முதலுதவி சிகிச்சை இல்லாததால் அலுவலகத்தில் இறந்த டி.சி.எஸ் ஊழியர்

டி.சி.எஸ் நிறுவனத்தில் டெலிவரி மேனேஜராக பணியாற்றி வந்த மோசஸ் ரஞ்சன் ராஜ் (41), கடந்த 27.11.2017 அன்று இரவு சுமார் 11 மணியளவில் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, மாரடைப்பால் மரணமடைந்தது ஒட்டுமொத்த டிசிஎஸ் ஊழியர்களையும், ஐ.டி ஊழியர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அன்றைய தினம், மோசஸ் தன்னுடைய புராஜெக்ட் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள குழுவினருடன் கூட்டழைப்பில் உரையாடிக் கொண்டிருந்தார். உரையாடலின் நடுவே திடீரென மோசஸ் பேசாமல் போனதால் குழப்பமடைந்த அமெரிக்க குழுவினர், மோசசின் புராஜெக்ட்டில் பணியாற்றிவரும் மற்றொரு ஊழியரை தொடர்புகொண்டு அதை தெரிவித்துள்ளனர். உடனே மோசசின் இருக்கைக்கு வந்த அந்த ஊழியர், மோசஸ் வலிப்பு வந்து தரையில் விழுந்து துடித்துக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார். செய்வது அறியாமல் திகைத்துப்போன அந்த ஊழியர் வலிப்பை நிறுத்துவதற்கு தன்னால் முயன்றதை செய்துள்ளார். உடனே அந்த தளத்தில் இருந்த செக்யூரிட்டிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மோசசுக்கு வலிப்பு நின்று அவர் மயக்கநிலையில் இருந்துள்ளார். செக்யூரிட்டி ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் மோசசுக்கு இரண்டாவது முறை வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இவையெல்லாம் நடந்து 15 நிமிடத்திற்கு பிறகு அங்கு வந்த ஆம்புலன்சில் செக்யூரிட்டிகள் உதவியுடன் மோசஸ் ஏற்றப்பட்டுள்ளார். மோசசுக்கு உடனடியாக தேவையான முதல் உதவியை கொடுக்கவோ, அவருடைய நாடித்துடிப்பை பார்க்கவோ, ரத்த அழுத்தத்தை அளக்கவோ அந்த ஆம்புலன்சில் மருத்துவரோ அல்லது செவிலியரோ இல்லை. மோசசுடன் மருத்துவமனைக்கு உடன் செல்வதற்கும் யாரும் இல்லாததால், அவரோடு பணியாற்றிய அந்த ஊழியர் ஆம்புலன்சில் சென்றுள்ளார். ஆம்புலன்ஸ் செட்டி நாடு மருத்துவமனையை அடைவதற்கு முன்னரே, மோசசின் உயிர் பிரிந்துள்ளது. இதை அந்த மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

நமது நாட்டிற்கு மிகப்பெரிய அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிற, நாட்டின் ஏற்றுமதியில் 25% இருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலையளிக்கும் ஒரு துறையாக ஐடி துறை இருக்கிறது. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பகல் நேரத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களும், இரவு நேரத்தில் சுமார் 5000 ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இரவு பகல் பாராமல் வேலை செய்யும் ஐ.டி ஊழியர்கள் வேலை பளுவின் காரணமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பல சமயங்களில் உரிய நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல், போதிய தூக்கமின்றி பெரும்பாலான ஐ.டி ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் தீவிர மன அழுத்தமும், சிறு வயதிலேயே மாரடைப்பு போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகிக்கொண்டு இருக்கின்றனர். தொழிலாளர் சட்டங்களில் இருந்து விலக்கு பெற்று 24/7 தொழிலாளர்களை வேலை வாங்கும் உரிமையை அரசிடம் பெற்று இருக்கும் ஐ.டி நிறுவனங்கள், தொழிலாளர்களின் உயிரை பாதுகாக்கும் மருத்துவ உதவி சேவையை 24/7 வைக்காதது ஏன்? இதை தொழிலாளர் நலத்துறை கண்காணிக்காதது ஏன்? மோசஸ் ரஞ்சன் ராஜ் முதல் முறை வலிப்பு வந்த உடனேயே மருத்துவ உதவி வழங்கப்பட்டு இருந்தால், இன்று மோசசை நம்மோடு இருந்து இருப்பார். இரவும்,பகலும் உழைத்து தங்கள் வாழ்வின் அர்த்தமாக இருக்கக்கூடிய குடும்ப வாழ்க்கை,உடல் நலன் ஆகியவற்றை நிறுவனங்களின் லாப நோக்கத்திற்க்காக சமரசம் செய்துகொள்கிற லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது நிறுவனங்கள் கொண்டிருக்கிற அக்கறை இதுதானா?

சமீபத்தில் இன்ஃபோசிஸ்,மஹேந்திரா சிட்டி, அலுவலகத்தில் ஓய்வு அறையில் இறந்து கிடந்த இளையராசாவும் வலிப்பும்,மாரடைப்பும் வந்து இறந்ததாகவே அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது. ஐ.டி துறையில் பணி காரணமாக ஏற்படும் உடல் நலனில் ஏற்படுத்தும் பிரச்சினைகள் (Occupational Health Hazards) பற்றி எந்த ஒரு ஆய்வும் அதன் அடிப்படையில் தொழிலாளர்களை பாதுகாக்கும் எந்த தீர்வுகளும் இதுவரையில் நமது அரசுகளால் நடைமுறைப்படுத்தப் படவில்லை.

ஆகவே, அவசரகாலத்தில் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சையை அளிப்பதற்கான மருத்துவர் மற்றும் உரிய மருத்துவ உபகரணங்களை கொண்ட மருத்துவ சேவை மையத்தை வைத்திருக்காமல் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து மிகவும் அலட்சியமாக இருந்த டி.சி.எஸ் நிறுவனத்தை ஃபைட் தொழிற்சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஃபைட் தொழிற்சங்கம் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

தமிழக அரசே,

வலிப்பு,மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய ஊழியர் மோசஸ் ரஞ்சன் ராஜ் க்கு உரிய நேரத்தில் முதலுதவி அளிக்கத் தவறி, அவர் உயிரிழக்க காரணமான டி.சி.எஸ் நிர்வாகத்தின் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடு

டி.சி.எஸ் நிர்வாகமே,

பணியின்போது மோசஸ் உயிரிழந்துள்ளார் என்றவகையில், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கு

தொழிலாளர் ஆணையர் அவர்களே,

பணியிடத்தில் போதிய முதலுதவி வசதியில்லாமல் இறந்து போன மோசஸ் ரஞ்சன் ராஜ் அவர்களின் இறப்பின் மீதான முழுமையான விசாரணையை உடனடியாக நடத்துக.

பணியிடங்களில் நடைபெறும் தொழிலாளர் நலன் சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் நிறுவனங்களை பொறுப்பாக்குக

8 மணி நேரம் உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்களை ஐ.டி நிறுவனங்கள் முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்க

ஐ.டி நிறுவனங்களே,

24/7 இயங்கக்கூடிய இலவச மருத்துவ சேவை மையத்தை ஐ.டி நிறுவனங்கள் பணியிடங்களில் ஏற்படுத்த வேண்டும்.

 

Parimala
President,
Forum for IT Employees (F.I.T.E)
TamilNadu
9840713315

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *