ஈழத் தமிழ் உறவுகளே! 1977 தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்களித்தது போல் இப்போது பன்னாட்டுப் புலனாய்வையும் பொதுவாக்கெடுப்பையும் கோரும் வடமாகாணசபை தீர்மானத்திற்கு வாக்களித்திடுக!

இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் செந்திலின் செய்தியறிக்கை

ஆகஸ்ட் 5 இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வாழ்வுக்கும் அழிவுக்கும் இடையிலான தேர்தல்; இருப்புக்கும் இறப்புக்கும் இடையிலான தேர்தல்; இன அழிப்புக்கும் இன அழிப்புக்கான நீதிக்கும் இடையிலான தேர்தல். வாழையடி வாழையாய் வாழ்ந்து மறைந்தவர்களினதும் வரப்போகிற தலைமுறைகளினதும் வரலாற்றையும் மாண்பையும் இருப்பையும் அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டிய பெரும்பொறுப்பு இன்றைக்கு வாக்களிக்கப் போகும் தமிழர்களின் கைகளில் இருக்கிறது.  

வேலியே பயிரை மேய்ந்த கதையாய் கடந்த முறை  தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் செய்த துரோகங்கள் எத்தனை எத்தனை?

இரணில் அரசோடு கூட்டு வைத்து ஆட்சியமைத்தவர்கள் இப்போது இராசபக்சேக்களுடன் கூடிப் பதவி சுகம் காணத்துடிக்கின்றார்!

சர்வதேச விசாரணைக்கு கால அவகாசம் கேட்டு உலகின் கண்ணில் மண்ணைத் தூவிய சிங்களப் பெளத்தப் பேரினவாத ரணில்-சிறிசேனாவின் கைகளாய் மாறிப்போய் தமிழர்களின் கழுத்தறுத்தார்கள்!

மூன்றுமுறை இரணில் அரசைக் கவிழாமல் பாதுகாத்து எதிரிக்கு வெற்றிக் கனிகளைந் தந்து தமிழர்களுக்கு வெறுங்கைகளைக் காட்டினார்கள்

வடக்குகிழக்கை சிங்களபெளத்தமயமாக்கி தமிழர்தம் வரலாற்றுத் தாயகத்தை இல்லாதொழிக்கப் பார்க்கும் இலங்கை அரசின் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்தார்கள்.

இவைமட்டுமின்றி, ”என் உயிரைவிடவும் பெரிதாக என் மக்களுக்காக நான் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று சொல்லி தன் உயிரைக் கொடுத்த ஆயிரமாயிரம் திலீபன்களைப் ’பயங்கரவாதிகள்’ என்று எதிரியின் காலடியில் லாவணிப் பாடினர். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?. மழை நீரைவிடவும் தூய்மையான அன்போடு தாயக கனவினில் சாவினைத் தழுவிய உங்கள் பிள்ளைகளைக் கொச்சைப்படுத்துவதை நீங்கள் இனியும் சகித்துக் கொள்ளக் கூடாது.

இவ்வண்ணம் இனப்படுகொலையை செய்தவர்களும் துணைப் போனவர்களும் கொலைகாரர்களைப் பாதுகாத்தவர்களும் தமிழ் மக்களிடம் வாக்குகேட்டு நிற்கின்றார்.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ”அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” என்று சொன்னதால் நீதிக்கொரு தெய்வமாய் நம்மால் வழிபடப்படும் கண்ணகியின் வழிவந்தவர்கள் நாமென்றால், நீதிக்கு ஊறுசெய்து இனத்தை விலைப்பேசியவர்களுக்கு விடைகொடுத்து அரசியலில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்.

இன்றைக்கு 44 ஆண்டுகளுக்கு முன்பு. 1976 இல் தமிழீழ இறைமையை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து 1977 ஜூலையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் மீது  வாக்களித்து இறைமைக் கொண்ட நாட்டுக்குப் போராடுமாறு அன்றைக்கு வாழ்ந்தவர்கள் ஆணை வழங்கினர். அதன் பெயராலேயே 48,000 க்கும் மேலானோர்  ஈழத்தின்  விடுதலைக்காக மண்ணில் விதையாய் புதையுண்டுப் போயுள்ளார்கள்.  இனப்படுகொலைக்கு ஆளாகி நிற்கும் நிலையில், பன்னாட்டுப் புலனாய்வு கோரியும் இறைமையுள்ள தமிழ்த்தேசத்திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் பெயராலான தேர்தல் இது. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு  வாக்களித்தது போல் வடமாகாண சபை தீர்மானத்திற்கு  வாக்களித்து வரலாற்றுச் சக்கரத்தை உருட்டிவிட வேண்டும் நீங்கள்.

”வீரச்சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் கொள்வாரில்லை”. என்பது பெரும்புலவன் பாரதியின் சத்திய வாக்கு. தமிழர்களின் சுதந்திர தாகத்தை உலகறியச் செய்யட்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்!

ஆகஸ்ட் 5 ஆம் நாள் தம் வீட்டிலிருந்து வாக்குச்சாவடி செல்லும்போது தமிழ்மக்களின் உணர்வுகளை, வானத்திலிருந்து இறங்கிவந்து  சிவக்குமாரனும் சங்கரும் மில்லரும் திலீபனும் மாலதியும் அங்கயற்கண்ணியும் தீபனும் நடேசனும் வழிநடத்திச் செல்லட்டும்!

செந்தில் ,

ஒருங்கினைப்பாளர்,

இளந்தமிழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *