நாடற்ற மலையகத் தமிழர்களும் குடியுரிமை திருத்தச் சட்டமும். நூல் அறிமுகம் – கருத்தரங்கம்

கீழடி, கொற்கை, சிவகளையில் மண்ணுக்கடியில் இருக்கும் தமிழர் நாகரித்தின் தொன்மையும் தனிச்சிறப்பும் வெளிக்கிளம்பும் காலமிது. இதே காலத்தில், தமிழர்கள் இனவழிப்புக்கு ஆளானவர்களாக, நடுக்கடலில் நாதியற்று சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களாக,  தரணியெங்கும் தஞ்சம் கேட்டு குடிபுகுந்துள்ள ஏதிலிகளாக – இன்னும் எத்தனையோ அடையாளங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்களுடையது என்று சொல்லிக் கொள்வதற்கு இந்த உலகில் ஒரே ஒரு அரசு கூட இல்லை என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், யாரும் அறியாத அடையாளத்தோடு தமிழினத்தில் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தான் தமிழ்நாட்டின் மறுவாழ்வு முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழ்ந்து வரும் ’நாடற்றோர்’.
யார் இந்த நாடற்றோர்? மலையகத் தமிழர், இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினர்,  தாயகம் திரும்பியோர்  என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள். சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிசாராலும் சுதந்திரத்திற்குப் பின்பு சிறிலங்கா, இந்திய அரசுகளாலும் என மூன்று அரசுகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள்.  ஏதிலி முகாம்களில் இருப்பதால் இவர்கள் ஏதிலிகளாக அறியப்படுகின்றனர். இந்தியாவின் சட்ட வரையறைப்படி இவர்கள் ‘சட்டவிரோத குடியேறிகள்’. ஆனால், உண்மையில் இவர்கள் நாடற்றவர்கள்! கடந்த 70 ஆண்டுகளாக ஏதாவது ஓர் அரசின் கீழ் குடியுரிமை பெறுவதற்காக காத்துக் கிடப்பவர்கள்.  தலைமுறை தலைமுறையாக இவர்கள் நட்டாற்றிலும் நடுக்கடலிலும் நடுத்தெருவிலும் நிறுத்தப்படுகின்றனர். 
இதுவரை சொல்லியதிலேயே மிகவும் கவலைக்குரிய ஒன்று இதுதான். இவர்கள் இப்படிப்பட்ட நிலையில் இங்கே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை, யாரும் பேசவில்லை என்பதுவே. அந்த குறையைப் போக்கி, மானமுள்ள தமிழினமே  பார்! முக்கால் நூற்றாண்டு காலமாக குடியுரிமைக்காக காத்திருப்போரின் வரலாற்றை, கடந்து வந்த காட்டாற்றுப் பாதையைப் பார்! என வெளிச்சம் போட்டிருக்கிறது இந்நூல்!

கடந்த 5.6.2022 ஞாயிறு மாலை LAAS மையத்தில் சரியாக 6 மணியளவில் கருத்தரங்கம் தொடங்கியது. முதலில் கருத்துரையாளர்கள் அனைவரும் இனைந்து நூலை வெளியிட்டனர். பின்னர் நாடற்ற மலையகத் தமிழர்களின் தற்போதைய நிலை அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தமிழக அரசும் ஒன்றிய அரசும் செய்ய வேண்டியவை என்ன என்பதை விளக்கி கருத்துரை வழங்கினர். இக்கூட்டத்திற்கு பேராசிரியர் குழந்தைசாமி தலைமை ஏற்று பேசினார். இளந்தமிழக ஒருங்கினப்பாளர் தோழர் செந்தில் அறிமுகவுரை வழங்க தோழர் மீ.த. பாண்டியன் (தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்ன்ணி), தோழர் பேரறிவாளன் (பொதுச்செயலாளர், தமிழ்ப்புலிகள் கட்சி), தோழர் ஜான் வின்செண்ட் (பொதுச்செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்), வழக்குரைஞர் ஆ.சந்தானம், வழக்குரைஞர் ரோமியா ராய்,மற்றும் திருமதி கவிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் நூலாசிரியர் தோழர் கந்தையா ஏற்புரை மற்றும் மக்களின் நிலை குறித்து ஆழமாக எடுத்துரைத்தார். இறுதியாக தோழர் ரவி நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *