மோடி – ஷா – தோவல் கூட்டணி நடத்திக் கொண்டிருக்கும் ; போரில் களப்பலியான தோழர் ஸ்டான் சுவாமிக்கு வீரவணக்கம்

ஸ்டான் சுவாமி கொல்லப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. பீமா கோரேகான்  வழக்கில் சிறைப்பட்டோர் 16 பேர். அதில் ஒருவர் அருட்தந்தை ஸ்டான் சுவாமி. தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஜார்க்கண்ட்டில் பழங்குடி மக்களின் காட்டு உரிமை, அரசமைப்பு சட்ட உரிமை, தொழிலாளர் உரிமை, நிலவுரிமை, மனித உரிமை ஆகியவற்றிற்காக பாடுபட்டவர்.
நிலம் யாருக்கு சொந்தமோ அவருக்கு நிலத்திற்கு அடியில் இருக்கும் வளங்களும் சொந்தம் என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தக் கோரினார். பஞ்சாயத்து நடைமுறைச் சட்டம் ( அட்டவணைப் பகுதிகளுக்கு நீட்டிப்புச் சட்டம்) 1996 (PESA), விதிகளை இயற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தார். ஜார்க்கண்டில் PESA முறையாக அமல்படுத்த வலியுறுத்தி அதை செய்தும் காட்டினார். அர்சமைப்பு சட்டத்தில் பட்டியல் 5 இல் சொல்லி இருப்பதன்படி பழங்குடி மக்களுக்கான ஆலோசனை மையங்களை ( Tribal Advisory Council) அமைக்க வலியுறுத்தினார். மிக முக்கியமாக நக்சல்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுப் பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு பழங்குடி இளைஞர்களுக்கு செய்யப்படும் அநீதியை வெளிக் கொண்டு வந்து சுமார் 3000 பேருக்கு பிணை வழங்கக் கோரும் பொதுநல வழக்கைத் தொடுத்தார். 

பழங்குடிகளுக்கு உழைத்ததால் ’நக்சல்’ என்று முத்திரை குத்தப்பட்டார். 2020 அக்டோபர் 8 அன்று மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கபப்ட்டார். 
இவரது அகவை 85, இவருக்குப் புற்றுநோய் இருந்தது, பார்கின்சன்ஸ் என்று சொல்லப்படும் கைநடுக்க நோய் இருந்தது, இவருக்கு குழல் வைத்த் குவளையைக்கூட கொடுக்க மறுத்தது மோடி அரசு. முதியவர் என்றோ நோய் வாய்ப்பட்டோர் என்றோ பார்க்காமல் ஈவு இரக்கமின்றி கொலை செய்யக் கூடிய கூட்டணி – பிரதமர் மோடி – உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூட்டணி.
கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு சுரங்க நிறுவனங்களை எதிர்த்தவர்கள், கார்ப்பரேட்களின் நலனுக்கு குறுக்கே நின்ற்வர்கள் 16 பேர் சிறைக் கொட்டடியில். நான்கு ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். 


காவி நிகழ்ச்சி நிரலுக்கு குறுக்கே வந்தவர்கள் மீதும் ஊபாவின் கீழ் பொய் வழக்கு , சிறைக்கொட்டடி.. உமர் காலித், சித்திக் கப்பான், சர்ஜீல் இமாம், காசுமீரைச் சேர்ந்த கவுகர் கிலானி, மசுரத் ஜாக்ரா, பீர்சாடா ஆசிக்  என பொய் வழக்கில் சிறைப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அண்மையில் மனித உரிமை காப்பாளர் தீஸ்தா செதல்வாட்,  காவிப் பயங்கரத்தை எதிர்த்த முன்னாள் டிஜிபி சிறிகுமார், ஆல்ட் செய்தி தளத்தைச் சேர்ந்த ஜுபைர் ஆகியோர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


ப்ழங்குடிகளுக்காக  வாழ்நாளெல்லாம் உழைத்த ஸ்டான் சுவாமியைக் கொன்றவர்கள், திரெளபதி முர்மு பழங்குடிப் பெண் என்பதால் ஆதரிக்குமாறு சொல்கின்றனர்.  பாசிஸ்டுகளுக்காக உழைத்த திரெள்பதி முர்முவை  பழங்குடி பெண் என்பதற்காக ஆதரிக்க முடியுமா? பாசிஸ்டுகளை எதிர்த்தால் சிறை, பாசிஸ்டுகளுக்குப்  பக்கத் துணையாய் இருந்தால் பதவி. இதுதான் இன்றைய இந்தியா அல்லது மெய்நடப்பு இந்துராஷ்டிரம்.  
திரெளபதி முர்முக்கள் வாழும் நாட்டில்தான் ஸ்டான் சுவாமிகளும் வாழ்ந்து சிறை ஏகி செத்தும் போய் இருக்கிறார்கள். இதில் எதை தெரிவு செய்யப்போகிறோம் என்பதே இன்று நம் முன்னிருக்கும் கேள்வி?
ஸ்டான் சுவாமி சிறையில் வைத்து அணுஅணுவாய்க் கொல்லப்பட்ட பொழுது அவருக்கு துணையாய் இருந்த சக கைதிகளைக் குறிப்பிட்டு தலோஜா சிறையில் மானுடம் கொப்பளிக்கிறது என்று உலகிற்கு சொன்னார். ஸ்டான் சுவாமிகளுக்கு தலோஜா சிறையிலும் மானுடம் கொப்பளிக்கிறது, மோடிகளுக்கு தாயின் காலடியிலும் கேமரா நாடகம் அரங்கேறுகிறது.
எதிரி முதியவர்,  கர்ப்பினி பெண்கள், நோய் வாய்ப்பட்டோர், ஆன்மீகத் தலைவர், அம்பேத்கர் வழி வந்தவர், மெத்தப் படித்த கல்விமான், படிக்கும் மாணவர்கள் என்ற எந்த பாகுபாடும் இன்றி எதிரி வேட்டையாடுகிறான். தன்னைப்  பெற்றெடுத்த தாய்மார்களும் தான் பெற்ற பிள்ளைகளும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள் தம் உறவுகளுக்காக. நீதிமன்றங்கள் பொய்த்துப் போய்விட்டன. ஊடகங்கள் கண் மூடிக் கொள்கின்றன. புலனாய்வு நிறுவனங்கள் பொய் சொல்கின்றன. சான்றுகள் திரிக்கப்படுகின்றன. இனி என்ன என்ற கேள்வி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது?
பழனிச்சாமிகளும் அன்புமணிகளும் கிருஷ்ணசாமிகளும் எவ்வித கூச்சமும் இன்றி பகைவரோடு கூடிக் குலாவிக் கொண்டிருக்கின்றனர். பாரதத்தில் தன் நாட்டை அடகு வைத்து சூதாடினான் தருமன்.  .அப்படிதான் தமிழ்நாட்டை அடகு வைத்து நத்திப் பிழைக்கும் அரசியிலில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.   ஒன்று இவர்கள் பாசக கூட்டணியில் இருந்து வெளிவர வேண்டும், இல்லையெனில் இவர்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழ்நாட்டில் இருந்து பிடுங்கி எறியப்பட வேண்டும்.

பாசிஸ்டுகளை எதிர்த்து நிற்போர் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். பாசிசத்தின் அறிஜீவிகளோ பதவி பவிசுகளோடு பவனி வருகிறார்கள்.  ஆனந்த் டெல்டும்டேக்களும் உமர் காலித்தளும் சிறையில் அணுஅணுவாய்க் கொல்லப்படுகின்றனர். பாண்டேக்களும் அர்னாப் கோசமிகளும் குருமூர்த்திகளும் மாரிதாசுகளும் என்றென்றும் பத்திரமாக இருக்கிறார்கள்.  பாசக ஆளுங் கட்சியாக இருக்கும் மாநிலங்களில் பாசிச எதிர்ப்பு அறிஜீவிகளைப் பந்தாடிக் கொண்டிருக்கிறது.  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலோ பாசிஸ்டுகளின் அறிஜீவிகள் எந்த சேதாரமும் இன்றி பாசிசத்திற்கு    தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றனர்.


இதுதான் மோடி – ஷா – தோவல் கூட்டணி போரை நடத்தும் விதமும் நம்மவர்கள் அதை எதிர்கொண்டிருக்கும் விதமும் ஆகும்.
எது எப்படியோ வருவதை எதிர்கொள்ள அணியமாவோம். ஸ்டான் சுவாமிகள் கொல்லபட்டிருக்கலாம் ஆனால் அவரது நினைவு மக்க்ளின் மனங்களில் பதிந்துள்ளது. அது  பாசிஸ்டுகளுக்கு எதிராக மக்களை உருட்டி திரட்டும், பெளதீக சக்தியாக வெளிப்படும்.   
தலோஜா சிறையிலும் மானுடத்தை தரிசிக்க முடிந்த ஸ்டான் சுவாமிகளை நெஞ்சில் ஏந்துவோம்! காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகள் நம் மீது திணித்துள்ள போரை எதிர்கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *