தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கலவரம்! மத்திய பாசக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! ஊடகச் செய்தி

தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கலவரம்!

மத்திய பாசக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

நாள்: 06-03-2020, வெள்ளி, மாலை 5:00 மணி 

இடம்: சோழிங்கநல்லூர் சந்திப்பு, சென்னை 

வணக்கம். தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான மத்திய பாசக அரசைக் கண்டித்து இன்று மாலை 5 மணி அளவில் சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகில் இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தில்லி வன்முறைக்கு காரணமான ஆர்.எஸ்.எஸ். – பாசகவையும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவ்வார்ப்பாட்டம் இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இளந்தமிழகம் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் சதீஷ் தொடக்கவுரையாற்றினார். மேலும்  FITE இன் தலைவர் பரிமளா, பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த கனி மற்றும் SIO வைச் சேர்ந்த அபுல் அசர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மருத்துவர் நர்கீஸ் இந்துக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும்படியான பாடல் ஒன்றை பாடினார்.

இக்கண்டன உரையில் தில்லி வன்முறைக்கானப் பின்புலத்தை விளக்கிப் பேசினர். கடந்த பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை தில்லியின் வடகிழக்குப் பகுதியில்  இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவக் குண்டர்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் 53 க்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர், 270 க்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளனர், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.  பிப்ரவரி 23 அன்று பாசக தலைவர் கபில் மிஸ்ரா குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுவோரைக் மூன்று நாட்களுக்குள் காவல்துறை கலைக்காவிட்டால் அவரே களத்தில் இறங்கி கலைப்பார் எனப் பேசினார்.

தில்லி சட்டமன்றத் தேர்தல் பரப்புரையிலும் பாசக தலைவர்கள் அனுராக் தாகூர், அபய் வர்மா, பர்வேஸ் வர்மா உள்ளிட்டோர் போராடும் இஸ்லாமியர்களைத் தேசத் துரோகிகளாக சித்திரித்தனர். அவர்களை ’துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்று பேசினார்கள். தில்லி சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஆர்.எஸ்.எஸ். – பாசகவின் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் சிஏஏ போராட்டத்தை எதிர்த்துப் பரப்புரை செய்தன. இந்துத்துவ குண்டர்கள் ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம், ஷாஹீன் பாக் போராட்டக் களம் ஆகியவற்றிற்கு சென்று துப்பாக்கியால் சுட்டு மிரட்டினர்.

இதன் தொடர்ச்சியாகவே தில்லி வடகிழக்கில் நடத்தப்பட்ட கலவரத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவக் குண்டர்கள் துப்பாக்கிகளோடு தெருக்களில் சென்று இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்றனர். இந்தியாவின் தலைநகரத்திலேயே இது நடந்திருப்பது அவமானகரமானதாகும். 

மசூதிகள், வீடுகள், வாகனங்கள், பள்ளிகள், கடைகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. 1984 இல் தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை இது நினைவுப்படுத்தியது. 2002 இல் மோடி-அமித் ஷா தலைமையில் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகள் போலவே தில்லியிலும் நடந்துள்ளது.

காவல்துறை இக்கலவரத்தில் இந்துத்துவக் குண்டர்களுக்கு துணைப் போனதும் அம்பலமாகியுள்ளது. தில்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்புடன் செயல்பட்டு பாதிக்கப்படும் மக்களுக்கு துணை நிற்கவில்லை என்பது கண்டனத்திற்குரியது.

கலவரத்தின் போது தன்னுயிரைக் கொடுத்து இஸ்லாமியர்களைப் பாதுகாத்த பிரேம்காந்த் பாகெல் போன்றோரும் குருத்வாராக்களை திறந்துவிட்டு இஸ்லாமியர்களைப் பாதுகாத்த சீக்கியர்களும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக நின்ற தலித் மக்களும் பல இடங்களிலும் ’இஸ்லாமியர்களைத் தாக்கவிடமாட்டோம்’ எனப் பாதுகாத்த இஸ்லாமியரல்லாத மக்களும் இருந்துள்ளனர். அரவிந்த் குணசேகரன், ஆகாஷ் போன்ற செய்தி சேகரிப்பாளர்களும் புகைப்படக்காரர்களும் உயிரைப் பணயம் வைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசுக்கு அஞ்சாமல், ”இன்னொரு ’1984’ நடப்பதை வேடிக்கைப் பார்க்கமாட்டோம்” என்று சொன்ன நீதிபதி முரளிதரன், மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விலகிய சசிகாந்த் செந்தில், கண்ணன் கோபிநாத் போன்றோர் மனசாட்சிக்கு உண்மையாக மக்களின் பக்கம் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் பாராட்டுக்குரியவர்களாவர். 

தில்லியில் நடந்திருப்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையும். இந்துத்துவப் பாசிச பயங்கரமுமாகும். அச்சவுணர்விலும் நம்பிக்கையிழந்தும் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு துணை நிற்க வேண்டியது சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் கடமையாகும். ஆனால், இவ்வளவு மோசமான கலவரம் நடந்திருக்கும்போதும்கூட கொஞ்சமும் கலங்காமல் தில்லியில் நடந்தது போல் சென்னையிலும் கலவரம் நடக்க வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் பேசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதையும் அவர்களின் வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதையும் கொண்டாடும் காவிப் பயங்கரவாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். 

தமிழர் என்று சொல்லுவோம் ஆர்.எஸ்.எஸ். ஐ வெல்லுவோம் என்ற முழக்கத்தை FITE தலைவர் பரிமளா வலியுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ். க்கு புரியும் மொழியில் பதிலளிக்க வேண்டும் என்ற கருத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த கனி முன்வைத்தார். இஸ்லாமியர்கள் மீதான இன அழிப்பு முயற்சியைப் பொதுசமூகம் இப்படி வேடிக்கைப் பார்ப்பது வேதனைக்குரியது என்று SIO வைச் சேர்ந்த அபுல் அசர் பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோரிக்கைகள்:

  1. வெறுப்புப் பேச்சுகளைப் பேசி கலவரத்தை தூண்டிவிட்ட பாசக தலைவர்களான கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா, அபய் வர்மா, அனுராக் தாக்கூர் போன்றோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
  2. தில்லியில் நடந்தேறியக் கலவரத்திற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.
  3. தில்லி வன்முறைக் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
  4. உயரிழந்தோர், காயம்பட்டோர், உடைமை இழந்தோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
  5. தாக்கப்பட்ட மசூதிகள், வீடுகள், பொதுவிடங்களை அரசேப் பொறுப்பேற்று புனரமைத்துக் கொடுக்க வேண்டும்.

தோழமையுடன்

செந்தில் (99419 31499)

இளந்தமிழகம்இயக்கம் 

 6,70வதுஅடிசாலை, சுப்புப்பிள்ளைதோட்டம், திநகர், சென்னை – 600 017

மின்னஞ்சல் : ilanthamizhagamiyakkam@gmail.com,

தொடர்புஎண்: 9941931499

சதீஷ், பொதுச்செயலாளர், Forum For IT Employees
கண்டன உரை,
செந்தில்
ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழகம்

One Reply to “தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கலவரம்! மத்திய பாசக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! ஊடகச் செய்தி”

Leave a Reply to JamesAlult Cancel reply

Your email address will not be published. Required fields are marked *