சபரிமலை தீர்ப்பும் இந்து மத சீர்திருத்த சட்டங்களும்

இந்து மதச் சட்டங்கள் படி பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பெற்று இருந்ததா?

இந்து மதச் சட்டங்கள் படி பெண்களுக்கு விவாகரத்து செய்ய உரிமை/அனுமதி இருந்ததா?

இந்து மதச் சட்டங்கள் படி பலதாரத் திருமணங்கள் செய்யும் ஆண்களைத் தடுக்க பெண்களுக்கு உரிமை இருந்ததா?

வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ளும் உரிமை இந்து மதத்தால் வழங்கப்பெற்று இருந்ததா?

ஒரு இந்து மதத் தம்பதியினர் தன் சாதி அல்லாது வேறு சாதியிலிருந்து குழந்தையைத் தத்தெடுக்க உரிமை இருந்ததா?

இவை அனைத்தும் இன்று இந்து மதத்தைச் சார்ந்த மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் வரை அவை கிடையாது. அந்த உரிமைகளை வாங்கிக்கொடுத்து இந்து மதப் பெண்களுக்கு சுயமரியாதையை உறுதி செய்தது யார்? ’இந்து மதத்தின் காப்பாளர்கள்’ என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொண்டுத் திரியும் சங்கராச்சாரியார்களும், சபரிமலை தேவஸ்தானமுமா? கிடையாது. மேற்சொன்ன அனைத்து உரிமைகளும் இந்து மதப் பெண்களுக்கு கிடைக்கப்பெற்றது 1948 – 1956 காலகட்டத்தில் இயற்றப்பட்ட இந்து மதச் சீர்திருத்த சட்டங்களின் (Hindu Code Bill) காரணமாகத்தான். பத்து வருட காலத்திற்கு மேல் போராடி, போராட்டத்தின் பகுதியாக சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்பேத்கர் 1948இல் இந்து மதச் சீர்திருத்த மசோதாவினை கொண்டுவந்தார். (முதன் முதலில் 1937இல் ஜி.வி. தேஷ்முக் இந்து மதப் பெண்களுக்கு சொத்துரிமை மசோதாவை அறிமுகம் செய்தது, 1941 மற்றும் 1944 பி.என் ராவ் கமிட்டியின் பரிந்துரைகளைக் கணக்கில் கொள்ளும் போது, இச்சீர்த்திருத்த சட்டங்களின் வரலாறு இருபது வருடங்கள் என ஆகிறது). அந்த சட்டங்கள் நேரு இரண்டாம் முறை பிரதமரானப் பின் இயற்றி ஏற்கப்பட்டன .

இன்று சபரிமலைத் தீர்ப்புக்கு எதிராக எத்தனை பேர் போராடுகிறார்கள் என்று பெருமையுடனும், தீர்ப்பு தவறானது என்று கூறும் நபர்கள் 1940/50 காலகட்டத்தில் எவ்வளவு மோசமான போராட்டங்களை இந்து மகா சபை/ஆர். எஸ். எஸ் அமைப்புகள் நடத்தினார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். “பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமையை அளிப்பது இந்து தர்மத்தின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல். இந்த ஒட்டுமொத்த சீர்திருத்த சட்டங்களும் இந்து மத சாஸ்திரங்களை அவமரியாதை செய்யும் கொடூரமான சட்டங்கள்” என நாடாளுமன்றத்தில் பேசியது இன்று பா.ஜ.க-வும் சங் பரிவாரமும் தூக்கி வைத்து கொண்டாடும் இந்து மகா சபாவின் அன்றைய தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜீ ஆவார். குழந்தைத் திருமணங்களை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சாரதா சட்டத்தையும் எதிர்த்தவர்கள் தான் ஆர்.எஸ்.ஸும் அதன் தலைவர் கோல்வால்கரும். ஒரு ‘தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த அம்பேத்கர்’ கோடிக்கணக்கான இந்து மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க அனுமதிமக்க முடியாது” என்று வெளிப்படையான சாதிய தாகுத்தல்கள் அம்பேத்கர் மேல் நிகழ்த்தப்பட்டன. அம்பேத்கர்/நேரு உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அன்றைய அமைச்சர்கள் முதல் குடியரசுத்தலைவர் இராஜேந்திர பிரசாத் வரை சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக நின்றனர். அத்தனை தடைகளையும் மீறித்தான் அந்த சட்டங்கள் இயற்றப்பெற்றன. இந்த உரிமைகள் இன்று இயல்பாயும் மக்களின் வாழ்வில் இன்றியமையாததாகவும் கலந்துவிட்டன.

சபரிமலை தீர்ப்பு வெறும் கோவில் நுழைவுக்கான திறவுகோல் மட்டுமல்ல. மாதவிடாய் என்னும் இயற்கையான உடல் செயல்பாட்டுக் காலகட்டத்தை ’தீட்டு’ என்று கூறி நடைமுறைப் படுத்தப்படும் தீண்டாமையை சமூகத்தில் இருந்து அகற்றவும், அத்தகையப் பிற்போக்கான மதிப்பீடுகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க உதவும் சீர்திருத்த மருந்து. இந்த தீர்ப்பானது ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரங்கள் கிளப்பி விடுவதுபோல் ஒரு இசுலாமியர் தொடுத்த வழக்கெல்லாம் கிடையாது. இந்திய இளம் வழக்கறிஞர்கள் மன்றம் (Indian Young Lawyers Association) 2006இல் தொடுத்த வழக்கு இது. இந்த மன்றத்தின் தலைவர் ஒரு இசுலாமியர் என்று சுட்டிக்காட்டும் இசுலாமிய வெறுப்பு கும்பல், சொல்லாமல் விடுவது எதுவெனில் இந்த வழக்கின் மனுதாரர்கள் இந்த மன்றத்தினர் மட்டுமின்றி பிரேர்னா குமாரி, லக்ஷ்மி சாஸ்திரி, சுதா பால், அல்கா ஷர்மா போன்ற தன்னார்வலர்களும் தான். முக்கியமாய் எதற்காக இந்த வழக்கை தொடுத்தோம் என்று இந்திய இளம் வழக்கறிஞர்கள் மன்றத்தின் பொதுச்செயலாளர், பக்தி பசிரிஜா சேத்தி கூறுகையில், “2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடிகை ஜெயமாலா (தற்போதைய கர்நாடக மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்) சபரிமலை கோவிலுக்குள்ளும் அதன் கருவறைக்குள்ளும் (பல ஆண்டுகளுக்கு முன்னால்) நுழைந்தார் என்ற சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அதனால் ஏற்பட்ட ‘தீட்டினை’ ‘கழிக்க’ ஏதோ ‘புனிதப்படுத்தும் சடங்குகளை’ அந்த கோவில் அர்ச்சகர்கள் செய்தார்கள் என்ற செய்தி பெண்களை இழிவுபடுத்தும் விதமாய் எனக்குப் பட்டது. அதுவே என்னைத் தூண்டியது. இங்கு அவசியம் ஒரு சீர்திருத்தம் தேவை என்று முடிவு செய்து ஏனைய மனுதாரர்களிடம் கலந்து ஆலோசித்து பின் இந்த வழக்கினை தொடுத்தோம்” என்கிறார். 2015/16 காலகட்டத்தில், “பெண்கள் மாதவிடாய் பருவத்தில் இருக்கிறார்களா? இல்லையா? என்று சோதித்து கண்டறியும் கருவி கண்டுபிடிக்கும் வரை சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது” என்று திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பிரயர் கோபாலகிருஷ்ணா கூறியதற்கு எதிராக “#HappyToBleed” என்ற பிரச்சாரத்தை மாணவர்கள் மேற்கொண்டனர். பின்னர் அந்த பிரச்சாரக்குழுவும் இந்த வழக்கின் மற்றுமொரு மனுதாரராக இனைந்தது. ஒரு காலகட்டத்தில் ஒரு சில மனுதாரர்களே இவ்வழக்கிலிருந்து விலக முடிவு செய்தபோதும், யார் விலகினாலும் விலகாவிட்டாலும் இது ஒரு பொது நல வழக்கு என்பதால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை தொடர்ந்து நடத்தும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியது குறிப்பிடதக்கது.
‘சபரிமலையில் பெண்களை அனுமதித்ததால் தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது’ என்று துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும் ஆர்.எஸ்.எஸ்-காரருமான ஆடிட்டர். எஸ். குருமூர்த்தி போன்றவர்கள் கூறுவது பெண்களின் சுயமரியாதையைக் கேலிசெய்வதன்றி வேறென்ன? அன்று சீர்திருத்த சட்டங்களை இயற்றுவதற்கு அம்பேத்கருக்கு ஆதரவாக நின்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல இன்றும் பெண்களின் சுயமரியாதையை மறுக்கும் “மத காப்பாளர்களின்” செல்வாக்கை ஒழிப்பதற்கு பெண்கள் முன்னணியில் நிற்கவேண்டும்.

25ஆம் சட்டப்பிரிவை சுட்டிக்காட்டி மதப்பழக்கவழக்கங்களில் அரசாங்கம் தலையிடமுடியாது என்று வாதம் செய்பவர்கள் அறியவேண்டியது இந்த தீர்ப்பின் மூலம் நீதிபதி சந்திரசூட் எழுதியிருக்கும் இவ்வரிகளாகும், “மதத்தினை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி பெண்களின் வழிபாட்டு உரிமையைத் தடுக்க முடியாது. இது மனித மாண்புகளுக்கு எதிரானதும் கூட”. நீதிபதி நரிமனின் வரிகளில், “பெண்களைக் கடவுளின் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளாக நடத்துவதென்பது அரசியல் சாசன சட்டத்தை கேலிசெய்யும் போக்காகும்.” இன்று இந்த தீர்ப்பை எதிர்க்கும் இந்து அடிப்படைவாதிகளுடன் இணைந்திருப்பது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற அமைப்புகளும் தான். இந்த கூட்டணிகளும் வரலாற்றில் புதிதல்ல. இந்து சீர்திருத்த சட்டங்களை அப்போதைய சனாதனிகளுடன் சேர்ந்துகொண்டு எதிர்த்தது நசிருத்தின் அஹ்மது போன்ற முஸ்லீம் லீக் தலைவர்களும் தான். ஒரு மதத்தில் ஏற்படும் பாலின சமத்துவ சீர்திருத்தாமனது எங்கே பற்றிப்பரவி தங்களது அதிகாரங்களிலும் ‘கலகம்’ செய்துவிடுமோ என்ற பதற்றம் “மத காப்பாளர்களுக்கு” என்றுமே நீங்காதது.

உரிமையற்ற காலகட்டங்களின் சுவடுகள் பெரிதும் இல்லாமல் எப்படி உரிமைகளை பெண்கள் இன்று உபயோகப்படுத்துகிறார்களோ அதுபோல் சில ஆண்டுகள் கழிந்த பின்பு சபரிமலை கோவிலுக்கு பெண்கள் சென்றுவருவது இயல்பானது என ஆகிப்போகும்; மாதவிடாயினால் ‘தீட்டு-கீட்டு’ என்ற அபத்த மதிப்பீடுகள் இல்லாமல் ஆகிப்போகும். ஆனால் அன்று முதல் இன்று வரை சமூகத்தின், குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் யார்? என்பதை மக்கள் இனம்காணாமல் இல்லை. மதத்தின் பெயரால் பாலின சமத்துவத்தை மறுப்பவர்களைப் புறந்தள்ளி சமூகம் முன்னேற்ற பாதையில் பயணிக்காமலும் இல்லை.

சித்திரங்கள் – 1940/50களில் இந்து மத சீர்திருத்த சட்டங்களுக்கு ஆதரவாக செய்தித்தாள்களில் வெளிவந்தவை. நன்றி – scroll.in

மோ. சதீஷ்,
இளந்தமிழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *