இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

-ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை

கொரோனாவின் வருகை. வரலாற்று வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டியவர்களாக தமிழ் மக்களாகிய நாமும் உள்ளோம். கொரோனா ஏற்படுத்தும் அரசியல் பொருளியல் சங்கிலித் தொடர் நிகழ்வுகளால் எழப்போகும் போராட்டங்களும் கொரோனா போலவே உலகெங்கும் பரவுவது திண்ணம். மென்மேலும் மக்கள்திரளின் காலமாக எதிர்காலம் விரிகிறது. ஆயினும் அந்த மக்கள்திரளின் கருத்தை அறிவதற்குத் தேர்தல் வழியாக அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெயராளர்களின் கருத்தையே இன்றைய பன்னாட்டுலக அரசுகள் கோரி நிற்கின்றன. இது அரசியலில் ஒரு குடியாட்சிய மரபாக வளர்ந்து வந்திருக்கக் காண்கிறோம்.

ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட நாடாளுமன்றத்திற்கான இடங்களைப் பிடிப்பதால் இலங்கைத் தீவுக்குள் ஈழத் தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், இலங்கைத் தீவுக்கு வெளியே பன்னாட்டரங்கில் தமிழர்களின் வேணவாக்களை வெளிப்படுத்துவதற்கு இந்த நாடாளுமன்ற இடங்களை யார் நிரப்புகிறார்கள் என்பது முகன்மை உடையதாகிறது.

உலகெங்கும் தேர்தலில் மக்களின் அன்றாட வாழ்வாதாரச் சிக்கல்கள் நிகழ்ச்சி நிரலாகின்றன. ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை சுதந்திரம் பெற்ற இலங்கையில் நடந்த எல்லா நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அதன் மையப் பொருளாய்த் தமிழ் மக்கள் ஏதோ ஒரு வகையில் தமிழ்த் தேசியக் குறிக்கோளை முன்னிறுத்தத் தவறியதில்லை. அது மட்டுமின்றி, கரை சேர்க்கும் துடுப்பென்று நம்பி பற்றிப் பிடித்தவிடத்து கடலில் மூழ்கடிக்கும் கல்லைப் போல் தீங்கிழைத்த எவரையும் தமிழர்கள் கைகழுவத் தவறியதில்லை.

பதவிக்காக சிங்கள ஆளும் குழாத்திடம் விலைபோன ஜி.ஜி. பொன்னம்பலத்தை 1955ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஓரங்கட்டியவர்கள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாட்சி கோரிய தமிழரசுக் கட்சி தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகளே ஆன நிலையில், எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை தமக்குத் தலைமை ஏற்க வைத்தவர்கள் தமிழர்கள். 1955 முதல் 1976இல் அவர் மறையும் வரை தமிழர்களின் தன்னேரில்லாத் தலைவராக அறியப்பட்டார். 1972இல் இயற்றப்பட்ட சிறிலங்கா குடியரசு யாப்பை தமிழர்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டும் விதமாக 1975இல் காங்கேசன்துறை இடைதேர்தலில் அவர் போட்டியிட்ட போது அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் கட்டுப்பணம் கூட பெற முடியாமல் தோல்வி கண்டார். தமிழர்களுக்கு இறைமையுள்ள தனியரசு மீதான வேட்கை  அவரது  தலைமையிலேயே வட்டுக்கோட்டை தீர்மானமாயிற்று. தமிழீழ அரசமைப்பதற்கான மக்களாணை கோரித் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் களங்கண்ட போது அக்கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தமிழ் மக்கள் வழங்கினர். தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தலைவர்கள் சிங்கள ஆட்சியாளர்களோடு கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டனர். ’அமிர் அண்ணாச்சி நிழல் அரசாங்கம் என்னாச்சு’ என்று கேட்கத் தொடங்கி, அமிர்தலிங்கத்தை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த தயங்கவில்லை தமிழர்கள், வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான போராட்டப் பயணத்தில் சிங்கள பெளத்தப் பேரினவாத அரசியலுக்கு எதிரான ஒரு போராட்டக் களமாகவே நாடாளுமன்றத் தேர்தலைக் கைகொண்டு வந்தவர்கள் தமிழர்கள்.

இடிபோல் தாக்கிய முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னான இந்தப் பதினோர் ஆண்டுகளில் தமிழ் மக்கள் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். ஆகஸ்ட் 5 ஆம் நாள் சிறிலங்காவில் நடக்கவிருப்பது முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல். போருக்குப் பிந்தைய நிலைகுலைந்த வாழ்க்கையில், ஆதரவற்றோர், உறவுகளை இழந்து வாடுவோர், வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தத்தளிப்போர் என அன்றாட வாழ்வின் துயரத்தையும் நெருக்கடிகளையும் சொல்லி மாளாது. இந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க சிற்சில வாய்ப்புகளை வழங்கக் கூடிய ஒன்றாக தமிழ் மக்கள் இத்தேர்தலைக் கருதக் கூடும்.

அதேநேரத்தில் இந்த நெருக்கடிகளுக்கு எல்லாம் அடிப்படையாய் இருக்கும் இனப் பிரச்சனை தொடர்பில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்தவை என்ன?  நல்லாட்சி, நல்லரசாங்கம், நல்லிணக்கம் என்பவை எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகி விட்டன. ”புதிய யாப்பொன்றின் வழியே ஒற்றையாட்சிக்குள் சமஷ்டித் தீர்வொன்று வரும்” என்று சத்தியம் செய்தவர்கள் தலைகவிழ்ந்துள்ளனர். மூன்று முறை இரணில் அரசைக் கவிழாமல் காத்த தமிழ்த் தலைவர்கள் எதிரிக்கு வெற்றிக் கனிகளைத் தந்து விட்டு தமிழ் மக்களுக்கு வெறுங்கையைக் காட்டினார்கள். எல்லாவற்றினும் உச்சமாக, இறுதிப் போரில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு கலப்புப் பொறிமுறை தேவை என ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானங்கள் வந்த போது இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கேட்டு இழுத்தடிப்புச் செய்த சிங்கள ஆட்சியாளர்களுக்குத் துணைபோன தமிழ்த் தலைவர்களின் கழுத்தறுப்பும் நடந்தது. இவ்வாண்டு தொடக்கத்தில், காணாமலாக்கப்பட்டோர் எவரும் உயிருடன் இல்லை என்றும், இறப்புச் சான்றிதழ் தரப்போவதாகவும் இறுமாப்புடன் அதிபர் கோத்தபய சொன்னார். 2015இல் தாமே முன்மொழிந்து ஏற்றுக்கொண்ட பொறுப்புக் கூறலுக்கான 30/1 தீர்மானத்தைத் தாம் ஏற்கவில்லை என்று 2020 பிப்ரவரியில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கோத்தபய இராசபக்சே தலைமையிலான சிறிலங்கா அரசு சொல்லி விட்டது. அதாவது, பன்னாட்டு விசாரணையும் இல்லை, கலப்புப் பொறிமுறையும் இல்லை என்றும் உள்நாட்டுக்குள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் இனப்படுகொலைக்குக் கவசமாக அரசுகளின் இறைமைக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டது இலங்கை அரசு. மொத்தத்தில், பன்னாட்டு அரங்கில் சிறிலங்கா அரசையும் உள்நாட்டரசியலில் தமிழ்த் தலைவர்களையும் தோலுரித்துக் காட்டிவிட்டு பன்னாட்டுப் புலனாய்வுப் படலம். தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்திருக்கிறது

வல்லரசுகளின் விருப்பங்களை எல்லாம் பின்தள்ளி சிங்கள மக்கள் தமது தலைவர்களாக இனக்கொலையாளர்களான இராசபக்சேக்களுக்கு மீண்டும் மூடிசூட்டி விட்டனர். இரணிலும் சிறிசேனாவும் சரத் பொன்சேகாவும் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர். இந்தப் பதினோர் ஆண்டுகளில் சிங்கள அரசியலில் ஒவ்வொன்றும் அததற்குரிய இடத்திற்கு வந்து விட்டாற்போலும் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. தமிழ்மக்களும் தமது அரசியல் தெரிவுகளின் வழி தமது கோரிக்கைகளை வெளிப்படுத்துவதோடு அதனதனை அததற்குரிய இடத்தில் வைப்பது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடந்திடல் வேண்டும்.

கட்டமைப்பு வகையிலான இன அழிப்பைத் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாக சிறிலங்கா முன்னெடுத்து வருகிறது.  9 மாகாணங்களும் பெளத்த சிங்களர்களுக்கே சொந்தமானவை. வடக்குகிழக்கில் ஓரடி நிலம்கூட தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ சொந்தமில்லை என்று பெளத்த பலசேனாவின் பொதுச்செயலாளர் கலசொட அத்தே ஞானதேரர் சொல்லும் நிலை உருவாகியுள்ளது. தமிழர்கள் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முகன்மை உடையதாகின்றது.

கொரோனா உலக வல்லரசுகளின் மேலாதிக்கப் போட்டியை வெளிப்படையாக்கியுள்ளது. அவற்றிற்கு இடையிலான முரண்பாடுகள் தீவிரமடையக் காண்கிறோம். அமெரிக்க – சீன முரண்பாடு இப்பிராந்தியத்தில் இந்திய – சீன முரண்பாடாய் வெடிக்கத் தொடங்கி விட்டது. காஷ்மீரின் லடாக்கில் பறந்த தீப்பொறிகள் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்திலும் பறக்கக்கூடும். இந்தியப் பெருங்கடல் சார்ந்த புவிசார் மேலாதிக்கப் போட்டியில் ஈழத்தின் அமைவிடம் சார்ந்த வலிமையைப் பயன்படுத்தித் தமது கோரிக்கைகளுக்கு ஆதிக்க அரசுகளைத் தலையாட்ட வைக்கக்கூடிய சில வாய்ப்புகள் இருக்கக் கூடும். ஆனால், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இலங்கைத் தீவுக்கு வெளியே உள்ள அரசுகளிடம் தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை முன்வைக்கக் கூடிய தலைமை தமிழர்களுக்கு இருந்தாக வேண்டும்.

கனடா, ஜெர்மனி, வட மாசிடோனியா, மாண்டிநிகரோ, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடங்கிய சிறிலங்கா தொடர்பான முதன்மைக் குழுவின் சார்பாக இங்கிலாந்தின் மனித உரிமைகளுக்கான பன்னாட்டுத் தூதர் ரீட்டா பிரெஞ்சு வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. தீர்மானத்தில் (30/1) இருந்து சிறிலங்கா வெளியேறியது தமக்கு ஏமாற்றமளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். கூடவே, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகளைப் பின்னுக்கு தள்ளி விடக் கூடாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் உயர் ஆணையர் மிச்செல் பசலே தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். பன்னாட்டுப் புலனாய்வை ஏற்க மறுத்து உள்நாட்டுப் பொறிமுறை என்று சிறிலங்கா அரசு சொன்னாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். எனவே, தமிழர்கள் உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்கிறார்களா? இல்லையா? பன்னாட்டுப் புலனாய்வைக் கோருகிறார்களா? என்பதை தமிழர்களின் பெயராளர்கள் வெளிப்படுத்துவது முகன்மையானது.

வடமாகாண சபையிலும் தமிழ்நாட்டு சட்டப் பேரவையிலும் இனவழிப்புக்கு நீதியை உறுதி செய்யப் பன்னாட்டுப் புலனாய்வு ஒன்றே வழி என்றும் அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இயற்றப்பட்ட தீர்மானங்களை உயர்த்திப் பிடிக்கக் கூடியவர்களா? என்று பார்த்துத் தமிழ்மக்கள் இத்தேர்தலில் தமது பெயராளர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

ஆகவே, நடக்கவிருக்கும் தேர்தலின் நிகழ்ச்சி நிரலாக உடனடி அன்றாட நலன்களோடு சேர்த்து இனவழிப்புக்கு நீதி பெறப் பன்னாட்டுப் புலனாய்வையும் இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வுகாணப் பொதுவாக்கெடுப்பையும் வலியுறுத்துவதை முன்வைக்க வேண்டும். இதற்கான தமிழ் மக்களின் ஆணையைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை உறுதியாகத் தொடர்ந்து முன்னெடுக்கும் அரசியல் தலைமையை வார்ப்பதற்கான களமாக இத்தேர்தலை ஈழத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,

கொளத்தூர் தா.செ.மணி, ஒருங்கிணைப்பாளர்,ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோவை இராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்

பெ.மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சுந்தரமூர்த்தி,  ஒருங்கிணைப்பாளர், தமிழர் விடுதலைக் கழகம்

செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

9941931499

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *