தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள்! – எழுச்சியோடு கடைபிடிக்கப்பட்டது

                    
(இளந்தமிழகம் இயக்கம் சார்பாக சென்னையிலும், திருச்சியிலும் தோழர்கள் முழக்கமிட்டு, தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.)
இவ்வாண்டு பெரியாரின் பிறந்த நாள் நீட் எதிர்ப்பு போராட்ட அலையோடு சேர்ந்து வந்தது. நீட் என்பது சமூக நீதி மறுப்பு, மாநில உரிமைப் பறிப்பு ஆகியவற்றின் குறியீடாகும். சமூக நீதி மற்றும் தனித் தமிழ்நாடு பற்றியும் தன் வாழ்நாள் முழுவதும் பேசியும் எழுதியும் போராட்டங்கள் நடத்தியும் வந்தவர் பெரியார். நேற்று வரை பிரிட்டிஷாருக்கு  அடிமையாக இருந்தோம். இனி தில்லிக்கு அடிமையாக இருக்கப் போகிறோம். எனவே இந்த சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை  என்றார். இந்தி மொழி திணிப்புப் போராட்டத்தின் போது தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் முழங்கினார். இந்திய விடுதலைக்கு முன்பும் சரி பின்பும் சரி பெரியார் இந்திய ஏற்பாட்டை ஏற்கவில்லை.
                                                                
(இளந்தமிழகம் இயக்கம் அங்கமாக உள்ள “நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” உடன் மதுரையில் தோழர்கள் முழக்கமிட்டு, தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.)
தில்லி அரசுக்கு நாம் அடிமையாக இருக்கிறோம் என்பது இப்போது அன்றாட செய்தியாகிவிட்டது. தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் ஏதாவது ஓர் அறிவிப்பு நாள்தோறும் வந்துக் கொண்டே இருக்கிறது. ஒரே தேசம், ஒரே  வரி, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம் என திட்டமிட்ட  வகையில் மைய அரசு செயல்பட்டு வருகிறது. உலகமய,, தாராளமயத்தின் தேவையில் இருந்து இந்தியமயமாக்கல் நடைபெற்று வருகிறது. தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை என்பது பற்றி தில்லி அரசு கொஞ்சம்கூட கவலைப் படுவதில்லை. இந்தப் பின்னணியில் இருந்துதான் சல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள், அனிதா மரணத்திற்கு நீதி கோரும் நீட் எதிர்ப்பு போராட்டம் என தமிழகம் போராட்டக் களமாக விளங்குகிறது. எதையும் பொருட்படுத்தாத மத்திய அரசு திணிப்பு வேலைகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இனியும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தால் நாம் இழப்பதற்கு எதுவுமே இல்லாத நாள் விரைவில் வந்துவிடும். எனவே, பா.ச.க. அரசு உருவாக்க நினைக்கும் புதிய இந்தியாவா? அல்லது சாதி ஒழிப்பையும் பொருளாதார சமத்துவத்தையும் இலக்காக கொண்ட புதிய தமிழகமா? என்ற கேள்வி நம் முன் விரிகிறது. எனவே, நம்மைப் பொருத்தவரை  பெரியாரின் இவ்வாண்டுப் பிறந்த நாள் என்பது தில்லியின் அரச வன்முறைக்கு எதிரானப் போர் பிரகடன நாள். அடுத்து அடுத்து வரும் நாட்களில் நம்முடைய போராட்டங்கள் மேலும் மேலும் வலுப்பெறும்.
                                               
(இளந்தமிழகம் இயக்கம் சார்பாக கோவையில் தோழர்கள் முழக்கமிட்டு, தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.)
சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கக் கூடிய புதுப் பொலிவு கொண்ட தமிழகத்தை உருவாக்கும் பணிக்கு ஆயத்தமாவோம். தந்தைப் பெரியாருக்கு வீர வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *