‘கரை சேர்கின்ற மீனவர்தம் உயிரற்ற உடல்கள், கணக்கைக் குறைத்துக் காட்டுவதா மத்திய மாநில அரசுகள்?’ – இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்.

ஓக்கி புயல் கன்னியாக்குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைப் பாதித்த நவம்பர் 29 ஆம் தேதி பின்னிரவு தொடங்கி இந்த நிமிடம் வரை நான்கு இரவுகள், நான்கு பகல்கள் முடிந்துவிட்டன. கடலுக்கு சென்ற மீனவர்களில் சென்றவர்கள் எத்தனை பேர், கரை திரும்பியவர்கள், கரை திரும்பாதவர்கள் எத்தனை  பேர் என்பதில் திட்டமான கணக்குகள் வெளிவரவில்லை. மாறாக 94 பேர் மட்டும் காணவில்லை என்கிறார் முதல்வர். 2000 பேர் கரை திரும்பவில்லை என்கின்றனர் கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள். இதுவரை புத்தன்துறையைச் சேர்ந்த ஜெர்மியாஸ், சூசைய்யா ஆகிய இருவரின் உடல்கள் மட்டும் வந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வருகின்றன. ஆனால், களத்தில் இருந்து பெறப்படும் செய்தியோ 25 பேரின் உடல்கள் கரை திரும்பியுள்ளன என்பதாகும். ஊடகங்களைக் கட்டுப்படுத்தி இறந்தவர்கள், கரை திரும்பாதவர்களின் கணக்கை குறைத்துக் காட்டும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது. பேரிடர் தயாரிப்பு நிலையும் மேலாண்மையும் எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே இந்த பொய்க் கணக்குகளாகும்.

20 ஆம் தேதி உருவான ஓக்கி புயலின் போக்கை கணித்துச் சொல்லி முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டிய அரசு 29 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒரு புயல் தாக்க இருப்பதாக மக்களுக்கு தகவல் சொல்லுமானால், எங்கே, யாரால், நிகழ்ந்த தவறு இது? என்பதை வெளிப்படையாக அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் அதுவும் 45-55 கி.மீ. வேகத்தில் புயல் வீசும் என்றார்கள். ஆனால், ஓக்கிப் புயல் 100 – 110 கி.மீ. வேகத்தில் வீசியது! இயற்கை சீற்றத்தைக் கணிக்கவே முடியவில்லை என்றால் அதில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்ள முடியும்?

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர் 30-45 நாட்களுக்குப் பிறகே கரை திரும்புவர். இந்நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றோருக்கு தகவல் தந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், நிலத்தில் இருப்பவர்களுக்கு தகவல் நவம்பர் 29 தேதி மதியம் 2 மணிக்குதான் கொடுக்க முடிந்ததென்றால் ஆழ்கடலில் இருந்தவர்களுக்கு ஓக்கிப் புயல்தான் சேதி கொண்டுப் போய் இருக்கும். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்களைத் தொடர்பு கொள்வதற்கு எந்த தொழில்நுட்ப வசதியையும் அரசு ஏற்படுத்தி வைக்கவில்லை. நீண்ட காலமாக அவர்கள் கோரிவரும் தொலைத் தொடர்பு சாதன வசதிகளைப் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்துவருகிறது. யாருடைய பாதுகாப்பு முக்கியமானது? சூறைக்காற்றுக்கு இடையே சென்று மீன் பிடித்து வந்து 50,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மீனவ மக்களின் பாதுகாப்பைவிட மேலானப் பாதுகாப்பு வேறென்ன என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் விளக்க வேண்டும்.

2005 ஆம் இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டம் என்பது காகிதத்தில் இருக்கும் புலியா? ஜி.எஸ்.டி., பண மதிப்பிழகம் போன்ற மக்கள் விரோத கொள்கைகளை திணிப்பதில் காட்டும் வேகத்தையும் அக்கறையையும் மக்களைப் பாதுகாக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்த அரசு காட்டுவதில்லை என்பதைதான் கரையொதுங்கும் அடையாளம் தெரியாத உடல்கள் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்றன.

இன்னும் 48 மணி நேரத்தில் மின் விநியோகம் சீர் செய்யப்படும் என்கிறார் முதல்வர். ஏற்கெனவே இரண்டு 48 மணி நேரங்கள் முடிந்துவிட்டன. தானே புயல் வந்த போது கடலூரில் எத்தனை மின் கம்பங்கள் விழுந்தன? எத்தனை மணி நேரத்தில் அங்கு மின் விநியோகம் மீள்கட்டமைக்கப்பட்டது? இப்போது அதைவிட குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புதான். ஆனாலும் ஏன் இவ்வளவு தாமதம். குமரி மாவட்டம் எல்லையோர, கடற்கரை, கிராமத்தன்மை வாய்ந்த மாவட்டம் என்பதாலா? என்பதை முதல்வர்தான் விளக்க வேண்டும்.

12 பேர் அடங்கிய உயர் அதிகாரிகள் குழுவொன்று செவ்வாய்கிழமை(திசம்பர் 5) முதல் கன்னியாகுமரியில் மீட்புப் பணியில் ஈடுபடுவர் என்று திங்கட் கிழமை( திசம்பர் 4) அன்று அறிவிக்கிறார் முதல்வர். ஓக்கி புயல் எப்போது வந்தது? இதுதான் புயல் வேக மீட்புப் பணியா?

”2604 மீனவர்கள் மீட்பு” என்று அரசு அறிவிக்கிறதே? கப்பல்கள் மூலமாகவா, விமானம் மூலமாகவா? எப்படி மீட்கப்பட்டார்கள்?எத்தனை புகைப்படங்கள், காணொளிகள் நீங்கள் மீட்டுக்கொண்டு வந்ததைக் காட்டியுள்ளன? குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, லட்சத் தீவு என புயலில் சிக்கித் தப்பித்து தானாய் கரையொதுங்கிய மீனவர்களின் எண்ணிக்கையை கேட்டுக் கொண்டு அதை ஒப்புவிக்கும் பொழுது ‘தாம் மீட்டதாக சொல்லுவது’ எவ்வளவு பெரிய மோசடித்தனம்?

தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரள அமைச்சர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதை ஊடகங்கள் வழியாக தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஆளுங் கட்சியின் அலட்சியத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும்.

’காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரத நாடு’ என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் காவிக் கூட்டத்தின் வெகுசன தலைவரும் இந்நாட்டின் பிரதமருமான மோடியோ குஜராத் தேர்தல் களத்தில் கண்ணீர் நாடகங்களை நிகழ்த்தி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். ஆர்.கே.நகர். தேர்தலில் மோடியின் அடிவருடி கட்சியாகிப் போன அ.தி.மு.க. பரபரப்பாக இருக்கிறது. குமரி மாவட்ட மக்களோ பதைப்பதைப்புடன் உறவுகள் வருவார்களா? மாட்டார்களா? என்று கலங்கி நிற்கின்றனர்.

மூலதனம் குவியும் நகரம் என்றால் பதறிக் கொண்டு மீட்புப் பணியைத் துரிதப்படுத்தும் அரசு கிராமப்புறங்கள், கடலோரப் பகுதிகள் என்றால் அலட்சியம் காட்டுகின்றன. அங்கு இருக்கும் விவசாயிகளும், மீனவர்களும் இந்நாட்டின் ‘சாதாரணமான’ வர்களாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்களின் உயிர்களும் உடைமைகளூம் மலிவானதாகிவிடுகின்றன.  பெருமுதலாளிகளின் கையில் இருக்கும் மூலதனம் நகரங்களில் குவிவதால் அதற்கு உருவாகும் தடைக்கற்களை அகற்றத்தான் போர்க்கால, புயல்வேக மீட்புப் பணி ஏற்பாடுகளை வைத்திருக்கிறது அரசு. ஆளும் வர்க்கத்திற்கே பேரிடர் மீட்பு, பாதுகாப்பு என்ற உண்மையை ஓக்கிப் புயலின் போதும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது அரசு. ஓக்கிப் புயலின் போதும் அதற்குப் பின்னும் இந்த அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு ஏற்படுத்தும் மனப்பதிவுகள் மீண்டும் ஒருநாள் பெரும்போராட்டப் புயலாக உருப்பெற்று உள்நாட்டில் சுழன்றடிக்கும்போது ஆட்சி, அதிகாரப் பீடங்கள் தூக்கி எறியப்படும் என்பதை  காலம் உணர்த்தும்.

தமிழக அரசுப் பொய்ப் பித்தலாட்டங்களைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்காமல் ஆக்கப் பூர்வமான பணிகளை முடுக்கிவிட வேண்டும். கடந்த 75 ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டம் இத்தகையதோரழிவுக்கு உள்ளாகவில்லை. இதை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் தமிழக அரசு.

குஜராத், மகாராஷ்டிரம், கேரளக் கரையோரங்களில் ஒதுங்கிய மீனவர்களின் விவரங்களைத் திரட்டி மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும். அந்த விவரங்கள் தமிழக மக்கள் அனைவரின் பார்வைக்கும் வரும் வகையில் அரசு வலைதளங்களில் வெளியிட வேண்டும். இன்னும் ஆளில்லா தீவுகளில் யாரேனும் ஒதுங்கி இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிய முயல வேண்டும்.

எவ்வளவு பேர் கடலுக்குப் போனார்கள், எத்தனை பேர் உடல்களாக வந்தார்கள், எத்தனை பேர் உயிரோடு வந்தனர், எத்தனை பேர் இன்னும் மீளவில்லை என்பது பற்றிய உண்மையான விவரங்களை வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும்.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அளவிடற்கரியதாகும். அங்கே பெருமளவு குத்தகை விவசாயிகள்தான் உள்ளனர். அவர்களுக்கும் இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இறந்தவர்களுக்கு 4 இலட்சம் இழப்பீடு என அறிவிக்கிறார் முதல்வர். ஒரு மீனவரின் உயிரின் விலை முதல்வரின் நான்கு மாதச் சம்பளம் தானா? இம்மீனவர்களின் உயிரிழப்பிற்கு பொறுப்பேற்க வேண்டியது இந்த கையாலாகாத அரசுகள் இல்லையா? இறந்த மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தவறுகளை ஒப்புக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு மாறாக மேலும் மேலும் பொய்ப் பித்தலாட்டங்கள் மூலம் பாசாங்கு செய்ய நினைக்காமல் இப்போதாவது துரிதவகையில் மக்களுடன் நின்று இந்தப் பேரிடரில் இருந்து மக்களை மீட்க மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

செந்தில்,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *