சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 10 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா?
பசித்த வயிறோடு உணவின்றி உறங்கச் செல்வோரைவிடவும் நீதிக்கான பசியோடு கண்மூடிப் போவோர் இவ்வுலகில் அதிகம். நீதி, நீதி, நீதிக்குதான் இங்கே தலைவிரித்தாடும் பஞ்சம்.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23 இல் நிறைவடைகிறது. சிறிலங்கா அரசு செய்த இனவழிப்புக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றிற்காக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா அரசை நிறுத்த வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை. இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைவுத் தீர்மானத்தில் இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில் இக்கோரிக்கையையும் கூடவே சாட்சிகளைப் பாதுகாத்தல், சிறப்பு பிரதிநிதி நியமித்தல், அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்துதல் ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி இலண்டனில் தமிழ்ப்பெண் ஒருவர் சாகும்வரை பட்டினிக் கிடக்கும் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளார். அவர் பெயர் திருமதி அம்பிகை செல்வக்குமார்.
இன்று 7 ஆம் நாள். தமிழ்நாட்டில் இந்த நிமிடம்வரை இப்படியொரு பட்டினிப் போராட்டம் நடப்பது பற்றி மக்களுக்கு தெரியாது. இங்கே இது ஒரு ஈர்ப்புதரும் செய்திகூட கிடையாது.
முதலாவது, இது தேர்தல் காலம். வானம் கீழே இறங்கி வந்தாலும் வங்க கடல் ஊர்ப் புகுந்தாலும்கூட எவரும் கண்டு கொள்ளமாட்டார். 2009 ஆண்டு மக்கள் கொத்து கொத்தாய் முள்ளிவாய்க்காலில் செத்து மடிந்து கொண்டிருந்தபோதே தமிழ்நாடு மக்களவைத் தேர்தலில் மூழ்கிப் போயிருந்தது. எனவே, இது பழகிப்போன உண்மையாகி விட்டது.
அடுத்தது, பேருக்கு தான் இது தமிழ்நாடு. இங்கே தமிழர்கள் கிடையாது. தேவர், பறையர், ரெட்டியார், முதலியார், கவுண்டர், நாயுடு, பார்ப்பனர், நாடார், செட்டியார் என சாதியினர் பலர் உண்டிங்கே. தமிழர்களென்று கருதிக் கொள்வோர் மிக குறைவு. எனவே, அம்பிகையின் பட்டினிப் போராட்டத்தோடு இவர்களால் உணர்வுபூர்வமாக இணைந்து கொள்ள முடியவில்லை. அதுவே தன் சாதித் தலைவரின் சிலையில் ஒரு சின்ன கீறல் விழுந்திருந்தால் துடிதுடித்துப் போவார்கள். இதுதான் இன்றைய கள யதார்த்தம்.
”ஐ.ஐ.டி.யில் பார்ப்பனர்கள் கோலோச்சுகிறார்கள்” என்பதற்கு சீற்றம் கொள்ளும் ஒருவர், இலட்சம் பேர் கொல்லப்பட்டதை கடந்து சென்றால், அதற்கு நீதி பெறுவது முக்கியமல்ல என்று கருதினால் அதை எப்படி புரிந்து கொள்வது? அந்த சீற்றம் சமூகநீதியின் பாற்பட்ட சீற்றமென்றால் இன அழிப்புக்கு நீதி மறுக்கப்படும்போது சீற்றம் கொள்ளாதது ஏன்? நீதி பற்றிய நம்முடைய அரசியல் இட ஒதுக்கீடு என்ற அளவில் சுருங்கிப் போய்விட்டது.
இடதுசாரி கட்சிகளுக்கோ தேசிய இனச் சிக்கல் பற்றிய கோட்பாட்டு தடை. எனவே, இராசபக்சேக்கள் செய்த இன அழிப்புக் குற்றங்களை இராசபக்சேவே விசாரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் 2019 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதாகும். இன அழிப்பு(Genocide) என்று ஏற்றுக்கொண்டால் ஈடுசெய் நீதி(Remedial Justice) என்ற வகையில் தமிழீழம் அமையக் கூடும் என்ற கவலையில் இருந்துதான் அக்கட்சிகள் முடிவு செய்கின்றன. எனவே, இக்கட்சிகளால் வழிநடத்தப்படும் பெண்ணுரிமை இயக்கங்களும்கூட தமது அக்கறையை ஈழத் தமிழ் பெண்கள் பக்கம் திருப்பமாட்டார்கள். பாலியல் அத்துமீறலுக்காக காவல் அதிகாரி இராஜேஷ் தாசை கைது செய்ய சொல்வார்கள், ஆனால், இராசபக்சேக்களை அவர்களே விசாரித்துக் கொள்ள வேண்டும் என்று கட்சி நிலைப்பாடு எடுத்துவிட்டதால் அம்பிகைக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் எனவே, சிங்களப் படையால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாக்களுக்காகவோ அல்லது போரினால் துணையிழந்த 90,000 பெண்களுக்காகவோ அல்லது இன அழிப்புக்கு எதிராக அவ்வியக்கங்கள் பேசவியலாது. இன அழிப்பு என்று ஒத்துக்கொள்ளக்கூட முடியாது. சாகும் வரையிலானப் பட்டினிப் போராட்டத்தில் இருக்கும் தமிழ்ப்பெண் அம்பிகைக்கு ஆதரவு கூட தெரிவிக்க இயலாது. ஐ.நா. மனிதவுரிமை ஆணையர் மிசேல் பசலேவின் அறிக்கை, ’மீண்டும் மாபெரும் மனிதவுரிமை மீறல்கள் நடப்பதற்கான சூழல் கனிந்து வருகிறது” என்று சுட்டிக்காட்டுகிறது. எனவே, இராசபக்சேக்கள் தலைமையிலான இலங்கையில் இனிவரும் காலங்களில் நடக்கக்கூடிய மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு செயலாற்றியாக வேண்டும்.
பாசிச எதிர்ப்பு என்பதன் முக்கியத்துவமே அது ஏற்படுத்தக் கூடிய மனிதப் பேரழிவை ஒட்டியே எழுகின்றது. 90 இலட்சம் யூதர்களில் 60 இலட்சம் பேரை இட்லரின் நாசிசம் அழித்தது. இந்துத்துவ வெறி அத்தகைய மாபெரும் மனிதப்படுகொலைகளையோ அல்லது இடப்பெயர்வையோ நிகழ்த்திவிடக் கூடாது என்ற பதற்றத்தில் பாசிசத்தை மூர்க்கமாக எதிர்க்க வேண்டியுள்ளது. ஈழ இன அழிப்பில் இருந்து பெற்ற பட்டறிவும் சனநாயக உணர்வும் இவ்விசயத்தில் நமக்கு உரமூட்டுவதாக அமைகின்றது. பாசக எதிர்ப்பில் அக்கறை கொண்டிருப்போர் ஈழ இன அழிப்புக்கு நீதி என்று வந்தால் மட்டும் இரண்டாம் பட்சமாக பார்ப்பது வேதனையளிக்கிறது.
இது உலகமய காலம். எந்தவொரு நாட்டிலாவது ஒருவருக்கு கொரோனா இருந்தால்கூட உலகம் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பமுடியாது. எனவே, ஒவ்வொருவரின் நலனில் எல்லோருடைய நலனும் தங்கியிருப்பது மிக வெளிப்படையாக தெரியக் கூடிய சகாப்தம் இது. காசுமீரில் இராணுவம் குவிந்திருக்க, ரோஹிங்கியாக்கள் ஆளில்லா தீவில் குடியமர்த்தப்பட்டிருக்க, ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு கொண்டிருக்க இந்திய துணைக்கண்டத்தில் அமைதியோ பாதுகாப்போ வளர்ச்சியோ இருக்க முடியுமா என்ன? விடுதலை என்பது பிரிக்க முடியாதது.
”போரைத் தடுக்க முடியவில்லை, அது உலக வல்லரசுகளால் முன்னெடுக்கப்பட்டது, நம்மால் என்ன செய்ய முடியும்” என கைவிரித்தவர்கள் இன்றைக்கு நீதி கோரும் போராட்டத்திற்கு என்ன பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒன்றும் கிடையாது. அன்று எப்படி இன அழிப்புக்கு இந்தியா துணைநின்றதோ அதுபோலவே இன்று இன அழிப்புக் குற்றவாளிகளைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதும் இந்தியாதான். எனவே, தமிழ்நாட்டு மக்கள் ஈழத் தமிழரின் அழிப்புக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று தப்பித்துக் கொள்ள முடியாது. இன அழிப்பு செய்த குற்றவாளிகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் குற்றத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று தப்பித்துக் கொள்ள முடியாது. ஈழ இன அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் தம் கடமையை செய்யத் தவறுவார்களாயின் வரலாற்று நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவார்கள் குற்றவாளி இந்திய அரசு அல்ல, அதற்கு உடந்தையாய் இருக்கும் தமிழக மக்களே.
கொத்துக் கொத்தாய் மக்கள் கொல்லப்பட்ட பொழுது தேர்தல் களேபரங்களில் தமிழர்கள் மூழ்கி கிடக்கிறார்கள். நீதி கோரி அம்பிகையைப் போன்றோர் பட்டினிப் போராட்டம் நடத்தும் பொழுதுகூட ஊழல் குற்றங்களுக்காக சிறை சென்று வந்தவரை வரவேற்க வீதிகளில் வரிசைக் கட்டி நின்று கொண்டிருந்தார்கள். அதிகாரமற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான இட பேர அரசியலில் மூழ்கி கிடக்கிறார்கள்.
ஈழம் வெளிநாட்டுப் பிரச்சனை. தமிழ்நாட்டு அரசியலின் தேர்தல் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று அவ்வப்போது கருத்து தெரிவிப்பவர்கள் உண்டு. ஓர் இன அழிப்புக்கு நீதி கோருவது ஒரு மைய பிரச்சனையே இல்லை என்று சொல்வது தமிழ்நாட்டின் அரசியல் மட்டத்தைக் காட்டவில்லையா? தனது சகோதர தேசிய இனத்திற்காக ஆதரவ் தெரிவிப்பது ஒரு புதிய முறையல்ல. பாலஸ்தீன விடுதலையை எல்லா அரபு நாடுகளும் ஆதரிக்கின்றன. அதுபோல், ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டு மக்கள் கவலை கொள்வதும் ஆதரவு தெரிவிப்பதும் முற்போக்கானதே ஒழிய பிற்போக்கானது அல்ல. அப்படி கவலை கொள்ளவில்லை என்பதுதான் கவலைக்குரிய பிரச்சனை. மக்களை விடவும் இதற்கு அதிகம் பொறுப்புக்கூற வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் சக்திகளே. மக்களின் நீதியுணர்வை தட்டியெழுப்புவதுதான் கடினம். சாதியுணர்வைத் தட்டியெழுப்புவது எளிது. ஆகவே, அம்பிகையின் பட்டினிப் போராட்டப் பின்புலத்தில் தமிழ்நாட்டு மக்களின் நீதியுணர்வை தட்டியெழுப்ப வேண்டும்
-செந்தில்