ஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு

இதுவொரு வெற்றிப் பயணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆரவாரம் செய்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாசகவின் தமிழ் மாநிலத் தலைவரைப் போல் ஜெய்சங்கர் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததாகப் பாராட்டி அறிக்கைவிட்டார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது மூன்று நாள்          ( சன 5 – 7) பயணத்தின் போது கோத்தபயவுக்கு கொடுத்த தெம்பு, யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் சிங்கள இராணுவத்தினரால் நேற்றிரவு   ( சன 8) அகற்றப்பட்டுள்ளது.


இத்தனைக்கும் ஜெய்சங்கர் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பி ஒருநாள்கூட முடியவில்லை. மகிந்த, கோத்தபய மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசா, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகிய சிங்கள தரப்புகளை அவர் சந்தித்தார். தமிழ்த்தரப்பில் ததேகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழர் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த வியாழேந்திரன், மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் தொண்டைமான் ஆகிய தமிழர்களைச் சந்தித்தார்.


சனவரி 6 அன்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சரை சந்தித்து விட்டு இருதரப்பும் கூட்டாக சேர்ந்து தத்தமது அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிட்ட போது இந்திய தரப்பில் பயன்படுத்தப்பட்ட பின்வரும் வரிகளுக்குத் தான் உவப்பூட்டும் பொழிப்புரைகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
”As we promote peace and well-being in the region, India has been strongly committed to the unity, stability and territorial integrity of Sri Lanka. Our support for the reconciliation process in Sri Lanka is longstanding, as indeed for an inclusive political outlook that encourages ethnic harmony. It is in Sri Lanka’s own interest that the expectations of the Tamil people for equality, justice, peace and dignity within a united Sri Lanka are fulfilled. That applies equally to the commitments made by the Sri Lankan Government on meaningful devolution, including the 13th Amendment to the Constitution. The progress and prosperity of Sri Lanka will surely be advanced as a consequence.”
ஒன்றுப்பட்ட சிறிலங்காவில் சமத்துவத்திற்காகவும் நீதிக்காகவும் அமைதிக்காகவும் கண்ணியத்திற்காகவும் தமிழர்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது என்பது சிறிலங்காவின் சொந்த நலனின் பொருட்டானது. அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது சட்டத்திருத்தம் உள்ளிட்ட பொருள்பொதிந்த அதிகாரப்பகிர்வு பற்றி சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டவற்றிற்கும் இது சமஅளவில் பொருந்தும்.”
மேற்படி வரிகள்தான் இந்திய அரசு தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததாக இந்தியத் தரப்பால் விதந்தோதப் படுகின்றது. இதை விசாரணைக்கு உட்படுத்தும் முன்பு இந்தியாவுக்கு கசப்பூட்டும் சில உண்மைகளை திரும்பிப் பார்ப்போம்.
வரலாறு காணாத கூட்டணியை ( சுதந்திரக் கட்சி – ஜக்கிய தேசியக் கட்சி) அமைத்து ரணில் – சிறிசேனா தேசிய அரசாங்கம் அமைவதை அமெரிக்க தலைமையிலான மேற்குலக அரசுகளும் இந்திய அரசும் சாத்தியப்படுத்தின. சீன ஆதரவு இராசபக்சேக்கள் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்டன. இதன் பொருட்டு சிறிலங்கா அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் பன்னாட்டு அரங்கில் பேசுப் பொருளாக்கப்பட்டிருந்தன. ஐ.நா. வில் பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசம், பேருக்கென்றொரு காணாமற்போனோர் அலுவலகம், தீர்வுப் பொதி சுமந்த புதிய யாப்பு என்று நடைபோட்ட ரணில் – சிறிசேனா அரசாங்கம் பெரும்பான்மை இருந்தும் யாப்பைக் கொண்டுவர முடியவில்லை, அரசியல் தீர்வு காண முடியவில்லை. அதிபர் அதிகாரத்தைக் குறைக்கும் 19 ஆவது சட்டத்திருத்தம் அரசமைப்பில் ஏற்படுத்தப்பட்டது. ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் சிறிலங்காவைப் பாதுகாத்து வந்த போதும் சிங்களப் பேரினவாத அரசியலில் வாகை சூட முடியவில்லை. வரலாற்று நாயகராக கோத்தபய இராசபக்சே 2019 இல் அதிபராகி அரியணை ஏறினர்.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் தாமே ஒப்புக்கொண்டிருந்த 30/1 கீழ் பொறுப்புக்கூறல் தீர்மானத்தில் இருந்து கோத்தபய தலைமையிலான சிறிலங்கா விலகிக் கொண்டது. காணாமற்போனோருக்கு இறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அதிபர் அறிவித்தார். 2020 ஆகஸ்டில் மகிந்த இராசபக்சே பிரதமர் ஆனார். இந்தப் பின்புலத்தில்தான் கடந்த செப்டமர் 26 அன்று திலீபன் நினைவு நாளில் இந்திய இலங்கை உச்சி மாநாடு நடந்தது. இருநாட்டு பிரதமர்களும் இணைய வழி உரையாடினர். அப்போதும் 13 ஆவது சட்டத்திருத்தம் பற்றி பிரதமர் மோடி பேசினார். சிறிலங்காவின் மாகாணங்களுக்கான அமைச்சர் சரத் வீரசேகர, சிறுபான்மை தமிழர்களோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்த இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும் இந்திய இலங்கை உடன்பாட்டின்படி பிரிவினைப் போராளிகளிடம் இருந்து ஆயுதப் பறிப்பை இந்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது என அக்டோபர் 8 அன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பேசினார். இன்னொரு அமைச்சர் 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமலாக்கக் கோருவது இந்தியாவிற்கு தீங்காய் போய்விடும், தமிழ்நாடும் – ஈழமும் இணைந்த திராவிட நாடமைய வழிவகுக்கும் என்ற பொருள்படவும் பெரியாரை விமர்சித்தும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் காதில் தேன்பாயப் பேசினார்.
சிங்கள பெரும்பான்மை ஏற்றுக்கொள்ளாத எந்த தீர்வையும் எம்மால் தர முடியாது என்று இதற்கு முன்பே மகிந்த சொல்லியிருந்த நிலையில், கடந்த உச்சி மாநாட்டுக்கும் ஜெய்சங்கரின் இலங்கைப் பயணத்திற்கும் இடையே மேலும் சில நிகழ்ச்சிகள் இத்திசையில் நடந்துள்ளன. 19 ஆவது திருத்தத்தை செல்லாக்காசாக்கி மீண்டும் அதிபர் கையில் அதிகாரத்தைக் குவிக்கும் 20 ஆவது சட்டத்திருத்தம் அக்டோபர் 20 அன்று நிறைவேற்றப்பட்டது. இராசபக்சாக்களின் பொதுசனப் பெரமுனக் கட்சி மாகாணங்களை ஒழித்துக்கட்டுவதற்கு மக்களிடையே பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
இப்பின்புலத்திலேயே இந்த ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜெய்சங்கரின் சிறிலங்கா பயணம் அமைந்துள்ளது. பொத்தாம் பொதுவாக நீதி என்ற சொல்லை உதிர்த்த வெளியுறவு அமைச்சர், இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கான நீதி பற்றியும் பொறுப்புக்கூறல் பற்றியும் எதுவும் பேசவில்லை. பொறுப்புக்கூறுவது  அதிகம் மேற்குலகத்தினுடைய சொல்லாக இருக்கிறது. இப்பிராந்தியத்தில் நவீன அரசியலில் அத்தகைய ஓர் கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்படவில்லை. இனக்கொலைக்கு நீதி கேட்கும் தமிழர்களின் போராட்டத்தையும் தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானத்தையும் பொருட்படுத்தாமல் 13 வது சட்டத்திருத்தம் என்ற பழைய பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

எனவே, வெளியுறவு அமைச்சரிடம் சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது.

1. இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இந்திய அரசு பேரம் பேசுவதற்கு கணிசமான அளவுக்கு விடுதலைப் போராட்டக் குழுக்கள் வளர்ந்திருக்க வேண்டிய தேவை இருந்தது. அப்போது வெளியுறவுச் செயலராக இருந்தவர் பார்த்தசாரதி. எனவே, விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு துணை நின்றது. அந்தப் பின்புலத்தில் ஜெயவர்த்தனாவும் வேறுவழியின்றி உடன்படிக்கைக்கு முன்வந்தார். பிராந்தியப் பெரியண்ணன் என்பதற்கு அப்பால் இந்திய அரசு இலங்கை அரசிடம் 13 ஆவது திருத்தத்தை அமலாக்கச் சொல்வதற்கு இலங்கைக்குள் என்ன அடித்தளம் இருக்கிறது?

2. 1987 இல் இராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது போடப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதே 13 ஆவது சட்டத்திருத்தம். இராஜீவுக்குப் பிறகு சந்திரசேகர், விபி சிங், நரசிம்மராவ், ஐ.கே. குஜ்ரால், தேவ கவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங், மோடி என இத்தனைப் பிரதமரை இந்தியா கண்டுவிட்டது. மேலும், இராஜீவ் தொடங்கி நரசிம்மராவ், வாஜ்பாய், பிரனாப் முகர்ஜி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சிங், எஸ்.எம். கிருஷ்ணா, சல்மான் குர்சித், சுஷ்மா சுவராஜ் என எத்தனையோ வெளியுறவு அமைச்சர்கள் வந்துபோய் விட்டனர். 33 ஆண்டுகளாக 13 ஆவது திருத்தத்தை அமலாக்கவில்லை சிறிலங்கா. இது குறித்து இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏதேனும் மீளாய்வோ புரிந்துணர்வோ மதிப்பீடோ உண்டா?

3. ”விடுதலைப் புலிகள் தடையாய் இருந்தனர்” என்று சொல்லப்படுமாயின் வடக்கு கிழக்கு இணைப்பைக் கெடுத்தது விடுதலைப் புலிகளா அல்லது சிறிலங்கா நீதிமன்றமா? விடுதலைப் புலிகள் இராணுவத் தோல்விக்குள்ளாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் ஏன் 13 ஆவது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு நடந்தேறவில்லை? இந்தியாவின் விருப்பப்படி ரணில் – சிறிசேனா அரசாவது 13 ஆவது திருத்தத்திற்கிணங்க அதிகாரப் பகிர்வு செய்திருக்கலாமே!

4. துட்டகைமுன்னின் நவீன ஆளுருவமாக பார்க்கப்படும் இராசபக்சே வரலாறு காணாத வகையில் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை பெற்றிருப்பது தற்செயலானதா? அந்நிய நாடுகளின் தலையீட்டினால் தம் நாட்டின் அதிபர் தேர்வு செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கள பெளத்த பேரினவாத சிந்தனை குழாம் இலக்கு வைத்து வேலைப் பார்த்ததன் விளைவல்லவா இது? சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று அதிபராகியிருக்கும் கோத்தபய 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமலாக்குவதற்கான வரலாற்று அடிப்படைகளோ அல்லது சமூக அரசியல் நிலைமைகளோ அங்கு இல்லவே இல்லை.
ஜெய்சங்கர் 13 ஆவது திருத்தத்தை அமலாக்க வலியுறுத்திய அதே உரையின் தொடர்ச்சியாக பேசிய சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மிகத் தெளிவாகவே பின்வருமாறு சொன்னார்
”His Excellency President Gotabaya Rajapaksa firmly stated that he is committed to the wellbeing progress and opportunities of all our citizens Sinhala, Tamil, Muslim and all.”

சிங்களர், தமிழர், முஸ்லிம் மற்றும் தமது எல்லாக் குடிமக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், வாய்ப்புகளுக்கு உறுதிபூண்டுள்ளார் என்பதை அதிபர் கோத்தபய திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பதே இதன் பொருள்.
அதாவது தமிழர்களை ஒரு மொழிவழி இனமாகவோ வடக்கு கிழக்கைத் தமிழர் தாயகமாகவோ எந்த நாளும் சிறிலங்கா அரசு ஏற்றதில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் இதே சொற்பிரயோகங்களை சிறிலங்கா மேற்கொண்டுள்ளது.

கொரோனா நெருக்கடி உலகுக்கே பொதுவானது. உலக நலவாழ்வு மையம்(WHO) வழிகாட்டுதலை வழங்கியிருந்தது. கொரோனாவால் மரணிக்கும் உடல்களைப் பாதுகாப்பாக புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்யலாம் என்பதும் ஒரு வழிகாட்டல். இந்தியாவில் அவரவர் வழக்கப்படி புதைப்பதோ அல்லது எரிப்பதோ நடந்ததைக் கண்டோம். ஆனால், சிறிலங்காவிலோ சிங்கள பெளத்தப் பேரினவாத அரசு கொரோனாவில் மரணமடைந்த இஸ்லாமியர்தம் உடல்களை நல்லடக்கம் செய்யவிடாமல் எரியூட்டி பண்பாட்டுத் தாக்குதல் நடத்தக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்தியது. இதுதான் சிறிலங்கா!

ஜெயசங்கர் தமிழர்களுக்காக குரல் கொடுத்தார், மோடியின் கருத்தைப் பிரதிபலித்தார் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே யாழ் பல்கலைக் கழகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இரவோடு இரவாக சிங்கள இராணுவத்தினரால் அகற்றப்பட்டுவிட்டது. இதுதான் ஜெய்சங்கர் – கோத்தபய சந்திப்பினால் தமிழர்களுக்கு கிட்டியுள்ள புத்தாண்டு பரிசு போலும்.
சனநாயகத்தின் பாற்பட்டும் நீதியின் பாற்பட்டும் தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானத்தின் பாற்பட்டும் ஈழத் தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி பெற பன்னாட்டுப் புலனாய்வும் அரசியல் தீர்வுக்குப் பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். இதுவே இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கும். மோடியோ அல்லது ஜெய்சங்கரோ எந்த சாகசக்காரராலும் வரலாற்று விதிகளுக்கு முரணாகவும் சிங்கள மற்றும் தமிழ் தரப்பின் உருண்டு திரண்ட விருப்பங்களுக்கு மாறாகவும் நிகழ்ச்சிகளை வளைத்துவிட முடியாது.

சிறிலங்காவில் உள்ள இனச்சிக்கல் குறித்து சிறிலங்காவைச் சேராத இருபெரும் ஆளுமைகளின் கூற்றுக்கு இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் செவி மடுப்பார்களாக!

1. ”இலங்கை தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே அரசியல் – பொருளாதார – சமூக காரணிகளையும்        தாண்டி அவற்றிற்கும் அப்பால் ஆழமான உளவியல் ரீதியானதும் உணர்ச்சிவசம் கொண்டதுமான அதலபாதாள வேறுபாடு இருப்பதை புரிந்து கொள்ளத் தேவையான போதியளவு அறிவு அவரிடமும்( திரு. ராஜீவ் காந்தி) மற்றும் அவருக்கு ஆலோசனை கூறிய எங்கள் அனைவரிடமும் இருக்கவில்லை” – ஜே.என். தீட்சித். கொழும்பு அசைன்மண்ட் பக். 350 ( இவர் 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்ட போது இந்திய உயர் ஆணையராக இருந்தவர், பின் இந்தியாவின் வெளியுறவு செயலாளராகவும் இறுதியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியவர்)

2. “இரண்டு சமூகங்களுக்கும் ( தமிழ் – சிங்களம்) இடையிலிருந்த நீண்ட காலப் பகைமை பற்றி எமது ஆணைக் குழு குறைந்த அளவு அறிவையே கொண்டிருந்தது. இன்றைய இலங்கை மக்களின் வாழ்வில் சகிக்கவியலாத துயர் தோய்ந்த, தாக்கத்தை ஏற்படுத்துகின்றதான பல நூற்றாண்டு கால குழப்பம் நிறைந்த, இலங்கையில் வரலாற்றுப் பின்னணியில் மேற்படி ஃபார்மரின் இந்த நூல் எமக்கு அப்போது கிடைத்திருந்தால் குறைந்தபட்ச நம்பிக்கை கொள்ளக்கூடிய அளவிற்கான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் “– சோல்பரி பிரபு ( இவர் சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பை 1947 ஆம் ஆண்டு எழுதிய சோல்பரி ஆணைக் குழுவின் தலைவராக இருந்தவரும் சுதந்திர இலங்கையின் முதலாவது ஆளுநராக இருந்தவரும் ஆவார். 1963 ஆம் ஆண்டு பி.எம்.ஃபார்மர் என்ற பேராசிரியர் எழுதிய நூலான Ceylon: A Divided Nation என்ற அணிந்துரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்)

– செந்தில், இளந்தமிழகம்

9941931499

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *