இளந்தமிழகம் இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாடு

காவி – கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் பா.ச.க. வும் எடுபிடி ஆட்சி நடத்திவரும் அ.தி.மு.க. வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இளந்தமிழகத்தின் தேர்தல் நிலைப்பாடு

2014 மே மாதத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பா.ச.க.வின் இந்த ஐந்து ஆண்டு ஆட்சி எத்தகையது என்பதற்கு விரிவான விளக்கம் தேவையில்லை. ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே மொழி என்ற உலகமய திசைப்போக்கும் இந்து, இந்தி, இந்துராஷ்டிரம் என்ற ஆர்.எஸ்.எஸ். இன் இலட்சியமும் ஒன்றுபட்டப் புள்ளியில் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம் தலைவிரித்தாடக் கண்டோம். காவிரி, நீட், பணமதிப்பு இழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., மாநில வரிவருவாய் பறிப்பு, பேரழிவுத் திட்டங்கள், மாநில நிதிச் சூறையாடல், மதவெறி, சாதிவெறி அரசியல், ஆளுநர் ஆட்சி, எழுவர் விடுதலைக்கு தடை, ஈழத் தமிழரின் விடுதலைக்குத் தடை போடுவது என இவ்வாட்சியால் பெருக்கெடுத்து ஓடிய கண்ணீரும் சிந்திய இரத்தமும், பலியான உயிர்களும், சிறுகுறு தொழில்கள் சின்னாபின்னமானதும், சிறுகுறு விவசாயிகள் சிதைந்ததும், தொழிலாளர்கள் இடுப்பில் கட்டியிருந்த உரிமைகள்கூட உருவப்பட்டதும், இருள்சூழ் அச்சமும், தற்சார்ப்பு அரசு நிறுவனங்கள் தடதடத்துப் போனதும் நம் கண்ணில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. போன்ற பிற்போக்கு ஆற்றல்கள் நிலைப்பெற்றிருப்பதற்கான நிலைமைகளை இல்லாதொழிப்பதற்கான வாய்ப்புகளைத் தேர்தல் கொடுக்கவில்லை ஆயினும் பாசிசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிடுக்கும் இந்த அபாயகரமான ஆற்றல்கள் ஆட்சிக் கட்டிலில் தொடர்வதைத் தடுப்பதற்கான வாய்ப்பைத் தேர்தல் வழங்கியுள்ளது. அவ்வகையில் பா.ச.க. – அ.தி.மு.க. – தே.மு.தி.க. – பா.ம.க.. கூட்டணியைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.

கோட்பாட்டளவிலும், நடைமுறையளவிலும் உள்நாட்டளவில் சாதி, மத, இன வெறுப்பு அரசியலுக்கு எதிராய் நிற்கக் கூடிய, தமிழ்த்தேசிய ஓர்மைக்கு ஊறுவிளைவிக்காத சனநாயக ஆற்றல்களான சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), சி.பி.ஐ(எம்-எல்) விடுதலை, விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ. ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளை ஆதரிக்கிறோம். இக்கட்சிகள் ஆளும்வர்க்கக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பினும் விமர்சனத்துடன் ஆதரவு தெரிவிக்கிறோம்.

நிலம், நீர், காற்று, நிலத்தடி நீரைப் பாழாக்கும் தமிழகத்தின் ஆக முதன்மையான பிரச்சனையான கார்ப்பரேட் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிரான முரண்பாடு முற்றிவந்து முன்னரங்கில் நிற்கும் தூத்துக்குடியிலும் (ஸ்டெர்லைட் எதிர்ப்பு) காவிரிப் படுகைப் பகுதியான மயிலாடுதுறையிலும் ( ஹைட்ரோ கார்ப்பன், சேல், மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு எதிர்ப்பு) ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கமும், நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கமும் பரப்புரை நோக்கில் முன்னெடுத்துள்ள தேர்தலில் போட்டியிடும் முன்னெடுப்புகளை ஆதரிக்கிறோம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது எந்த ஒன்றின் தொடக்கமாகவோ எந்த ஒன்றின் முடிவாகவோ அமையப் போவதில்லை. இவற்றின்வழி மக்கள் சாத்தியமாக்கக் கூடியதன் எல்லை சிறியதே. ஆயினும் அதை சாத்தியப்படுத்திக் கொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும். அந்த சாத்தியப்பாடுகளைக் கண்டறிந்து சரிவரக் கையாள்வது போராட்டத்தைக் கைவிடுவது அன்று. ஆளும்வர்க்கத்தின் ஒரு முகாமின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் கோழைத்தனமும் அன்று. வீரம், கோழைத்தனம் என்பவற்றிற்கப்பால் காணப்படும் கள நிலைமைகளின் பாற்பட்ட அரசியல் முடிவுகளும், குறைந்த இழப்புகளுடன் வெற்றியெனும் மலை உச்சியை சென்றடையக் கூடிய பயணமுமே முதன்மையானதாகும்.

2008 ஆம் ஆண்டில் இருந்து உலகளாவிய அளவில் நீடித்துவரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக வலதுசாரிகளின் எழுச்சி உலகெங்கும் உள்ளது. வட அமெரிக்காவின் டிரம்ப், இஸ்ரேலின் நெதன்யாகு, துருக்கியின் எர்டோகன், பிரேசிலின் பொல்சனரோ, பிரான்சின் லா பென், இந்தியாவின் மோடி, இலங்கையின் இராசபக்சே, இங்கிலாந்தின் யூகிப் கட்சி எனப் பெரும் பட்டியல் கிடைக்கிறது. பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் அரசு பாசிச வடிவம் எடுப்பதற்கான கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. அந்த அடிப்படை முரண்பாட்டைத் தீர்க்காமல் பாசிசத்தைத் தடுத்துவிட முடியாது. பாசிசம் உருப்பெறுவதும் அதற்கெதிராக மக்கள் முகாம் போரிடுவதும் தவிர்க்கவியலாத நிகழ்ச்சி நிரலாகவே கண்முன்னால் இருக்கிறது. பாசிசத்தை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ள இந்திய ஆளும்வர்க்கத்திற்கு இந்த தேர்தலின் வழியாக ஒரு வேகத் தடையைப் போட முடியுமே அன்றி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்றோ தமிழ் மானம் காத்துவிட முடியும் என்றோ பொய் நம்பிக்கைகளை நாம் விதைக்கவில்லை.

வலதுசாரி லா பென்னை அரசதிகாரத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு தாராளவாத மெக்ரோனுக்கு எதிராக மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் பிரெஞ்சு மக்கள் ஊன்றி நிற்கிறார்கள். இராசபக்சேவை ஆட்சியில் இருந்து கீழிறக்கிவிட்டு கேப்பாப்புலவு போராட்டத் தீயை மூட்டினார்கள் ஈழத் தமிழர்கள். இந்த தேர்தல் மூலமாக பா.ச.க. வை ஆட்சியில் இருந்து கீழிறக்கிவிட்டு அக்கட்சியுடன் கூட்டணி வைத்தவர்களுக்குப் புரியும் மொழியில் பாடம் கற்பித்துவிட்டு போராட்டக் களங்களில் ஊன்றி நிற்பதுவே மக்களுக்கு நாம் முன்வைக்கும் தெரிவு.

அதோ, தேர்தல் களேபரங்களுக்கு இடையே, மேமாத்தூரிலிருந்து மாகாணம் வரை விளைநிலங்களில் நடந்துக்கொண்டிருக்கும் கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிராய்த் திருநாங்கூர் மக்கள் திரண்டெழுந்து போராடும் சத்தம் கேட்கிறது. மோடி அலையிலேயே கரைசேர முடியாதவர்கள் மோடி எதிர்ப்பு அலையில் முழ்கிப் போகும்படி ஏப்ரல் 18 தேர்தல் நாள் அன்று ஒத்த உணர்வில் தமிழ்மக்கள் பொத்தனை அழுத்தும் சத்தம் கேட்கட்டும். ஏப்ரல் 18 க்கு முன்பும் பின்பும் போராட்டச் சத்தம் தொடரட்டும், ஓங்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *