புலம் பெயர் தொழிலாளர் நிலை – உழைக்கும் வர்க்கம் மீதான தாக்குதலின் முன்னோட்டமே!

COVID-19 வைரஸிற்கு எதிரான நடவடிக்கை இந்தியாவின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக மாறி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 10 கோடிக்கு அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (மாநிலங்கிலுக்கு இடையிலான) இருப்பதாக கணக்கிடபட்டுள்ளதாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தது. அவர்களில் பெரும்பாலானோர் ஊரடங்கின் போது வாழ்வாதாரத்தை இழந்திருக்க கூடும். அவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களை இழந்தும் தங்கள் குடும்பங்களுக்கு தேவையான உணவு மற்றும் உறைவிடத்தை இழந்தும் அல்லல்பட்டு வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படும் இவர்களில் பெரும்பாலானோர் உண்மையில் தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கட்டுமான நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், சந்தைகள் மற்றும் விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்.

நவதாராளவாத முதலாளித்துவம் இந்த  தொழிலாளர்களை தனது லாபத்திற்காக முறைப்படுத்தாமல் வைத்திருக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நீண்ட காலமாக பணியாற்றுவதற்காக கிராமப்புறங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து நகரத்திற்கோ அல்லது தொழிற்சாலை பகுதிகளுக்கோ வரும் இந்த தொழிலாளர்கள் நிரந்தர வேலை, வருமானம், சமூக அங்கீகாரம், சொந்தமாக உறைவிடம் ஆகியவை இல்லாததால், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” என்றே அழைக்கப்படுகிறார்கள். சுதந்திரத்திற்குப் பின்னான காலக்கட்டங்களில் தங்கள் பணியிடத்திற்கு அருகில் குடியமர்ந்து உள்ளூர் சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிய முதல் தலைமுறை தொழிலாள வர்க்கத்தை போல் அல்லாமல்  இன்றைய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் (90 சதவீதம்) வேலை செய்யும் இடங்களுக்கு அருகில் குடியமர இயலாத சாதாரண தினசரி கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கின்றனர்.

இதனால் இவர்களின் நிலைமையை ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் கூறிய “முதலாளித்துவ சுரண்டலின் ஆரம்பநிலை” என்று வர்ணிக்க முடியும். இதன் கீழ் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மிகவும் அடிப்படை சுரண்டலை எதிர்கொள்வார்கள். இதை ஏங்கல்ஸ் 1845 இல் எழுதப்பட்ட தனது இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள்‘  என்ற புத்தகத்தில் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். இன்றைய நிலைமையின் வேறுபாடு என்னவென்றால் இந்த அடிப்படையான சுரண்டல் வடிவங்களின் மேல் உற்பத்தி முறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய விநியோக கட்டமைப்பின் உருவாக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி தீவிரப்படுத்தப்பட்ட புதிய வடிவங்களிலான சுரணடல்களும் சுமத்தப்மடுகின்றன.

கொரோனா தொற்றுநோயின் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளின் சுமைகளை சுமக்கப் போவது தொழிலாள வர்க்கமும் உழைக்கும் மக்களும் தான். இந்த தொற்றுநோய் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான நிலைமைகளை தற்போதைய “புலம்பெயர் தொழிலாளர் நெருக்கடி”  மூலம் தோலுரித்து காட்டியுள்ளது. இது மையநீரோட்ட ஊடகங்கள் மற்றும் பொது விவாதங்களிலிருந்து எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட ஒன்று.

தொழிலாள வர்க்கத்தின் இந்த மிகப்பெரும் பகுதியை மோடி அரசாங்கம் எவ்வாறு கருதுகிறது என்பதும் தொற்றுநோயால் அம்பலமாகியுள்ளது. எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஊரடங்கின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் நலிந்த பிரிவினருக்கு பேரழிவை ஏற்படுத்திய பின்னர், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற  வேண்டுகோளையும் மோடி அரசு மறுத்துவிட்டது. அதையும் மீறி சொந்த ஊர் திரும்பிச் செல்ல முயன்றவர்கள் தாக்கப்பட்டனர், மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்; மற்றவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் அடைக்கப்பப்பட்டனர்.

ஏறக்குறைய 40 நாட்களுக்குப் பிறகு, மாநில அரசுகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பின்னர் பேருந்துகளில் தொழிலாளர்கள் அழைத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இது நடைமுறை சிக்கல் வாய்ந்தது மற்றும் செலவு மிக்கது என்று மாநிலங்கள் கூறியபோது, ​​இறுதியாக சிறப்பு ரயில்கள் மே 1 அன்று அறிவிக்கப்பட்டன. ஆனால் இதிலும் பயணிப்பவர்களிடம் இரயில்வே துறை கட்டணம் வசூலித்ததன் மூலம் தனது மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டியது.

உதவியற்ற தொழிலாளர்களைக் கொள்ளையடிக்கும் இந்த கொடுமையான முயற்சி குறித்து எதிர்க்கட்சிகளிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்ட அரசாங்கம், அதற்கு மழுப்பலாக  பதிலளித்தது. மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் மத்திய அரசு 85 சதவீத செலவையும்  சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் 15 சதவீத செலவையும் ஏற்று வருவதாக ஒரு திசைதிருப்பல் விளக்கத்தை வெளியிட்டார்.

இதை யாரும் நம்பாதபோது, ​​ரயில்களைக் கேட்டது மாநில அரசுகள் தான் என்று கூறி பிரச்சனையை அவர்களின் பக்கம் திருப்ப மத்திய அரசு முயன்றது. ஆனால் உண்மையான நிலவரம் என்னவென்றால், ரயில்வேயின் சுற்றறிக்கையின்படி, ஸ்லீப்பர் வகுப்பு கட்டணத்துடன் ரூ .50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களைப் பயன்படுத்த இயலவில்லை. உதாரணமாக, மும்பையில், தொழிலாளர்கள் தாங்கள் பயணிக்க தகுதியானவர்கள் என்கிற மருத்துவ சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர், அதை வாங்குவதற்கு அவர்கள் தனியார் மருத்துவர்கள் / மருத்துவமனைகளுக்கு ரூ .1,000 முதல் 5,000 வரை செலுத்த வேண்டும். இது  அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று.

மார்ச் 25 அன்று ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டபோது நிகழ்ந்ததை  போலவே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுக்களாக நீண்ட தூரம் வீட்டிற்குத் நடந்து செல்வதை மீண்டும் ஒரு முறை பார்க்க முடிந்தது. மோடி அரசு சிறப்பு இரயில்கள் மூலம் புலம்பெயர்  தொழிலாளர்களை தங்கள் ஊர்களுக்கு அழைத்து செல்லும் திட்டத்தை முன்னெடுப்பதில் தயக்கம் காட்டியது. சிறப்பு ரயில்களின் மூலம் பயணம் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தக் கோரி, மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மே 3 ம் தேதி கடிதம் எழுதினார். அந்த குழப்பமான வழிகாட்டுதலில்,  ஊரடங்கு காலத்திற்கு சற்று முன்னர் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து பணியிடங்களுக்குச் சென்று ஊர் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்ட நபர்களுக்கு மட்டுமே சிறப்பு இரயில்கள் இயக்க படுவதாக தெரிவித்தார். வீடு திரும்ப விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் பெரும்பகுதியை இந்த அறிவிப்பு நிராகரிக்கிறது.

ஊரடங்கு தளர்த்தப் படும்போது ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை குறித்தே மோடி அரசு அதிகம் கவலைப்படுவதாக தெரிகிறது. அடுக்கு மாடி கட்டிட நிறுவன லாபியின் வேண்டுகோளின் பேரில் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக் கொண்டதும் இதையே பிரதிபலிக்கிறது. தொழிலாளர்களை பீகாருக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்த இரயில்களையும் கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மலிவான தொழிலாளர் சக்தியை வற்புறுத்தலின் பேரில் சிறைபிடிப்பதே தவிர வேறு ஒன்றுமில்லை.

தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிபந்தனை சட்ட மசோதா, 2019 ஏற்றுக்கொள்ளப்படும் போது வெளி மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிலைமைகள் ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1979 ரத்து செய்யப்பட உள்ளது. இதுவரை தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படாவிட்டாலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சில குறைந்தபட்ச உரிமைகள் மற்றும் சலுகைகளை வெளி மாநில புலம்பெயர் தொழிலாளர் சட்டம் வழங்கியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தச் சட்டத்தை ரத்து செய்வது குற்றமென இந்திய தொழிற்சங்க மையம்(CITU) சுட்டிக்காட்டியுள்ளது. இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தி, அது செயல்படுவதை உறுதி செய்வதே இன்றைய தேவையாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது  நடத்தப்படும் விதம் பொதுவாக தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக வரவிருக்கும் தாக்குதல்களின் முன்னோட்டமாக அமைகிறது. ஏற்கனவே நான்கு மாநில அரசுகள் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 8 லிருந்து 12 மணி நேரமாக ஆக அதிகரித்து தற்போதுள்ள சட்டங்களையும் விதிகளையும் மாற்றியமைத்துள்ளன. ராஜஸ்தான் அரசு இதை செயல்படுத்திய பின்பு, குஜராத், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவைகளும் பின் தொடர்ந்தன. ஏப்ரல் 27 ம் தேதி முதல்வர்களுடனான வீடியோ கான்பரன்ஸில், பிரதமர் நரேந்திர மோடி அசோக் கெஹ்லோடின் ராஐஸ்தான் அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டினார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்காக வேறு மாநிலங்கள் எடுத்த வேறு எந்த முயற்சியையும் அவர் பாராட்டவில்லை.

ராஜஸ்தான் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு நரேந்திர மோடியின் பாராட்டே மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவதற்கான சமிக்ஞையாக இருந்தது. தொழிலாளர் நல ஆய்வுகளில் தளர்வுபதிவேடுகளை பராமரிப்பதில் இருந்து விலக்கு மற்றும் நிறுவனங்களின் வசதிக்கு ஏற்ப வேலை நேரங்களை மாற்ற அனுமதி போன்ற மாற்றங்களுடன் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார். மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பெயரில் புதிதாக அமைக்கப்படும்  தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர் நல நிதிக்கு ஆண்டுதோறும் ஒரு தொழிலாளிக்கு ரூ.80 வீதம் அளிக்கப்படும் நிதியிலுருந்து விலக்கு போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை செய்ய தயாராகிறது.

முதலாளிகள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியும் தொழிலாளர்களின் இழப்பால் தீர்க்கப்பட வேண்டும் என்பதே முதலாளித்துவ சட்டம். ஏற்கனவே பெரிய அளவிலான வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) தகவலினின் படி  மே 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்  வேலையின்மை விகிதம் 27.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. அது மார்ச் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.74 சதவீதமாக இருந்தது. இது மட்டுமின்றி வேலையில் இருக்கும் தொழிலாளர்களும் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பரிக்கப்பட்டு நீண்ட நேரம் மன அழுத்தத்துடன் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவார்கள். இதை தான் மோடி அரசும் ஆளும் வர்க்கமும் வரவிருக்கும் நாட்களில் நடைமுறை படுத்த உள்ளது, இதை எதிர்த்து அனைத்து தொழிற்சங்க இயக்கங்களும்  இடது மற்றும் ஜனநாயக சக்திகளும் போராட வேண்டும்.

– பிரகாஷ் காரட்

தமிழில்: சர்ஜுன்

https://www.nationalheraldindia.com/india/modi-govt-is-at-war-with-workers-during-pandemic-poor-are-paying-the-price-for-its-own-failures?fbclid=IwAR2T3xGQ-jjb7c9O0V4Sf7tzhLiDr2DCZX_X9R67Qh5b0EDuQYLDpdoHoWI
மொழிபெயர்ப்பாளர் குறிப்புதமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனது ஒப்பந்த பணிகளை முடிப்பதற்காக L&T நிறுவனம் புலம்பெயர் தொழிலாளர்களை மிக மோசமான சூழலில் தடுத்து வைத்துள்ளது, அதேபோல சென்னை மெட்ரோ நிறுவன பணியில் துணை ஒப்பந்ததாரராக இருக்கும் சரஸ்வதி என்ஜினியரிங் நிறுவனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தொழிலாளர் முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறது, இது தவிர தினசரி பத்திரிகைகளில் திருப்பூர் கோயம்புத்தூர் போன்ற பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களுடைய பல்வேறு சாலை மறியல் போராட்டங்கள் ரிப்போர்ட் ஆக வந்துள்ளன ,ஆனால் எடப்பாடி அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் செய்த தினத்திலிருந்து அவர்களை சிறப்பாக உணவு கொடுத்து பாதுகாப்பாக 2 லட்சம் பேரை தங்க வைத்திருப்பதாக கதை அளந்து வருகிறது ,கர்நாடகாவின் எடியூரப்பா மகாராஷ்டிரா குஜராத் போன்ற மாநிலத்தின் முதல்வர்கள் வெளிப்படையாக முதலாளிகளின் பேச்சைக்கேட்டு அவர்களுக்கு கங்காணி வேலை பார்ப்பதை வெளிப்படையாக அறிவித்தார்கள், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மறுத்தார்கள் அத்தோடு உத்தரபிரதேச  யோகியை தொடர்புகொண்டு தொழிலாளர்களை திரும்பி அழைக்காதீர்கள் என்ற கோரிக்கையையும் விடுத்தார்கள், ஆனால் இதுபோன்று எதையும் வெளிப்படையாக செய்யாத எடப்பாடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக இன்று அறிவித்துள்ள பழனிச்சாமி மேற்குறிப்பிட்டுள்ள சட்டவிரோதமாக நடக்கிற தொழிலாளர் வதை முகாம்களை அனுமதிக்கிறதா என்ற கேள்வியை இந்நேரத்திலே எழுப்புகிறோம். புலம்பெயர் தொழிலாளிகளை அழைத்து வருகிற தமிழ் லேபர் காண்ட்ராக்ட் முதலாளிகளை குற்றம்சாட்டாத, தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு அடி மாடுகளை போல பயன்படுத்துகிற கார்ப்பரேட் கும்பலை குற்றம்சாட்டாத, புலம்பெயர் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தி புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்காமல், தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கான வேலையையும் அதிக பட்ச கூலி உத்தரவாதத்தையும் பாதுகாக்காமல், சட்டவிரோத வேலைபார்த்த கங்காணி அரசை கண்டிக்காத, சில மாதங்களுக்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென சென்ட்ரலை மறித்த இனவாத அரசியல் பேசுவோரும், இப்போது தங்கள் அரசியல் நலனில் இருந்தும் துயர் படுகின்ற தொழிலாளர் நலனில் இருந்தும், புலம்பெயர் தொழிலாளர்களை வதை முகாமில் இருந்து விடுவித்து பாதுகாப்பாக அவர்களைத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுக்க வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *