முள்ளிவாய்க்கால் – தமிழ்நாடு மறக்கலாது, தன் பொறுப்பை துறக்கலாகாது
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடத்தப்பட்ட அகழாய்வில் இரும்பைக் கண்டெடுத்த தமிழர்கள் அதன் காலம் 4200 ஆண்டுகளுக்கு முந்தையது என பெருமிதம் கொள்கின்றனர். சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்த நெல்மணிகள் தம் காலம் 3200 ஆண்டுகளுக்கு முந்தையதென முரசறைந்து நிற்கின்றன. கீழடி ’சங்க இலக்கியங்கள் அழகான கற்பனை’ என்று எள்ளி நகையாடியோரை வாயடைக்கச் செய்துள்ளது.
இத்தகைய தொன்மைக்கும் நாகரிகத்திற்கும் செழுமையானப் பண்பாட்டிற்கும் உரிய தமிழர்கள் சமகாலத்தில் கேட்க நாதியற்று கொத்து கொத்தாய் படுகொலை செய்யப்பட்டவர்கள்; அவை படுகொலைகள் மட்டுமல்ல இனவழிப்பு என்று உலகத்தை ஏற்கச்செய்ய முடியாதவர்கள்; கொல்லப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற முடியாதவர்கள்; ஏதிலிகளாய் உலகெங்கும் தஞ்சமடைந்து வாழக்கூடியவர்கள் என்பதை சமகால வரலாற்றின் பகுதியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழினம் நீதியின் குறியீடாய் கண்ணகியைப் போற்றும் இனம். அரசின் ஒடுக்குமுறையினால் நிகழக்கூடிய படுகொலைகளின் பொருட்டும் சாதி, சமய ஆதிக்கங்களின் காரணமாக நடக்கும் கொலைகளின் பொருட்டும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று பேசப்படுகிறது.
ஓர் இனத்தை முற்றாக அழிக்கும் நோக்கோடு செய்யப்படக் கூடிய படுகொலைகளைத்தான் இனவழிப்பு என்று வகைப்படுத்துகிறார்கள். மேற்குலகை சேர்ந்த மாந்த உரிமை செயற்பாட்டாளர்கள் ‘Genocide’ என்று சொல்லும் போதே அதற்குரிய கனத்துடன் சொல்கின்றனர். ஆனால், ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தைப் பற்றி தமிழ்நாட்டுத் தலைவர்கள் அதிகம் அக்கறை கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஒருபடி மேலே போய், இன்னும் எத்தனை காலத்திற்கு இதையே பேசிக் கொண்டிருப்பீர்கள் என்றும் அதை கடந்து வருமாறும் பாடம் எடுக்கின்றனர். அதாவது, மயிலாடும்பாறை, சிவகளை, கீழடி ஆகிய இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வின் வெளிச்சத்தில் தெரியவரும் தொன்மையின் முன்னால் நின்று கொண்டுதான் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை மறக்கச் சொல்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் என்பது படுகொலைகள் மட்டுமல்ல, அந்த தீவில் எஞ்சியிருக்கும் தமிழர்களை முழுமையாக இனவழிப்பு செய்வதற்கு அனைத்து கதவுகளையும் திறந்துவிட்ட நிகழ்வு. தமிழர் தரப்பில் இருந்த எதிர்ப்புப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. சிங்கள பெளத்த பேரினவாதம் தங்கு தடையற்ற இனவழிப்பு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பதின்மூன்று ஆண்டுகளில் கட்டமைப்புவகை இனவழிப்பு எவ்வித தடையும் இன்றி தமிழர்களின் தாயகமான வடக்குகிழக்குப் பகுதிகளில் நடந்து வருகிறது.
முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வதும் இனவழிப்புக்கு நீதி கோருவதும் வெறும் சடங்கோ பழிவாங்கும் உணர்ச்சியோ அல்ல. தமிழீழத் தேசிய இனத்தின் வாழ்வா? சாவா? போராட்டம் இது. அவர்களுக்கென்று தனியரசு ஒன்று இல்லையேல் ஈழத்தமிழர் என்ற தேசிய இனம் இல்லாதொழிக்கப்பட்டுவிடும்.
’எத்தனை காலம் ஆனாலும் நீதி வெல்லும்’, ’தெய்வம் நின்று கொல்லும்’ என்றெந்த கற்பனைகளும் வேண்டாம். விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஆண்டுகளுக்குள் தமிழர்கள் தமது தாயகத்திற்கும் இருப்புக்கும் ஓர் அரசியல் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளாவிடில் சிறிலங்காவில் சிங்கள பெளத்த பேரினவாதக் கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாக தமிழர்கள் மாறிப்போவார்கள்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை அதன் தலைவர்களுக்கு வரலாற்றுப் பார்வை வேண்டும். மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறிக்கப்பட்ட போது ஈழத் தமிழரும் தமிழ்நாட்டு தமிழரும் அதை தடுத்து நிறுத்தவில்லை. பின்னர், அவர்கள் பண்டங்களைப் போல் இலங்கை மற்றும் இந்திய அரசுகளால் பிரித்துக் கொள்ளப்பட்ட போது ஈழமும் தமிழ்நாடும் அதை தடுக்க தவறியது. ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட போது தமிழ்நாடு தடுக்கத் தவறியது.
தமிழர்கள் மீதான தாக்குதல், அச்சுறுத்தல் என்பது வெறும் சிங்கள பெளத்த பேரினவாதத்தால் மட்டும் நிகழவில்லை. இன்றைய சர்வதேச உலக ஒழுங்குக்கு உள்ளாக, அண்டை நாட்டு ஆக்கிரமிப்பு அரசியலுக்கு உள்ளாக நடந்துள்ளது. இப்படி அரசற்ற தேசிய இனம் சிதைத்து நசுக்கப்பட்டமை மலையகத் தமிழர்களோடு முடிந்து போகாதது போல் ஈழத் தமிழர்களோடும் முடியப் போவதில்லை என்பதை தமிழ்நாடு புரிந்து கொள்ள வேண்டும்.
அசோக எக்கநாயக்கா என்ற பேராசிரியர் சென்ற மாதம் 21 ஆம் தேதி கொழும்பு டெலிகிராப் என்ற ஆங்கில செய்தித் தளத்தில் எழுதிய கட்டுரையில், ” பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுகளினால் சிங்கள மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் என்று கூறினாலும், மகாவம்ச மனநிலையில் இருந்து அவர்கள் முற்றுமுழுதாக விடுபட்டால் மாத்திரமே, உண்மையான மாற்றத்தைக் காண முடியும்” என்று எழுதியுள்ளார். இது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு என்பது மகாவம்ச சிந்தனைக்கு ஊடாக சிங்கள பெளத்தப் பேரினவாதத்தால் தமிழின அழிப்பு அரசியலாக முன்னெடுக்கப்படுகிறது. அந்த தமிழின அழிப்பை சிங்கள பெளத்தப் பேரினவாதம் அவ்வப்போது மாறக்கூடிய உலக ஒழுங்குக்கு ஏற்றாற் போல் பிரித்தானியா, அமெரிக்கா, சீனா என இப்பிராந்தியத்திற்கு வெளியே உள்ள மேலாதிக்க அரசுகளின் உதவியோடே செய்து வருகின்றது.
இந்த இனவழிப்பு நிறைவுபெறுமாயின், பாக் நீரிணைக்கு அந்தப் பக்கமும் தமிழர்களே இருக்கிறார்கள் என்ற நிலை மாறி ப்போகும். அங்கு தமிழர்கள் இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு இயல்பாக கிடைக்கக் கூடிய நட்பும் அரணும் இல்லாமல் போய்விடும். நம்முடைய பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக கூடிய அனைத்து சாத்தியப்பாடுகளையும் அது ஏற்படுத்தும்.
ஈழத் தமிழர்கள் தொப்புள் கொடி உறவுகள் என்ற காரணத்தாலும் தமிழர்கள் இந்தியாவில் இருப்பதன் பெயரால் தமிழீழத் தமிழர்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்ற காரணத்தாலும் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு. ஆனால், இப்படி அறத்தின் பாற்பட்டு சிந்திக்க முடியாதவர்களும்கூட நீண்ட கால நோக்கில் தமிழ்நாட்டின் பாதுகாப்பு குறித்து சிந்தித்தேனும் ஈழத் தமிழர்களின் நீதிக்கும் இருப்புக்குமான போராட்டத்திற்கு துணைநிற்க முன்வர வேண்டும்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 1925 வரையான காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு தலைமை தாங்கியவர்கள் இராமநாதன் – அருணாச்சலம் சகோதரர்கள் ஆவர். 1918 ஆம் ஆண்டு அருணாச்சலம் அவர்கள் இலங்கையை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற பொருளில் பேசினார். இது பிரிட்டிஷ்காரர்களைத் திகைப்படைய செய்தது. அதுவரை காலமும் சிறுபான்மைத் தமிழர்களை அணைத்து பெரும்பான்மையினருக்கு நெருக்கடிதரும் வழமையான பிரித்தாளும் அரசியலை செய்துவந்த பிரிட்டிஷ்காரர்கள் அப்போது முதல் சிங்களப் பெரும்பான்மையினரை அணைத்து தமிழர்களுக்கு எதிராக செயல்படத் தொடங்கினர். புவிசார் அரசியல், உலகளாவிய அரசியல் போக்கு, ஆழமான வரலாற்றுப் புரிதல் எதுவும் இல்லாமல் பத்தாம் பசலித்தனமாகவும் பதவிப் பவிசுக்காகவும் தமிழ்த் தலைவர்கள் அரசியல் செய்ததன் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் போய் முடிந்தது.
அதுபோலவே, இன்றைய தமிழ்நாட்டுத் தலைவர்களும் தமிழ்நாட்டின் அமைவிடம் அது சார்ந்த புவிசார் அரசியல், உலகளாவிய சமகால அரசியல் போக்கு, அழமான வரலாற்றுப் புரிதல் பெரிதும் அற்றவர்களாய் வலம் வரக் காண்கிறோம். அவர்களுடைய நுண்மான் நுழைபுல அறிவும் போர்க்குணமும் அறச்சீற்றமும் ஈக நெஞ்சமும் இனப்பற்றும் நீதியின் பால் கொண்டிருக்கும் வேட்கையும் மக்களை நீதியின் பொருட்டு வழிநடத்தத்தக்க தலைமைத்துவப் பண்பும் முள்ளிவாய்க்கால் உலைக்களத்தின் முன்பும் அதற்குப் பின்னான போராட்டக் களத்திலும் நிறுத்துப் பார்க்கப்படும்.
ஈழத் தமிழர்களுக்கான நீதியும் பாதுகாப்பும் இல்லையேல் உலகில் வேறெங்கும் தமிழர்க்கு பாதுகாப்பும் மாண்பும் இருக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு தன்னுடைய பாதுகாப்பின் பொருட்டும் முள்ளிவாய்க்காலை மறக்கலாகாது, தன் பொறுப்பை துறக்கலாகாது.
தோழர் செந்தில்
ஒருங்கினைப்பாளர்
இளந்தமிழகம் இயக்கம்