சீனா, அமெரிக்கா செய்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பாதியைக்கூட தொடவில்லை இந்தியா!

சீனாவின் வுஹான் மாகாணத்தின் சுகாதார ஆணையம், நிமோனியா அறிகுறியுடன் கூடிய  தொற்றுநோய்ப் பரவலுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து அறிவிப்புக் கொடுத்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. கொரோனாவின்  தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தினரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் வெளிப்படை அற்ற தன்மை காரணம் காட்டி சீனாவைப் பழி சுமத்திக்கொண்டிருக்கிறார்கள்.  டிசம்பர் 31-ல் வெறும் 27 தொற்றுகளுடன் ஆரம்பித்த கொரோனா இரண்டு மாதங்களில் 80,000 பேரைச் சீனாவில், குறிப்பாக  வுஹான்  மாகாணத்தில் பாதித்தது. சீனாவில் மார்ச் முதல் வாரத்திலிருந்து ஜூன் முதல் வாரம்வரை புதிய தொற்றுகளின் எண்ணிக்கை வெறும் 3000+ மட்டுமே.

சீனா கொரோனா பரிசோதனைகள்

சீன அரசின் அதிகாரிகள் இதுகுறித்த தரவுகளை வழங்கியுள்ளனர்.  சீனா வழங்கியுள்ள இந்த தரவுகளின்படி, மே 14 முதல் ஜூன் 2 வரை மட்டும் வுஹான் நகர் முழுவதும் 98,99,828 (99 லட்சம்) நகரவாசிகளைச் சோதனை செய்து 300 அறிகுறிகளற்ற கொரோனா நோயாளிகளை மட்டுமே கண்டுபிடித்துள்ளது. இது சோதனை செய்யப்பட்டுள்ள மொத்த மாதிரிகளில் வெறும் 0.00303% மட்டுமே.  இதற்காக  950 கோடி இந்திய ரூபாய்க்கு நிகரான பணத்தை வுஹான் அரசு செலவு செய்துள்ளது.

புகழ்பெற்ற சீன தொற்றுநோயியல் நிபுணரான லி லான்ஜுவான், “வுஹான் பாதுகாப்பாகவும், மக்கள் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்” என்று கூறுகிறார். நகரம் முழுவதும் சோதனையைத் திட்டமிட்டபடி நடத்தி முடிப்பதற்காக 23 பரிசோதனை மையங்களை 63 என்னும் அளவுக்கு மூன்று  மடங்காக உயர்த்தியுள்ளது.

குறைந்த நேரத்தில் அதிக சோதனைகளைச் செய்துமுடிக்க ஒருங்கிணைந்த சோதனை (combined testing)  முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த சோதனை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட (ஐந்து மாதிரிகள் வரை) மாதிரிகளை ஒன்றிணைத்து ஒருமுறை சோதிக்கும் முறை. இத்தகைய நடவடிக்கைகளால், வுஹான் தனது தினசரி சோதனை திறனை 3 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தியுள்ளது. சோதனையின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக, வுஹான் சுகாதார ஆணையம் 35,961 மாதிரிகளை மீண்டும் சோதித்து, முந்தைய முடிவுகளிலிருந்து எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

ஏப்ரல் 8 ஆம் தேதி, வுஹான் ஊரடங்கை நீக்கியது, ஆனால் வுஹான் மக்களின் “உளவியல்ரீதியாக ஊரடங்கு” நகரெங்கும் நடத்தப்பட்ட சோதனைக்குப்பின்தான் நீக்கியுள்ளது. வுஹானின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் துறை, நகரத்தின் குடிநீர், வாகனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் செல்லப்பிராணிகளின் 2,314 மாதிரிகளையும் பரிசோதித்து, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்துள்ளது.

அமெரிக்கா, கொரோனா பரிசோதனைகள் ஒரு ஒப்பீடு

வுகானில் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து இதுவரை 50,340 பேர் பாதிப்புக்குள்ளாகியும், 3,869 பேர் இறந்தும் உள்ளனர். வுகானில் இறப்பு விகிதமானது 7.6% எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜூன் 5 வரை  19 லட்சம் பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகியும் அதில் 1, 11,000 பேர் இறந்தும் உள்ளனர், இறப்பு விகிதமானது 5.7 ஆகும். மிகவும் பாதிப்புக்குள்ளான நியூயார்க் மாகாணத்தில் 3,90,000 பேர்  நோய்த்தொற்றுக்குள்ளாகியும் அதில் 30,000 பேர் இறந்தும் உள்ளனர், இறப்பு விகிதமானது 7.9.

அமெரிக்காவில் இதுவரை (ஜூன் 5) 1 கோடியே 90 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்த மக்கள்தொகையான 33 கோடியில் இது 5.7 சதவீதமாகும். சீனாவுடன் இதனை ஒப்பிட்டால், வுஹான் மாகாணத்தில் மட்டும் 1 கொடியே 8 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. வுஹான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையில் 99 % மக்கள் கொரோனா சோனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏப்ரல் கடைசி மாதத்தில் சீனாவில் தீவிர சிகிச்சையிலிருந்து குணமானோர்களின் சதவீதம் 39.1 லிருந்து 92.2 ஆக உயர்ந்துள்ளது. ஒப்பீட்டுக்காக, The Lance என்னும் மருத்துவ பத்திரிக்கையில் வெளியான தகவலின்படி மே மாதம் தீவிர சிகிச்சையிலிருந்து வந்த 257 நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த நோயாளிகளில் 37% பேர் இறந்துள்ளனர்.

ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள்தொகையில் 1000 பேருக்கு 59 பேர் என்னும் அளவில் இதுவரை சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா, கொரோனா பரிசோதனைகள்

பெருகிவரும் கொரோனா தொற்று குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளிக்கையில், ‘அமெரிக்கா போல அதிகம் சோதனைகள் செய்தால் இந்தியாவில் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்’ என்று கூறியுள்ளார். வழக்கத்திற்கு மாறாக இந்த கருத்தானது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்தியாவின் உண்மையான பாதிப்பை அறியவேண்டுமானால் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் சோதனையை விரிவுபடுத்தினாலே அறிய முடியும் என இந்திய மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே பரிந்துரை செய்துவருகின்றனர்.

சீனா, நாடுமுழுவதுக்கும் சோதனையை விரிவுபடுத்தாவிட்டாலும், பாதிப்புக்கு உள்ளான வுஹான் மாகாணத்தில் 99% மக்களுக்கும் சோதனையை விரிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு கருதி  குடிநீர், செல்லப்பிராணிகளின் என 2000க்கும் மேற்பட்ட  சோதனைகளை மேற்கொண்டுள்ளது. ஜூன் 5 நிலவரப்படி 43 லட்சம் மாதிரிகளை இந்தியா இதுவரை சோதனை செய்துள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால்  இதன் சதவீதம் 0.318 ஆகும், ஆனால் அமெரிக்காவின் சதவீதம் 5.7 %. அதாவது 1000 பேருக்கு 3 பேருக்கு மட்டுமே இந்தியா  சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஒப்பீட்டுக்காக 10 லட்சம் பேரில் சோதனைகள் செய்யப்பட்டுள்ளொருக்கும், அதில் தொற்று பாதிப்பு உறுதியானவர்களுக்குமான வரைபடம்  கொடுக்கப்பட்டுள்ளது.

  • அமெரிக்கா 10 லட்சம் பேரில் 1500 பேருக்கு சோதனை மேற்கொண்டு அதில் 64 பேருக்கு கொரோனா உறுதிசெய்கிறது (4.2%).
  • இங்கிலாந்து 10 லட்சம் பேரில் 1010 பேருக்கு  சோதனை மேற்கொண்டு அதில் 26 பேருக்கு கொரோனா உறுதிசெய்கிறது  (2.5 %).
  • இத்தாலி 10 லட்சம் பேரில்  866 பேருக்கு  சோதனை மேற்கொண்டு அதில் 5.3 பேருக்கு கொரோனா உறுதிசெய்கிறது  (0.61 %).

அனால் இந்தியா 10 லட்சம் பேரில் வெறும்  78 பேருக்கு  சோதனை மேற்கொண்டு அதில் 6.25 பேருக்கு கொரோனா உறுதிசெய்கிறது  (8 %).

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்படும் சதவீதம் மிக அதிகமாகவும், சோதனைகளின் எண்ணிக்கை குறைவாகவும்  உள்ளது. சோதனைகளை விரிவுபடுத்தினால் மட்டுமே உண்மையான கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை கணிக்கக்கூட முடியும்.

  • ராதா
https://www.globaltimes.cn/content/1190311.shtml
https://www.covid19india.org/
https://ourworldindata.org/coronavirus-testing
https://www.worldometers.info/coronavirus/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *