ஈழத்தில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர் திரு சுகாஷ், திரு. தேவராசு மற்றும் திருமதி சந்திரலீலா ஆகியோருடன் ஜூன் 10 அன்று நடந்த கலந்துரையாடல் பற்றிய குறிப்பு

ஜூன் 9 அன்று ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெற்ற பன்னாட்டு வழக்கறிஞர் மாநாட்டில் உரையாற்றிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு சுகாஷ், வன்னியில் இருந்து வந்திருந்த வடக்கு கிழக்கு மக்கள் சக்தியின் இணைப்பாளர் திரு தேவராசு மற்றும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு போராட்டக் குழுவின் இணைப்பாளர் திருமதி சந்திரலீலா ஆகியோருடன் ஈழத்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டம் ஜூன் 10 அன்று காலை 11:30 மணியிலிருந்து நண்பகல் 1:30 வரை அரும்பாக்கத்தில் உள்ள லீக் கிளப்பில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தோழர் கொளத்தூர் தா.செ.மணி, பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொறுப்பாளர் தோழர் அப்துல் ரசாக், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த தோழர் அப்துல் கரீம், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெரோஸ், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் சுதாகாந்தி,
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் செம்மணி, மே 17 இயக்கப் பொறுப்பாளர் தோழர் விவேகானந்தன், இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர் செந்தில், சோசலிச மையத்தைச் சேர்ந்த தோழர் செல்வி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தின் தோழர் சுப்ரமணியன், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் மகிழ், முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த தோழர்
கோகுலகிருஷ்ணன், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் குழந்தை, தோழர் பூங்குழலி ஆகியோரும் மேற்படி அமைப்புகளைச் சேர்ந்த முன்னணித் தோழர்களும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடல் தொடங்கும் முன்பு 2009 இறுதிப் போரில் உயிர்விட்ட போராளிகளுக்கும் மக்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஈழத்து நிலவரம், அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக பின்வரும் கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

  • மாவட்ட மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களை சிறுபான்மையினராக மாற்றும் வேலையை சிங்கள அரசு செய்து வருகின்றது.
  • முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும் அரசியல் கைதிகள் இன்றும்கூட விடுதலை செய்யப்படவில்லை. முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் சிறுசிறு அரசியல் வேலைகள் (துண்டறிக்கை விநியோகம், உணவு கொடுத்தல்) செய்தவர்கள்கூட
    ஆண்டுக்கணக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  • சிங்களக் குடியேற்றம் எந்த அளவுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதென்றால் தமிழர்கள் அடர்த்தியாக வாழ்ந்த வவுனியா மாவட்டத்தில்கூட இன்று 33% த்தினர் சிங்களர்களாக உள்ளனர்.
  • முல்லைத் தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் நடந்த நில மீட்பு போராட்டத்தின் வழியாக 84 குடும்பங்கள் தங்கள் நிலங்களை மீளப் பெற்றன. அதை தொடர்ந்து மேலும் 134 குடும்பங்கள் தங்கள் நிலங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றக் கோரி போராட்டத்தில் இறங்கின. அதில் 34 குடும்பங்களுக்கு மட்டுமே நிலங்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எஞ்சியோர் கோரிக்கையை முன்வைத்தப்படி இன்றும் போராட்டக் களத்தில் உள்ளனர்.
  • கடந்த ஒன்பது மாதத்தில் மட்டும் 131 புத்த விகாரைகள் வடக்கு
    மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் மட்டும் சுமார் 67 புத்த விகாரைகள் நிறுவப்பட்டுள்ளன.
  • காணாமற் ஆக்கப்பட்டோர் தமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி சுமார் 480 நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் போராடி வருகின்றனர்.
  • சிவசேனை போன்ற இந்துத்துவ அமைப்புகள் இலங்கையில் தமிழர்களிடையே தோற்றம் பெற்றிருப்பது ஆரோக்கியமானதல்ல என்ற கருத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
  • பன்னாட்டுப் புலனாய்வின் வழியாக மட்டுமே தாம் எதிர்கொண்டுவரும் திட்டமிட்ட இனவழிப்புக்கு நீதிப்பெற முடியும் என்று கருத்தை வெளிப்படுத்தினர்.
  • தமிழ்-முஸ்லிம் பிரச்சனையைப் பொருத்தவரை முஸ்லிம்களை ஒரு தனி அலகாக கருத்தில் கொண்டு சுயாட்சிப் பகுதியாக அறிவித்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் அரசியல் தீர்வு காண்பதையே தமிழர்கள் விரும்புகின்றனர் என்ற கருத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
  • தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதன் வழியாக மட்டுமே இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண முடியும் என்றனர்.

கலந்துரையாடல் முடிந்தப் பின் மதிய உணவுடன் கூட்டம் முடிந்தது. மேலும், வழக்கறிஞர் மாநாட்டில் திரு. தேவராசு மற்றும் திருமதி சந்திரலீலா ஆகியோரின் உரை அறிக்கை வடிவில் படியெடுக்கப்பட்டு பங்கெடுத்த அமைப்புகளுக்கு
வழங்கப்பட்டது.

ஒளிப்படங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *