திரு. ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த நமது பார்வை.

நீண்ட காலமாக தான் அரசியலுகு வருவதாக சொல்லி வந்த திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவரது ரசிகர்களிடம் மிகுந்த ஆரவாரமிக்க வரவேற்பை இது பெற்றுள்ளது. ஏற்கெனவே இருக்கும் கட்சிகளிடம் இருந்து பொதுவான வரவேற்பும் அவருக்கு உரிமை இருக்கிறதென்றும் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று பார்க்க வேண்டும் என்று ஒரு மேம்போக்கான கருத்து வந்துள்ளது. சில கட்சிகள் சற்று தூக்கலாகவே வரவேற்றுள்ளன. ஒரு முகாமிலிருந்து ரஜினி வேற்று மாநிலத்தவர் என்பதால் அவரது அரசியல் பிரவேசத்தை எதிர்த்துப் பரப்புரை செய்வோம் என்று சொல்லியுள்ளனர்,

நம்மைப் பொருத்தவரை கட்சித் தொடங்குபவரது சாதி, மதம், பாலினம், வர்க்கப் பின்புலம், தொழில் பின்புலம்( திரைப்பட நடிகர், வழக்கறிஞர், விவசாயி, சிறு குறு தொழில்செய்வோர், மீனவர்….), வட்டாரம் என்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதைவிட மேற்படி விவகாரங்களில் எல்லாம் அவரது கட்சியின் கொள்கை என்ன? என்பதைப் பரிசீலித்து அக்கட்சியை ஏற்பதா? மறுப்பதா? என்று முடிவு செய்ய வேண்டும். தொடக்கத்தில் அக்கட்சி காகிதத்தில் என்ன கொள்கைப் போட்டிருக்கிறது என்று தான் பார்க்க முடியும். பிற்காலத்தில் அதை நடைமுறைப்படுத்தும் பொழுதும் நிலையெடுக்கும் பொழுதும் அக்கட்சிப் பற்றி முழுப் புரிதல் கிடைக்கும்.

சாதியச் சிக்கலில் சமூக நீதி, நிலப் பகிர்வு, ஆணவக் கொலை எதிர்ப்பு உள்ளிட்ட சாதி ஒழிப்பு ஆதரவா? எதிர்ப்பா?, மதம் பற்றிய சிக்கலில் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் கட்சியா?

எதிர்க்கும் கட்சியா?, ஆண்-பெண் சமத்துவத்தில் எத்தகைய கொள்கை நிலைப்பாடு கொண்டுள்ளனர், பொருளாதாரக் கொள்கையில் முதலாளித்துவமா? சோசலிசமா? , மாநில உரிமைப் பகிர்வா? மத்திய அதிகார குவிப்பா? என தீர்மானகரமான விவகாரங்களில் எத்தகைய கொள்கையை கொண்டிருக்கிறது அந்தக் கட்சி என்று பரிசீலிக்க வேண்டும். அதில் சாதி ஒழிப்பு, மதச் சார்பின்மை, மாநில அதிகாரம், சோசலிசப் பொருளாதாரக் கொள்கை ஆகியவை பெரும்பான்மை மக்களுக்கு நலம் பயக்கக் கூடியதாக அமையும். அல்லது குறைந்தபட்சம் நாம் எதிர்கொண்டிருக்கும் கோரிக்கைகளான காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு ஆற்று நீர் உரிமைச் சிக்கல், மீனவர் துயரம், ஈழ இனப்படுகொலைக்கு நீதி, காவிரிப் படுகைப் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு, ஒப்பந்த தொழிலாளர் முறை எதிர்ப்பு, அரசுப் பணி செய்வோர்க்கு ஊதியம், பென்சம் போன்றவற்றை உறுதி செய்தல், விவசாயப் பாதுகாப்பு, தமிழ்வழிக் கல்வி, புதிய வேலை வாய்ப்பு உருவாக்கம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகுதல், கையால் மலம் அள்ளும் வேலையை ஒழித்தல், ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம், பேரழிவுத் திட்டங்களுக்கு எதிரானக் கொள்கை, கிரானைட், ஆற்று மணல், தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆகிய கோரிக்கைகளிலாவது எத்தகைய நிலைப்பாடு என்பதை மக்கள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்.

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது, உங்கள் பொருளியல் கொள்கை முதலாளித்துவமா? கம்யூனிசமா? என்று கேட்டதற்கு ‘இரண்டும் கலந்த அண்ணாயிசம்’ என்று நழுவிக் கொண்டு பதில் சொன்னார். இது மக்களை ஏமாற்றும் வேலை. இசம், முதலாளியம், கம்யூனிசம் என எந்த சொல்லுக்கும் பொருள் தெரியாமல் பேசுவதாகும். சோசலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடைப்பட சித்தாந்தம் எதுவும் இல்லை. இந்திய அரசின் பெருமுதலாளியக் கொள்கை தான் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. வின் கொள்கையாக இருந்தது. அதை வெளிப்படையாக தெரிவிக்கும்

துணிவில்லாததால் ‘அண்ணாயிசம்’ என்று சொல்லி மக்களை ஏமாற்றினார். ’ஆன்மிக அரசியல்’ என்று திரு ரஜினிகாந்த் சொல்லியிருப்பது என்பது மேற்படி அண்ணாயிசக் கூற்றை நினைவுக்கு கொண்டுவருகிறது.

நாட்டின் பொது சொத்தைக் கொள்ளையடிக்கும் போக்குக்கு எதிராக மக்களிடம் இருக்கும் நியாயமான ஊழல் எதிர்ப்பு மனநிலையை மட்டும் பயன்படுத்திக் கொண்டு அடிப்படையான சமூக, பொருளாதார விவகாரங்களில் தமது கொள்கையைப் பகிரங்கப் படுத்தாதப் போக்கையே திரு.ரஜினிகாந்த் அவர்களும் கடைப்பிடிப்பதாக தெரிகிறது. இந்த முழக்கத்தோடு வந்தவர்கள் எப்படி தட்டுத் தடுமாறிப் போய் பழைய குட்டையில் ஊறிய மட்டைகளாக மாறிப் போயினர் என்பதிலிருந்து திரு. ரஜினிகாந்தும் அவரை ஆதரிக்கும் ரசிகர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பார்ப்பனிய பாரத தேசக் கண்ணோட்டமுடைய துக்ளக் சோவை வியந்து புகழ்வதும் அவர் இருந்திருந்தால் யானை பலம் இருந்திருக்கும் சொல்லியுளார். குருமூர்த்தி தொடங்கி பா.ச.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்காக காத்திருந்தனர். ரஜினிகாந்தை தங்களுடைய நட்பு சக்தியாக கருதுகின்றனர். மேலும் இந்துத்துவ எதிர்ப்பைப் பற்றி இந்நாள்வரை ஒரு வார்த்தைக் கூட திரு ரஜினிகாந்த் பேசியதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ரஜினிகாந்தின் இந்துத்துவ ஆளும் வர்க்க சார்பு நிலைப் பற்றியும் ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

மற்றபடி ரஜினிகாந்த வேற்று மாநிலத்தில் இருந்து வந்தவர் என்று சொல்லி தமிழ் இனக்குழுமவாத முகாமிலிருந்து எதிர்ப்பதாக சொல்கின்றனர். அது சனநாயகத்திற்கு புறம்பானது. வேற்று மாநிலத்தில் பிறந்தவர் என்ற காரணத்தை முன்னிட்டு எதிர்ப்பு?

ஆதரவு? என்பது இனக்குழுமவாத அரசியல் போக்கேயன்றி தமிழ்த் தேசிய அரசியல் அல்ல என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல விரும்புகிறோம்.

கொள்கை வழிப்பட்ட அரசியலின் தேவையை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ரஜினிகாந்தின் அரசியல் வருகையையும் ஒரு வாய்ப்பாக கொள்வோம்.

கடந்த இரு பத்தாண்டுகளாக திரு. விஜயகாந்த் தமிழக அரசியல் களத்திற்கு வந்து மக்களுக்கு ஒரு படிப்பினையை வழங்கியுள்ளார். அத்தகைய ஒரு படிப்பினையை வெகுமக்களுக்கும் சினிமா துறையினருக்கும் எல்லாக் கட்சிகளுக்கும் திரு. ரஜினிகாந்தின் அரசியல் கட்சியும் வழங்கும் என்று நாம் கணிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *