மார்ச் 2021 ஐநா.மனிதவுரிமைப் பேரவையில் 46/1 தீர்மானம்: வாக்களிக்காமல் கையை மடக்கியது மட்டுமின்றி தீர்மானத்தை ஓர் எல்லைக்குள் முடக்கியதும் இந்தியாதான்!
கடந்த மார்ச் 23 அன்று ஐ.நா. மனிதவுரிமை பேரவையில் இலங்கையில் பொறுப்புக்கூறல், மீளிணக்கம் மற்றும் மனிதவுரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமாவது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த அயல்நாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான உள்நாட்டுப் புலனாய்வு பற்றி பேசியது. ஆனால், இந்த தீர்மானம் உப்புச்சப்பில்லாத உள்நாட்டுப் புலனாய்வு என்பதோடு நிறுத்திக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது பற்றியும் குறிப்பில்லை. இவ்வகையில் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்பது 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தைவிடவும் பின் தங்கிப்போய்விட்டது. இத்தீர்மானத்தில் ஐநா ஆணையர் அலுவலகம் தகவலும் சான்றும் திரட்டவும் ஒழுங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டு இலங்கை அரசு 40/1 தீர்மானத்தில் இருந்து வெளியேறியது. ரணில் அரசைப் போல் இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிய கோத்தபய அரசு அணியமாயில்லை. தீர்மானத்தின் உள்ளடக்கத்தால் ஊறு நேர்ந்துவிடும் என்பதல்ல, இலங்கையின் விருப்பம் என்பது அனைத்துலக சட்டமீறல்கள் குறித்து யாரும் பேசக்கூடாது என்பதுதான். அதனால் இலங்கை அரசு இத்தீர்மானத்தை எதிர்க்கிறது.இத்தீர்மானத்தின் உள்ளடக்கத்திற்கு அப்பால் இப்போது விவாதத்திற்கு உள்ளாகி இருப்பது வேறொரு விஷயம். இந்திய அரசு இத்தீர்மானத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. மாறாக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பிரித்தானியா, ஜெர்மனி, மாலவி உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தை முன்மொழிய மேலும் 19 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான், கியூபா, வெனிசுவேலா, பொலிவியா உள்ளிட்ட 13 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்தியா இப்படி வாக்களிக்காமல்விட்டதற்காக இலங்கை அரசு இந்தியாவுக்கு நன்றியும் தெரிவித்துவிட்டது. தமிழர்கள் தரப்பிலோ, ”இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை” என்ற குற்றாய்வு எழுந்துள்ளது.முதலில் இது இலங்கைக்கு எதிரான தீர்மானமா? அல்லது இலங்கை எதிர்த்த/ விரும்பாத தீர்மானமா? ஐநா. மனிதவுரிமை ஆணையர், ”இனியும் உள்நாட்டுப் புலனாய்வை நம்பிக் கொண்டிருக்க முடியாது. இலங்கை அரசைப் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், உலகளாவிய மேலுரிமையை(Universal Jurisdiction) ஐ.நா. உறுப்பரசுகள் பயன்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தும் தமது அறிக்கையை சனவரியில் வெளியிட்டார்.
ஆனால், இலங்கைக்கான இணைத்தலைமை நாடுகளுக்கு தலைமையேற்கும் பிரித்தானிய அரசு முன்வைத்த வரைவுத் தீர்மானத்தில் பழையபடி உள்நாட்டுப் புலனாய்வுப் பற்றி பூசிமெழுகப்பட்டிருந்தது. பின்னர் அதில் பல்வேறு திருத்தங்கள் போடப்பட்டிருப்பினும் இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தும் திருத்தங்கள் செய்யப்படவில்லை.கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் மக்களின் கோரிக்கை என்பது இலங்கை அரசைப் பன்னாட்டுப் புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே. இதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஈழத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஒன்றுபட்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையில் உள்ள உறுப்பரசுகளுக்கு விண்ணப்பம் அனுப்பினர். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான எழுச்சிப் பேரணியிலும் தமிழ்மக்கள் மேற்படி கோரிக்கையையே உயர்த்திப்பிடித்தனர்.
ஐ.நா மனித உரிமைச்சபையின் 4 முன்னாள் ஆணையாளர்களும், சிறிலங்காவுக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும், இலங்கை தொடர்பான ஐநா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கோரியிருந்தார்கள்.ஓர் உருப்படியில்லாத வரைவுத் தீர்மானம் பிரித்தானிய அரசால் முன்வைக்கப்பட்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்ப்பில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி தமிழகத்தின் பிரதான கட்சிகள் இந்திய அரசின் செயல்முனைப்பைக் கோரி நின்றன. இன்னொருபுறம் பிரித்தானிய அரசு முன்வைத்திருந்த வரைவுத் தீர்மானத்தில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலண்டன் நகரில் திருமதி அம்பிகை செல்வக்குமார் கடந்த பிப்ரவரி 27 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் குதித்தார்.
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான நிழல் அமைச்சராக இருக்கும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியைச் சேர்ந்த ஸ்டீபன் கிண்ணாக் ஆசிய வெளிவிவகாரங்களுக்கான அமைச்சரான நிகல் ஆடம்ஸுக்கு எழுதிய கடிதத்தில் பிரித்தானிய அரசு தனது தார்மீக கடமையைத் தட்டிக்கழிக்கிறது, அது முன்வைத்துள்ள வரைவுத் தீர்மானம் ஐ.நா. மனிதவுரிமை ஆணையர் மிசேல் பசலேவின் பரிந்துரைகளுக்கு ஒத்திசைவாக இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை விவகாரத்தை அனுப்ப வேண்டுமானால் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் அதுவொரு தீர்மானமாக நிறைவேற வேண்டும். ஆனால், தமது வெட்டு அதிகாரத்தைப்(Veto Power) பயன்படுத்தி சீனாவும், இரசியாவும் தீர்மானத்தை தோற்கடிக்கும் என்பதுதான் பிரித்தானிய அரசு அனைத்துலகப் புலனாய்வை முன்வைக்காததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. “பாதுகாப்புப் பேரவையில் ஆதரவு… போதாமை” என்ற காரணத்தைப் படிக்கும் போது என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. சீனமோ ரசியாவோ வெட்டதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்களிக்குமுன்பே அவர்களுக்காக வாக்களிக்க நாம் யார்?” என்ற கேள்வியை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மக்டோனாஃபின் பிரித்தானிய அரசை நோக்கி எழுப்புகிறார். ஏனெனில், சிரியா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 14 முறை ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் சீனா மற்றும் இரசியாவால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனவே, ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் தோற்கடிக்கப்படும் என்பதற்காக அனைத்துலக புலனாய்வை முன்வைக்கவில்லை என்று பிரித்தானிய அரசு சொல்வது ஏற்புடையதல்ல. சீனா, இரசியா எதிராக இருப்பது பொருட்டல்ல என்றால் யார் அத்தகைய தீர்மானத்திற்கு தடையாக இருப்பது? ஒரு நிழல் பேரரசாக, ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்பு நாடுகள் பெற்றுள்ள வெட்டதிகாரத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட அரசாக இலங்கை விசயத்தில் முடிவுகளை எடுத்துவருவது இந்திய அரசுதான்.
தெற்காசியப் பிராந்தியத்தில் அனைத்துலக சட்ட மீறல்கள் தொடர்பில் அனைத்துலக புலனாய்வுக் கோரும் தீர்மானம் ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படுவது இலங்கையோடு நின்றுவிடாது. காசுமீர் விசயத்தில் இந்தியாவுக்கு எதிராக இதே குற்றச்சாட்டுகளை வைப்பதற்கான அடிப்படைகளை வழங்கும் என்ற கவலை இந்திய அரசுக்கு உண்டு. எனவே, இந்திய அரசு தேசிய இன ஒடுக்குமுறை அரசாக இருப்பதால் அதை மூடி மறைப்பதற்கு இறைமைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறது. இவ்விசயத்தில் இலங்கையோடு இந்திய அரசு ஒன்றுபடுகிறது. இதற்கு உட்பட்டதாகவே அனைத்துலக சட்டமீறல் என்ற ஆயுதத்தை இலங்கை மீது பயன்படுத்த இந்திய அரசு அனுமதிக்கும்.இந்திய அரசு தமிழர்களுக்கு சம உரிமை என்பதற்கும் ஒன்றுபட்ட இலங்கையைப் பாதுகாப்பதற்கும் இடையில் சமநிலை பேணுகிறதாம். ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையில் இதை ஒப்புக்கொண்டுள்ளது இந்திய அரசு. உண்மையில், இது தேசிய இனங்களை அடக்கியாளும் இந்தியாவின் உள்நாட்டு ஆதிக்கத்திற்கும் இந்தியா தனது நிலவெல்லைக்கு வெளியே செய்து கொண்டிருக்கும் விரிவாதிக்கத்திற்கும் இடையிலான சமநிலையே ஆகும். இந்த சமநிலைதான் ‘ஆம் – இல்லை என்று வாக்களிக்காமல் போனதற்கும்’ இந்த தீர்மானம் இப்படியொரு சொத்தை தீர்மானம் ஆனதற்கும் காரணமாகும். ஆகவே, இலங்கை தொடர்பில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கக்கூடிய தீர்மானத்தைக் கொண்டு வர முயலவில்லை என்பது முதற் குற்றச்சாட்டு. அத்தகைய தீர்மானம் வருவதை தடுத்து 13 ஆவது திருத்தம் என்பதோடு ஒரு நீர்த்துப் போன தீர்மானமாக முடிந்துபோவதை உறுதிசெய்வதும் இந்திய அரசுதான் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்காமல் விட்டது தமிழ்நாட்டுத் தேர்தலை கருத்தில் கொண்டு என்பதுகூட ஒரு மிகைப்படுத்தலே. அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தால் அது இந்திய அரசை சீனா, பாகிஸ்தானோடு நேர்க்கோட்டில் நிற்கச் செய்துவிடும். கொரோனாவுக்குப் பின்னான அனைத்துலக சூழலில் அமெரிக்க தலைமையிலான மேற்குலக முகாமில் இருக்கும் இந்தியா பிரித்தானியாவும் , ஜெர்மனியும் கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பது ஐ.நா. எனும் நாடக மேடையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இரசிக்கத்தக்க காட்சியாக இருக்காது. ஆதரித்து வாக்களித்தால் இலங்கைக்குள் இந்திய எதிர்ப்புவாதத்திற்கு வாய்ப்பளிப்பதாக போய்விடும் என்பதால், இலங்கை அரசை மனதில் வைத்து இத்தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வாக்களிக்காத ஒரு நிலையை இந்தியா எடுத்துள்ளது.இந்திய அரசு தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை என்பது இலகுவில் அதை மக்களிடம் அம்பலப்படுத்த உதவும் என்றாலும் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை முடக்கியதும் இந்திய அரசுதான் என்பதை நாம் தமிழ்மக்களிடம் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இத்தீர்மானம் தமிழர்களுக்கு நீதியை வழங்கவில்லை. உள்நாட்டுப் புலனாய்வு தமிழர்களின் கோரிக்கையல்ல, அது இலங்கை அரசின் விருப்பம். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதே தமிழர்களின் கோரிக்கை.
தோழர் செந்தில்
ஒருங்கினைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம்.