சுடுகாட்டுக்கு எல்லோரும் தான் போகப் போகிறார்கள். அதற்கு முன்பு நாங்கள் சட்டமன்றத்திற்கு போகிறோம் என்பார். காரணங்கள் உயிரோடு இருக்கின்றன. ஆனால், கோரிக்கையைக் கைவிடுகிறோம் என்பார். அந்த மடக்கி நறுக்கிய வாசகத்தைச் சொல்லி சொல்லி சிலாகித்து அவரது நேர்மையை இன்றும் கொண்டாடும் தம்பிமார்கள் எத்தனைப் பேர்!. வன்முறையின்றி வறுமையை ஒழிப்போம் என்று அரை வாக்கியத்தில் புரட்சியைப் புதைத்து வறுமையை வாழ வைக்கும் வார்த்தை ஜாலம் கொண்ட தமிழ்மகனொருவன் இன்றுவரை பிறக்கவில்லை தான்.

சேக் அப்துல்லா கொடைக்கானல் சிறையில் இருக்க, சுதந்திர இந்தியாவின் இராணுவத்தால் தெலங்கானாவில் உழவர் புரட்சியின் இரத்தம் பெருக்கெடுத்து ஓட, ’சோசலிச’ நேரு ஈ.எம்.எஸ் ஸின் ஆட்சியைக் கலைக்க என காட்சிகள் இத்தனையையும் பார்த்தபின்பும் பண்ணையாருக்கும் கூலிக்கும் மூலதனத்திற்கு உழைப்புக்கும் சமரசம் செய்து வைக்கும் வேலையைச் செய்ய மறுப்பதற்கு அவரொன்றும் அடிமுட்டாள் அல்ல, தமிழ்நாட்டின் சாதாரண அறிஞரல்ல, பேரறிஞர் என்று பட்டம் பெற்ற ஒரே நபர் அல்லவா? ஆனால், அவர் அடைந்தது அகால மரணம் என்றும் அவர் ஒரு நிறைவேறாத கனவென்று சொல்வாரும் உண்டிங்கே.

தம்பிமாருக்கு சேதி சொல்ல தருணம் பார்த்துக் காத்திருந்த அண்ணன், இந்திய சீனப் போரின் நேரம் பார்த்து திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டதாய் சொன்னார். திசம்பர் 5 அன்றே ஜெயலலிதா இறந்தாரென்று சொன்னால் மக்களாகிய நாம் நம்பித்தானே ஆக வேண்டும். ஏற்கெனவே செத்துப் போன திராவிட நாடு கோரிக்கை என்ற உடல் அப்போது அடக்கம் செய்யப்பட்டது. தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டோம் என அண்ணனின் தி.மு.. அறிவித்துவிட்டது. பங்காளி சண்டையில் சொத்துப் பிரித்த தம்பிமார் ஒருவர் அண்ணனின் வழியில் பத்தடி பாய்ந்து அண்ணனின் பெயரோடு ’அனைத்து இந்திய’ என்று முதல் எழுந்துகளைச் சேர்த்து வெளிப்படையாக்கினார் விலைபோன கதையை! அந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமெனும் நாடகப் பயிற்சிப் பட்டறையில் தவழ்ந்த குழந்தைகளின் கோமாளித்தனங்களைத் தான் பரப்பரப்புடன் பார்த்து வருகிறது தமிழகம்.

காங்கிரசு செய்யும் வேலையை நாங்கள் செய்துவிட்டுப் போகிறோம்?. தில்லியில் தலைமையகம் கொண்ட கட்சி எதற்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி செய்ய வேண்டும்?. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு விளையாட வேண்டும், அவ்வளவுதானே! அந்தக் கோட்டை நீங்களும் தாண்டக் கூடாது, நாங்களும் தாண்டமாட்டோம் என்ற ஒப்பந்தத்துடன் பிறப்பெடுத்தது தி.மு.. அண்ணன் கொள்கை உடுப்புகளோடு நிர்வாண உடல் மறைப்பானென்றால் பங்காளி தம்பியோ நிர்வாணத்தை நிர்வாணமாக காட்டும் வெள்ளாடை போட்டுவிடுவான். இந்தியாவிற்கு காங்கிரசு என்றால் தமிழகத்திற்கு அதன் இரட்டைப் பிள்ளைகளாக தி.மு.., .தி.மு.. ஒன்று நேருவின் வாரிசென்றால், மற்றொன்று வல்லபாய் படேலின் வாரிசு. குட்டிமுதலாளித்துவ வர்க்கத் தட்டில் இருந்து ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் பெருமுதலாளிகளாய் உருவெடுத்தது தி.மு.. தொழில் முதலாளிகளும் சூறையாடும் முதலாளிகளும் உண்டு. .தி.மு..வோ நகர்ப்புற, கிராமப்புற உதிரிகளின் சேர்க்கையாய் பொது சொத்தைக் கொள்ளையிட்டு ஏப்பம்விடும் சூறையாடும் கூட்டமாய் வளர்ந்தது. ஆக மொத்தத்தில் இரண்டும் ஆளும்வர்க்கத்தின் அங்கம்தான்.

உடல்கள் ஒன்றுதான் உடுப்புகள் வேறாகும். நடைமுறை ஒன்றுதான். கொள்கை கூப்பாடுகள் வெவ்வேறு. செயல் ஒன்றுதான். சொற்கள் வேறு வேறு. கட்டிடம் ஒன்றுதான், வண்ணங்கள் வேறுவேறு. காட்சிகள் ஒன்றுதான், நடிப்புத் திறன் வெவ்வேறு. வேர்கள் ஒன்றுதான். கிளைகள் வேறுவேறு. நடிகர்கள் வேறு வேறு. கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் என ஒத்திக்கை தொடங்கியது என்னவோ தி.மு.. தொடங்கிய ராபின்சன் பூங்காதான்…

ஆனால், நடிகர்களோ ஒருவரை ஒருவர் பார்த்து திட்டிக் கொள்கிறார்கள், பரிகசிக்கிறார்கள், கேலி பேசுகிறார்கள், துரோகிகள் என்கிறார்கள், கேலிக் கூத்து என்கிறார்கள், புனிதம் கெட்டது, குதிரை பேரம் என்கிறார்கள், கூவத்தூரையும் பெங்களூரையும் சொல்லி சொல்லி ’சனநாயகத்தை இவர்களெல்லாம் விலை பேசும் வேடிக்கையைப் பாருங்கள், பாருங்கள்’ என்று மக்களிடம் சொல்கிறார்கள். துயில் உரிக்கப்பட்ட திரெள்பதிகள் விம்மி அழ துச்சாதனனும் துரியோதனனும் சகுனியும் மாறிமாறி ’துரோகி , துரோகி’ என்று திட்டிக் கொள்ளும் காட்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

துரோகம், துரோகம் என்று குமுறி அழும் துரோகிகள் பாரீர்!

இங்கு சட்டத்தின் படி எல்லாம் சரி. ஆனால், நடிகர்களைப் பொருத்தவரை நடிக்கிறோம் என்பது தெரியாத படி நடிப்பது தான் சரி. அந்த விதியை மீறி நாடக மேடையிலேயே வெட்ட வெளிச்சத்திலேயே அரிதாரம் பூசுவது, ஆடையைக் கழற்றி மாட்டுவது, கதாபாத்திரங்களை மாற்றிக் கொள்வது குற்றம், கேலிக் குரியது. நிர்வாணம் பிரச்சனையில்லை, அது திரை மறைவில் இருக்கும் வரை. வாக்குச்சாவடிக்கு வந்து பக்தி சிரத்தையுடன் வாக்களித்து சனநாயகத்தை வாழ வைக்கும் பார்வையாளர்களுக்கு இவையெல்லாமே நாடகம் என்று புரிந்துவிட்டால் பேராபத்தாய் போய் விடுமே சனநாயகத்திற்கு?

நாடாளுமன்ற சனநாயக வானில் இப்போது ’துரோகி’ என்ற ஒலம் கேட்டப்படி இருக்கிறது. சசிகலாவை துரோகி என்கிறார் ஓ.பி.எஸ். .பி.எஸ்., .பி.எஸ் ஸையும் துரோகி என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். நிதிஷை துரோகி என்கிறார்கள் லாலுவும் சரத் யாதவும். மோடியையும் அமித் ஷாவையும் துரோகி என்கின்றனர் அவரால் பதவி விலக்கம் செய்யப்பட்ட பா... மூத்த தலைவர்கள். .தி.மு.. என்ற கட்சி இருந்தே ஆக வேண்டும் என்பதென்ன தமிழனின் தலையெழுத்தா? என குரல்கள் கேட்கின்றன. சனநாயக வழியில் ஆட்சியைப் பிடிப்போம், இந்த ஆட்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள் என ராஜகுமாரனும் இளவரசியும். ’சனநாயகம்’ பேசுகிறார்கள். வெவ்வேறு கூத்துப் பட்டறையைச் சேர்ந்தவர்களும் கைகொட்டி சிரிக்கிறார்கள். அம்மா ஆசையை அமாவாசை அன்று நிறைவேற்றிவிட்டார்கள் என ஒரு நடிகர் தன் பங்குக்கும் அம்மாவின் ஆவி எழுப்பி மகிழ்கிறார்.

துரோகக் கூச்சல் போடும் இந்த மாவீரர்கள் மக்களை ஒடுக்கும்போதும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கும் போதும் மட்டும்தான் தங்கள் வீரத்தைக் காட்டுகிறார்கள். பேராசிரியர் ஜெயராமன், வளர்மதி, திருமுருகன், டைசன், கதிராமங்கலம் மக்கள் எனப் பலரையும் சிறையில் அடைப்பதில் வீரம் காட்டியவர்கள் இவர்கள். வாளேந்தி வீரம் காட்டி யிருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் வெள்ளைக் கொடி ஏந்தி விடுகிறார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மேகதாட்டில் அணைக் கட்டுவதை எதிர்க்க, மீனவர் வாழ்வாதாரத்தைக் காக்க, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுக்க, அணு உலைப் பூங்காவை நிறுத்த, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை எதிர்க்க என்று வீரம் காட்டும் நேரத்தில் வாளையும் வேலையும் தூக்கி வீசிவிட்டு வெள்ளைக் கொடி ஏந்திய 23 ஆம் புலிகேசிகள்தான் துரோகக் கூச்சல் போட்டு வருகிறார்கள், தர்ம யுத்தம் நடத்துகிறார்கள்.

இவர்களின் துரோகக் கூச்சலைக் கேட்டப்படி கதிராமங்கலம் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்; சிறைக் கொட்டடியில் வளர்மதி கேட்டுக் கொண்டிருக்கிறார். அரசு ஏப்பம் விட்ட பென்சன் தொகை கேட்டுக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த கூச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இலட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் இந்த ஆரவாரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நெடுவாசலும் இடிந்தகரையும் துரோகக் கூச்சல்களையும் பட்டாபிசேகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரிட்சோவின் தாயார் பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் ஆன்மா கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளில் ஊற்றுப் பெருக்கெடுத்து உலகூட்டும் காவிரியைக் காணாத வறண்ட நிலங்கள் பதவிப் பேரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வாதாரம் சிதைந்து போன சிறு குறு தொழில் செய்வோரும், நள்ளிரவில் கருப்புக் கொடி காட்டிப் போராடிய சிறு குறு வணிகர்கள், மருத்துவ கனவைத் தொலைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் என எல்லோரும் இவர்களின் துரோகக் கூச்சலைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். யார், யாருக்கு துரோகம் செய்துள்ளார்கள்?

எழுபது ஆண்டு முடிந்துவிட்டது என நினைவு கூறி அடுத்த ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்போம் என துரோக வரலாற்றை தொடர்ந்து கொண்டிருக்கும் மக்களின் துரோகிகளின்தான் துரோகம், துரோகம் என்று உரக்கப் பேசுகிறார்கள். நடிகர்களின் குற்றமென்று நமக்குச் சொல்லிவிட்டு நாடக மன்றத்திற்குள் அடியெடுத்து வைத்து துரோகப் படலங்களைத் தொடர்வார்கள். நாடக மன்றத்தின் குற்றமென்று உழைக்கும் மக்கள் உணர்ந்துவிட்டால் நடிகர்கள் மட்டுமின்றி நாடகமன்றமும் கொளுத்தப்படும் அல்லவா. ஆனால், அதை நடிகர்களின் குற்றமாக்கி நாடக மன்றத்தையும் அதன் புனிதத்தையும் பாதுகாக்க துடிப்பவர்கள் பலர். அதற்கு காமராஜரின் ஆவி எழுப்புவோர், காந்தியின் ஆவி எழுப்புவோர், நேருவின் ஆவி எழுப்புவோர், மா.பொ.சியின் ஆவி எழுப்புவோர் என பலரகம் உண்டிங்கே. இன்னும் சிலர் பகத் சிங்கின் இரத்ததை தெளித்து இந்த நாடக் மன்றத்தின் புனிதத்தை மீட்கப் போராடுவர். பகத் சிங் குண்டு வீசிய நாடக மன்றத்திற்கு இன்று புனித மாக்கப்பட்டிருக்கும் நாடக மன்றத்திற்கும் ஆறு வித்தியாசங்களையாவது காட்டச் சொல்லுங்கள் இவர்களை.

ஆனாலும், இந்த நாடக மன்றம் புனிதக் குடியரசினுடையது. அதன் நடிகர்கள் தான் பிரச்சனை. அதன் சட்ட விதிகள் அல்ல. தெலங்கான உழவர்களின் இரத்தம் பெருக்கெடுத்தோடியதை கண்டபின்பும் இராணுவத்தின் நுகத்தடியில் துடிக்கும் காஷ்மீரைக் கண்டப் பின்பும், பிணக் குவியலாய் கிடக்கும் பழங்குடி மக்களின் உடல்களைக் கண்டப் பின்பும் வாக்குச்சாவடிகளில் உழைக்கும் மக்கள் வரம் கேட்டுப் பெற்றால் நாடக மன்றத்தி\ற்குள் தேவதைகள் சென்று சொர்க்கத்தைப் படைப்பார்கள் என்று வேதம் ஓதும் சிவப்பு அரிதாரம் பூசிய நடிகர் குழாமும் உண்டிங்கே..

அழுகிய உடலுக்கு எத்தனை முறை பன்னீரை தெளித்து புனித இரத்தத்தால் உயிரூட்டப் பார்த்தாலும் அது உயிர் பெறுமா? நாடாளுமன்ற முதலாளித்துவ சனநாயகம் அழுகி நாற்றெடுத்துக் கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகாலமாக அது மென்மேலும் சீரழிந்து கூவத்தூரிலும் பெங்களூரிலும் குதிரை பேரங்களிலும் இருந்து பாதுகாக்கப்படுகிறது. முஃப்தி மெக்பூபாவும் மாயாவதியும் மம்தா பானர்ஜியும் ஸ்டாலினும் நிதிஷும் லாலுவும் முலாயம் சிங்கும் சந்திரபாபு நாயுடுவும் எனப் பலரும் அழுகிய நாடக மன்றத்திற்கு உயிர் கொடுக்கும் கொள்கை மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவோ மேலும் மேலும் கேலிப் பொருளாகிறது. இங்கு கள்ள உறவுகள் ஒளியும் ஒலியுமாக மக்கள் முன்பு ஒலிபரப்பப்படுகிறது. இனி மறைப்பதற்கு எதுவும் இல்லை, எல்லாம் பச்சை உண்மைகளாய் திரை விலகிக் கொண்டிருக்கிறது. புதிய புதிய வடிவத்தில் ஆடை அலங்காரத்தில் வரிசைக் கட்டி வரும் நடிகர்களை மென்மேலும் எச்சரிக்கையாய் விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உழைக்கும் மக்கள். பார்வையாளர் பதவிக் கொடுக்கப்பட்டு எல்லோரும் இந்நாட்டு மன்னர்களென்ற மயக்கம் தெளிந்து கொண்டிருக்கிறது.

முதலாளித்துவ சனநாயகத்தின் எல்லைக் கோடுகள் பிக் பிரேக்கிங் நியூஸில் பளிச்சென தெரியத் தொடங்கிவிட்டன. சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வைபோகமாய் தேர்தல் காலமும் மக்கள் தம்மை சுரண்டு வதற்கு தரும் லைசென்ஸாக வாக்குகளும் நாடக மன்றங்களாய் சட்டமன்ற நாடாளுமன்றமும் காட்சி தருவதை தூரத்து புள்ளிப் போல் உழைக்கும் மக்கள் கண்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தீப்பந்தங்களோடு நாடக மன்றத்தின் கூரையை நோக்கி மக்களின் கரங்கள் நீளும் காலம் நம்முடைய மனத் திரையில் பிக் பிரேக்கிங் நியூஸாக தெரிகிறது!

தோழர் செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *