NIA மசோதாவும்.. எதிர்க்காத ’தாராளவாத’ எதிர்கட்சிகளும்..

 

கொஞ்சம் காது கொடுத்து கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள் ஓவைசி சாஹப் என்கிறார் அமித் ஷா.. கேள்விகளுக்கான எந்த பதிலையும் சொல்லாமல்.. “ஆம்.. வாக்கெடுப்பு நடத்துவோம்.. மக்களும் இந்த மன்றமும் தெரிந்து கொள்ளட்டும்.. யார் தேசத்தின் பக்கம்.. யார் பயங்கரவாதத்தின் பக்கம் எனத் தெரிந்து கொள்ளட்டும்.”  என்று அமித் ஷா வீசிய லாவகமான பந்தில் அத்தனை எதிர்கட்சிகளும் அவுட்.. ஆறு பேரைத் தவிர..
ராஜதந்திரமான முன்னகர்வு என அமைதியாக அமர்ந்திருப்பார் மோடி.. ஃபாசிச மனங்களில் தோன்றிய நமட்டுச் சிரிப்பினை நாம் உணர முடிந்தது அந்த சமயம். எப்போதும் போல எந்த எதிர்ப்புமின்றி NIA வில் தாங்கள் விரும்பிய அந்தத் திருத்தம்.. ஏகமனதாக பெருவாரியான வாக்கெடுப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது..
NIA.. எந்தத் தொலைக்காட்சி ஊடகங்களும் இது குறித்து பேசவில்லை.. இது ஒரு தொனி.. ஒரு நேரத்தில் பல பிரச்சனைகளை எப்படிப் பேசுவோம் நாம்.. தேசியக் கல்விக் கொள்கை என்று கொந்தளிக்கும் போதே, இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் செய்து அது விவாதிக்கப்படும்.. மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நாம் மும்முரம் காட்டும் பொழுது NIA வில் சட்ட திருத்தம்.. இன்னும் அடுத்து இருக்கிறது.. அணைகளை தேசியமயமாக்கல்,  இந்திய வரலாற்றில் திருத்தங்கள்.. இன்னும் சற்று காலத்தில் நமக்கு முகமும் அடையாளமும் துளியும் பரீட்சயமே இல்லாத சாவர்க்கரின் படம் இந்திய ரூபாய் நோட்டில் பதிக்கப் பட்டாலும் ஆச்சர்யமில்லை..
NIA சட்டத்திருத்தத்தை அவ்வளவு எளிதாக கடந்து போய்விட முடியாது.
NIA – National Investigation Agency  -தேசிய புலனாய்வு முகமை .. 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்ட  முகமை.. மாநில அரசுகளிடம் அனுமதி பெறாமல் நேரடியாக குற்றங்களை விசாரிக்கவும் கையாளவும் மத்திய அரசால் இயக்கப்படுகின்ற அரசு நிறுவனம்.. சட்டவிரோதமான நடவடிக்கைகள், பயங்கரவாதத் தொடர்பு செயல்கள்,அணு ஆயுத பயன்பாடு போன்ற சட்ட விரோத செயல்கள் இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியில் அதன் பிராந்திய பிற நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு எங்கு நடந்தாலும் நேரடியாகத் தலையிடும் அதிகாரம் பெற்ற ஒரு முகமை..

நேரடியாகப் பார்த்தால் தேச நலன், தேசப் பாதுகாப்பு என்ற அன்றாட மேல் பூச்சுகளால் பூசப்பட்ட, அதற்காகத் தயார் செய்யப்பட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முகமையே..
இதை முறைப்படுத்தி முதன்முதலில் அமைத்தது என்னவோ காங்கிரஸ் ஆட்சியில் தான்.. ஆனால் இதை முழுமையாக அன்று எதிர்த்தது அம்மையார் ஜெயலலிதா அவர்கள்.. மாநில பாதுகாப்பும் சட்ட ஒழுங்கும் அந்தந்த மாநிலக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமேயன்றி அதைத் தாண்டிய ஒரு அமைப்பாக மத்திய அரசின் விசாலக் கைகள் நேரடியாக நுழைவது மாநில உரிமைகளில் தலையிடும் விடயமாகவே அதைக் கருதினார்.. அதனால் தான் இன்றளவும் NIA விற்கு தமிழகத்தில் மட்டும் ஒரு அலுவலகம் கூட இல்லை.. ’அம்மா’ வழி செல்கிறோம் எனச் சொல்லும் தற்போதைய ஆட்சியாளர்களைப் பற்றிப் பேசுவதற்கும் உறைப்பது போல உரைப்பதற்கும் வார்த்தைகள் இல்லாதபடியால் அதைத் தவிர்த்துவிட்டுச் செல்கிறேன்..
நிற்க.. தற்போது அதில் திருத்தம் கொண்டு வந்திருக்கும் பாஜகவின் உள் நோக்கங்களில் எழுந்திருக்கும் கேள்விகளே இங்கு சிக்கலானது..
2008 ல் கொண்டு வரப்பட்ட மசோதாவில் சரியான வார்த்தைகளில் சொல்லப் போனால்..இந்தியாவின் இறையான்மைக்கும், பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவித்தாலோ, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், உடன்படிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு வெளியேயோ உள்ளேயோ யார் ஈடுபட்டாலும் இந்த முகமையானது நேரடியாகத் தலையிடும் என்பதே..
இந்த முகமையின் மூலம் வேகமான செயல்பாட்டிற்கும் மேலும் அதன் வரையறைகளை விரிவுபடுத்துவதற்குமே பாஜக 15/07/2019 அன்று இந்த மசோதாவில் மேலும் சில திருத்தங்களைத் தாக்கல் செய்தது..
சரி .. பாஜக.. இந்த மசோதாவில் கொண்டு வந்திருக்கும் திருத்தங்கள் என்ன..
2008 ல் நிறுவப்பட்ட குற்றங்களோடு சேர்த்து..

இந்தியாவிற்கு எதிராகவோ.. இந்தியர்களுக்கு எதிராகவோ .. (அடுத்த வரி தான் முக்கியம்) அல்லது இந்தியாவின் நலன்களுக்கு  (Interest of India) எதிராகவோ நிகழ்த்தப்படும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் (scheduled Offences) இதில் சேர்க்கப்படுகின்றது..
அடுத்து..
புலனாய்வு முகமையாக மட்டுமே கருதப்பட்ட இந்த அமைப்பின் அதிகாரிகளுக்கு ஒரு காவல்துறை அதிகாரிக்கு இருக்கும்  அதிகாரங்கள், கடமைகள், மதிப்புகள், சலுகைகள் என அத்தனையையும் நாடு முழைமைக்குமாக அளித்தல்..
அடுத்து..
மத்திய அமைச்சகத்தின் முழு நேரடிக் கட்டுப்பாட்டிலும்.. மத்திய அரசின் வழிநடத்தல்களில் மட்டுமே இந்த முகமை அமைவது..
அடுத்து..
சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் NIA வின் வழக்குகளை தற்போது மாநில மத்திய அரசுகளின் ஒத்துழைப்போடு தனி அமர்வு நீதிமன்றங்களை அமைத்து விசாரிப்பது..
என நான்கு திருத்தங்களை கொண்டுவந்துள்ளது..
இதன் விரிவாக்கங்களில் நாம் கவனிக்க வேண்டியது திட்டமிடப்பட்ட குற்றங்களின் பட்டியலில் அவர்கள் சேர்த்திருப்பது..
மனிதக் கடத்தல் (human Trafficking)

கள்ள ரூபாய் நோட்டு புழக்கவிடல்..

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைத் தயாரித்தல் விற்பனை செய்தல் .. வைத்திருத்தல்..

சைபர் குற்றங்கள்.. (வலைதளங்களில் இந்திய நலன்ளுக்கு எதிராகப் பதிவிடுதல் உட்பட)

எனப் பழைய குற்றப்பட்டியலோடு பாஜக தன் கருத்தியல் தகவமைப்பை வலுப்படுத்த பல பலம் வாய்ந்த கைகளை அந்த முகமைக்கு பொருத்த விளைகிறது..
இதில் இருக்கும் பெரிய சிக்கலே.. இது எப்படி கையாளப்படப் போகிறது. யாருக்கு எதிராக கையாளப்படப்போகிறது.. என்ற கேள்விகளே,  ஆனால் அதை எதிர்த்து கேள்விகளை தாட்பூட் என்று மணீஷ் திவாரியும், திமுக உறுப்பினர் அ.ராஜாவும் சுற்றி வளைத்து பல கேள்விகளை கேட்டாலும், அவையெல்லாம வெறும் நேரக் கடத்தலுக்கு பயன்பட்டதேயன்றி, கடைசியில் மசோதாவிற்கு ஆதராவாகவே அவர்களால் ஓட்டுப்போட முடிந்தது.. ராஜ மன்னார் கமிஷன், மாநில சுயாட்சி என எப்போதும் ஊளையிடும் திமுகவும் இதற்கு பலியாகியது தான். திமுக ஆளும் வர்க்க கட்சி என்பதும்  காங்கிரஸுக்கு எதிராக எந்த நகர்வையும் திமுக எடுக்காது என்ற கூட்டுக் களவானித்தனமும் தான் பட்டவர்த்தனமாகிறது..
நாங்கள் யாரையும் பயமுறுத்துவதற்காக இதைக் கொண்டு வரவில்லை.. ஆனால் இதனால் யாருக்காவது மனதில் எழும் பயத்திற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் எனப் பந்தை ’குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’ பாணியில் திருப்பப் பார்க்கிறார் அமித் ஷா.. அவரிடம் பிடித்த விஷயமே, அமித் ஷா பூசி மொழுகுவதில்லை. பொய்யோ மெய்யோ போட்டு உடைத்துவிடுவார்.. இது மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு  அச்சத்தை உருவாக்கவே கொண்டு வரப்படும் சட்டத் திருத்தமாகும்.
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரமாக.. இதுவரை.. NIA வால் பதியப்பட்ட வழக்குகளில் 98.6 சதவிகிதம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது.. நாட்டில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்குகிறது அதைக் கட்டுப்படுத்த அரசு இந்த மசோதாவை பரிந்துரை செய்கிறது என்கிறார் மத்திய அமைச்சர்..  அப்படியெனில் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராகவும் NIA வின் கரங்கள் நீளுமா.. கௌரி லங்கேஷ் படுகொலையை கையில் எடுக்குமா.. மாட்டுக் காவலர்கள் நடத்தும் சிறுபான்மையினருக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தன் அதிகாரத்தை பாய்ச்சுமா..?  இந்திய நலன்களுக்கு எதிராக என்று சொல்கிறீர்களே, அந்த நலன்களையும் பட்டியலிட்டால் நன்றாய் இருக்கும்.  ஏனெனில்.. இந்திய நலன்களாக நீங்கள் கருதுவது உங்கள் நலன்களையே அன்றி மக்களின் நலன்கள் அல்லவே..

காஷ்மீரிலும் NIA செயல்படப் போகிறதா? ஸ்னிப்பர் குண்டுகளாலும் பெல்லட் குண்டுகளாலும் ஏற்கனவே பெரும் உயிர்ச்சேதத்திற்கு ஆளுகும் காஷ்மீருக்கு மேலும் உளைச்சலை ஏற்படுத்தத் திட்டமா..
இந்தக் கேள்விகளை எல்லாம் மணீஷ் திவாரியும் கேட்டார்.. ராஜாவும் கேட்டார்.. ஆனால் அவர்களின் கணைகள்  வெறும் பதிவுகளாக மட்டுமே கடந்தது தான் திமுக-காங்கிரஸின் துரோகம்.. கடைசியில் நாட்டின் பாதுகாப்பு கருதி.. என்ற அடைமொழியில் கேள்விகளுக்கு அவசியமேயில்லாமல்.. பணிந்து போனது திமுக.. புலி போல எழுந்து பூனையின் மியாவ் சத்தத்தில் பம்மிய காட்சி போல அமைந்தது..
உத்தரவாதம் தருகிறாராம் அமித் ஷா.. மோடியின் ஆட்சியில் இந்த முகமை தவறாகவோ, தவறுதலாகவோ பயன்படுத்தப்படாது என்று.. அதனால் ஆதரித்து வாக்கு அளித்தார்களாம்.. விளக்கம் தருகிறார்கள் திமுகவினர்..
கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து விட்டுக் கொடுத்தாயிற்று..

நீட் தேர்வின் மூலம் சுகாதாரமும் மருத்துவமும் மாநிலப்பட்டியலில் விட்டுக் கொடுத்தாயிற்று..

இப்போது சட்டம் ஒழுங்கையும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராயிற்று..
இது இன்று தொடங்கியது அல்ல.. முதன் முதலில் திராவிட நாடு கோரிக்கையை விட்டுக் கொடுத்ததில் தொடங்கிய  திமுக வின் தோல்வி.. இப்போது அது இந்திய ஒற்றையாட்சிக்கு முழுதும் கட்டுப்பட்ட இன்னுமொரு முதலாளித்துவ கட்சியே ஆகும்.  திமுக தன் சுய பிம்பத்தை இழந்துவிட்டது.. எல்லா மக்களுக்கும் சமமான சமூக நீதியை இது கேள்விக்குள்ளாக்கும் என்ற அடிப்படை அறிவும் உணர்வுமே இல்லாமல் வேலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு மக்களிடையே திமுகவின் மேல் வெறுப்புணர்வை இதன் மூலம் பரப்புவதாக முட்டுக் கொடுக்கிறார்கள்.. சபாஷ்.. கேட்கும் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்லி அரசியல் ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் கட்சிதான் நாங்களும் எனப் பச்சையாக காட்டிக்கொண்ட வகையில்.. திமுகவிற்கு பாராட்டுக்கள்..
வெகு வீரியமாக தன் எல்லா நோக்கங்களையும் வரைவாக்கி விரைவு படுத்த ஆளுங்கட்சி விழைகிறது..
கேள்விகள் கேட்க வேண்டிய நாம் அனுப்பி வைத்த நல்லவர்களும் நாங்களும் ஒரு ஆளும் வர்க்கக் கட்சி என்று நமக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. இனியும் எந்த முகாந்திரத்தில் தங்களை சமூக நீதிக் காவலர்களாகப் பறைசாற்றுவார்கள் எனத் தெரியவில்லை..
தன்னை பாஜகவிற்கு மாற்று என்று அறைகூவிக் கொண்ட அத்தனை கட்சிகளும்.. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் என அத்தனை கட்சிகளும் ஒரே புள்ளியில் சேர்க்கப்பட்டுவிட்டன..  ஆளும் வர்க்க ஒருமைப்பாட்டிலும், ஜனநாயகப் போர்வைப் போர்த்திய தாராளவாத கட்சிகளும் தங்களை மக்கள் எந்த காலத்திலும் நம்ப வேண்டாம் என்று பறைசாற்றிவிட்டன..
இனி.. தனித்தனியாக .. ஒவ்வொரு விடயத்திற்காக நாம் எதிர்ப்பினை பதிவு செய்தல் எத்தகைய முட்டாள்தனம் என நாம் உணர வேண்டிய காலம் இது..
ஏனெனில் இங்கு கருத்தியலே பிரச்சனை.. அதைக் எதிர்த்தலே அதற்கானத் தீர்வு.. காது மட்டும் அல்ல.. அமித் ஷா ஜி.. புலன்கள் அத்தனையையும் வைத்து மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. நாடாளுமன்ற உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு நீங்கள் மழுப்பிச் செல்லலாம்.. மக்களின் கேள்விக்கு… ?
– மா இள செந்தில் குமார்
இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *