கந்துவட்டி தொல்லையிலிருந்து ஏழை,எளிய நடுத்தர மக்களை மீட்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்து(27), அவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதிசரண்யா(5), அட்சயபரணிகா(2) ஆகியோர் கந்துவட்டி கொடுமை தாளாமல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமக்குத் தாமே தீவைத்து கொண்டனர். அந்த காணொளிகளும் புகைப்படங்களும் தமிழ்நாட்டையே உறைய வைத்து, ஆழ்த்த சோகத்தில் ஆழ்த்தியது. தீக்குளித்த நால்வரும் உயிரிழந்துவிட்டனர்.

இந்த உலகில் வாழ்வதை விட, மழலை மொழி கூட மாறிடாத, தாம் பெற்றெடுத்த மக்களையும் தங்களையும் தீக்கிறையாக்கி சாவதே மேல் என்று தீர்மானிக்கும் அளவிற்கு இசக்கிமுத்துவின் குடும்பத்தை கந்துவட்டி கொடுமை தள்ளியுள்ளது. இசக்கிமுத்து குடும்பத்தின் இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்க்கே தலைகுனிவு. தொடர்ந்து கந்துவட்டி கொடுமை குறித்து புகார்கொடுத்தும், கந்துவட்டி காரர்களுடன் கைகோர்த்துக்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இசக்கிமுத்துவின் குடும்பத்தையே தீக்கிரையாக்கியுள்ளது. கந்துவட்டி கொடுமையின் தீவிரத்தை உணர்வதற்கு இதைவிட ஒரு பெரிய சம்பவம் தேவையில்லை. ஆனால், அரசு, காவல்துறை விடுக்கும் அறிக்கைகள் மேலோட்டமானவையாக உள்ளன. தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முதல்வர் காட்டும் முனைப்பில் ஒருவீதம் கூட கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் இல்லை. ஏனென்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்துள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் பணம் படைத்தோரும் காவல்துறையும் கூட்டுச் சேர்ந்துதான் கந்துவட்டித் தொழில் கொடிக் கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. சாதி, அரசியல், காவல்துறையின் கூட்டுத் தொழிலாக கந்துவட்டி தொழில் இருந்து வருகிறது.

சிறு தொழில் செய்வோர், சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள் தமது தொழிலுக்காக தனியாரிடம் கடன் வாங்குகின்றனர். இதற்கு வெளியில் இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற அடிப்படை செலவுகளுக்கு திடீர் செலவுகளுக்கும் கடன் வாங்குகின்றனர். தேசிய, கூட்டுறவு வங்கிகளோ, முந்த்ரா, கிஷோ, நீட்ஸ், தருண் போன்று பலப் பெயரில் அறிவித்துள்ள திட்டங்கள் மக்களுக்குப் பயன் தரவில்லை, கடன் பெறுவதற்கு இலகுவாகவில்லை என்பது நாடெங்கும் செழித்து விளங்கும் கந்து வட்டித் தொழிலும் அதனால் பாதிப்படைந்து நடந்து வரும் தற்கொலை சம்பவங்களுமே சாட்சி. வங்கிக் கடன்கள் பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்கப்படுகிறது. ஆனால், பெருந்திரளாய் இருக்கும் மக்களுக்கு வங்கிகளின் கதவுகள் அடைக்கப்படுகிறது. அப்படியும் கடன்பெறுபவர்கள் நிலம், நகை, வீட்டுப் பத்திரங்களை அடகு வைத்து பெறுகின்றனர். விவசாயக் கடன், கல்விக் கடன் செலுத்த முடியாதோர் கழுத்தை நெரித்து கந்து வட்டிக்காரர்கள் போலவே அரசு வங்கிகளும் வசூல் செய்ய முயல்கின்றன.

சமீபத்தில், தஞ்சாவூரில் பாலன் என்ற விவசாயியை கடனை திரும்ப செலுத்தக்கோரி காவல்துறையினர் தாக்கியதும், மதுரையை சேர்ந்த லெனின் என்ற மாணவர் கல்விக்கடனை திரும்ப செலுத்தச் சொல்லி வங்கி ஊழியர்கள் கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களையும் நாம் மறக்கவில்லை. ஆனால் பல லட்சம் கோடிகளை கடனாக பெற்றுள்ள பெரு முதலாளிகள் கடனை திரும்பச் செலுத்தாமல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உல்லாசமாக வாழ்த்து வருகின்றனர். மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு மட்டும் பெருமுதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளளது. ஆக, இந்த அரசும், அதன் பொதுத்துறை வங்கிகளும் முதலாளிகளுக்கு சேவை செய்யும் இயந்திரங்களாகவே செயல்படுகின்றனவே ஒழிய எளிய மக்களுக்கானதாக இல்லை.  

கந்துவட்டி கொடுமையை ஒழிக்க தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் என்ற சட்டத்தை தமிழக அரசு கடந்த 2003ம் ஆண்டு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் இதுவரை எதனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? அவர்களின் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

ஏதும் உடைமை இல்லாதவர்கள் தமது கிட்னியை விற்று கடனை அடைக்க முயலும் அவலம் முதலாளித்து

மீட்டர் வட்டி, ரன் வட்டி, சூப்பர் வட்டி, ஜெட் வட்டி, மடக்கு வட்டி, நாள் கடன், வாரக் கடன் எனப் பலப்பெயர்களில் நாடறிந்த ரகசியமாக அதீத வட்டி வசூல் தடை சட்டம் மீறப்படுகிறது. தமக்கு தேவையான பொருளாதார சீர்த்திருத்தங்களை மக்களிடம் விளக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒரு சிறு துளியளவு கூட மக்களுக்கான சட்டங்களைப் பற்றி கொண்டு செல்வதற்கு அரசு முயல்வதில்லை என்பதையே இந்நிலைமை உணர்த்துகிறது.

நாடு வளர்கிறது என்றும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி சொல்லிக் கொள்கிறார். ஒருபுறம் விவசாயிகள், வேலைக் கிடைக்காத பட்டம் பெற்ற இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறுகுறு தொழில் செய்வோர் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர். பணமதிப்பு இழக்க நடவடிக்கையும் ஜி.எஸ்.டியும், சிறுகுறு தொழிலையும், சிறு வணிகத்தையும், கூலித் தொழிலாளர்களையும் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதற்கு இந்த தற்கொலைகளின் புள்ளிவிவரங்களைக் கணக்கில் கொள்வதா? அரசு தரும் வளர்ச்சிக்கான புள்ளி விவரங்களைக் கணக்கில் கொள்வதா? என நம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடன் கட்ட முடியாமல் நொடிந்து போகும் நிலைக்கு அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கையே காரணம்.

தமக்கென ஏதும் இல்லாத தொழிலாளர்கள் தமது கிட்னியை விற்று கடனைக் கட்டும் அவலம் நடந்து வருகிறது. சமகாலத்தின் ஏழை, எளியோரின் அவல நிலைக்கு இதைவிட ஓர் இரத்த சாட்சி வேறென்ன வேண்டும். இல்லாதார், இருப்பவர் என்ற ஏற்றத்தாழ்வான நிலை ஒழிய வேண்டும் என்ற நீதியின்பால் பட்ட உணர்வு நம் மக்களிடம் மேலெழ வேண்டும்.

கந்துக் கொடுமையில் இருந்து மக்களைக் காக்க பின்வரும் கோரிக்கைகளை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்துவதும் தமது மக்கள் விரோதக் கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்று இளந்தமிழகம் இயக்கத்தின் கோருகிறது.

தமிழக அரசே,

* இசக்கிமுத்துவின் குடும்பத்தை தற்கொலை செய்ய வைத்த கந்துவட்டிக்காரகள் மட்டுமின்றி அவர்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம்(2003)ன் கீழ் நடவடிக்கை எடு!

* அரசு வங்கிகளின் மூலமாக சிறு குறு தொழில் செய்வோர், வியாபாரிகள், விவசாயிகள் தொழிலாளிகளுக்கு கடன் தருவதை உறுதியாக நடைமுறைப்படுத்து! இத்திட்டங்கள் பற்றி மக்களுக்கு பெரிய அளவிலான விழிப்புணர்வை  ஏற்படுத்து!

*தமிழ்நாடு அதீத வட்டி வசூல் சட்டத்தின் கூறுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தொலைக்காட்சி, செய்தித்தாள், திரையரங்கள் வாயிலாக விளம்பரங்களை செய்திடுக!

*மேற்படி சட்டத்தை அமல்படுத்த இதெற்கென்ற தனித்த ஆணையம் ஒன்றை அமைத்து காவல்துறை, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்கள் இவ்வாணையத்தை தொடர்பு கொள்ள வழிவகை செய்க!

*சிறு குறு தொழில் செய்வோர், சிறு குறு வியாரிகள், சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு எதிரானப் பெருமுதலாளிய வளர்ச்சிக் கொள்கையை உடனடியாக கைவிடு!

* மத்திய மாநில அரசுகளே, பெருமுதலாளிகளிடம் நிலுவையில் உள்ள கடனை வசூல் செய்!

தோழமையுடன்,

செந்தில்,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *