மக்கள் மீது போர் தொடுத்திருக்கும் பாசிச பாசக அரசு நாம் பார்வையாளர்களா? பங்கேற்பாளர்களா?இதற்குப் பெயர்தான் நாட்டுப்பற்றா?

அன்று ”வெள்ளையனே வெளியேறு” என்று முழங்கி ஆங்கில காலனியாதிக்கத்திற்கு எதிராய் நடத்திய போராட்டம் நாட்டுப் பற்றாய் போற்றப்பட்டது. இன்றோ, அன்னிய மூலதனமே உள்ளே வா! என்பதுதான் மோடி ஆட்சியில் நாட்டுப்பற்று! இதை எதிர்ப்பவர் தேச துரோகி!

உழவர்களே நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்பட்டது ஒரு காலம். ஆனால், கார்ப்பரேட்களே நாட்டில் வளத்தை உருவாக்குபவர்கள் என்று தலைமையமைச்சரே வக்காலத்து வாங்கும் காலமிது.

அம்பானியும் அதானியும் உலகப் பணக்காரர் வரிசையில் ஏறிச் செல்வது ஒருபுறம். அதிக ஏழைகளை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா ஏறிச் செல்வது இன்னொருபுறம். இதுதான் மோடி அரசின் அனைவருக்குமான வளர்ச்சியா? என்று கேட்டு விடாதீர்கள். நீங்கள் இந்தியாவுக்கு எதிரானவர் என்று எச்.ராஜாவால் தூற்றப்படுவீர்கள்.

உப்புக்கு வரி போட்ட வெள்ளையனுக்கு எதிராக அன்று தண்டி யாத்திரை நடத்தப்பட்டது. பாலுக்கும் அரிசிக்கும் வரிபோடும் கொள்ளையர்களுக்கு எதிராக நடத்த வேண்டாமா இன்னொரு தண்டி யாத்திரை? என்று கேட்டுவிடாதீர்கள். ’பயங்கரவாதி’ என்று உங்களை அமித் ஷாவும் அண்ணாமலையும் சொல்லிவிடுவார்கள்.

தொழிலாளர் உரிமைகளைப் புதைக்கும் சட்டத் திருத்தமும், உழவர்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களும் இயற்றப்பட்டது கொரோனா கால முழுமுடக்கத்தில்தான். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைக்கூட கார்ப்பரேட் கொள்ளையர்கள் கொழுத்து திரிவதற்கு பயன்படுத்திக் கொண்டது மோடி அரசு.

பொதுத்துறை நிறுவனங்களைக் கூறு போட்டு விற்பதற்குப் பெயர்தான் இன்றைக்கு நாட்டுப்பற்று! காப்பீட்டுத் துறையிலும் வங்கித் துறையிலும் தனியார்மயம். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இருக்கும் பணத்தைக்கூட கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு.

கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகை, திவால் சட்டத்தின் மூலம் கடன் தள்ளுபடி, வாராக் கடன் ரத்து என்ற பெயரில் மக்களுக்கு சொந்தமான இலட்சக்கணக்கான கோடி ரூபாயை வாரிக் கொடுத்துவிட்டு உழவர்களை ஓட்டாண்டிகளாக்கி ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் காசை வீசி எறிகிறது.

”எல்லோரும் இந்நாட்டு மன்னர், எல்லோரும் ஓர் நிறை” என்று சுதந்திர பள்ளு பாடிய பாரதி இன்று இருந்திருந்தால் ”அம்பானிக்கு ஒரு சட்டம், அண்ணாச்சிக்கு ஒரு சட்டமா? அதானிக்கு ஒரு சட்டம், உழவனுக்கு ஒரு சட்டமா?” என்று உள்ளக் குமுறலுடன் அறம் பாடியிருப்பான்.

எட்டயபுரத்துக் காவல்நிலையத்தில் பாரதிக்கு எதிராய்ப் பாய்ந்திருக்கும் ஊபா வழக்கு. சர்வாதிகாரத்திற்குப் பெயர் குடியரசா?

மாநிலங்களவை , மக்களவை சம்பிரதாய மன்றங்கள் ஆகிவிட்டன. கேபினட் அமைச்சரவை அலங்காரப் பொருள். நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் தேவையற்றவை. நீதித்துறை நிலைகுலைந்துவிட்டது. ஆசைக்காட்டியும் உருட்டியும் மிரட்டியும் நீதிபதிகள் வளைக்கப்படுகின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கியையும் கட்டுப்படுத்துகிறார் மோடி. ஒப்புக்கு நிதியறிக்கை, முக்கிய தீர்மானங்கள் எல்லாம் ஜி.எஸ்.டி. கவுன்சிலிலும் நிதி ஆயோக்கிலும்தான் எடுக்கப்படுகின்றன.

அமலாக்கத் துறை, நடுவண் புலனாய்வுக் கழகம், தேசிய புலனாய்வு முகமை இவையாவும் தம்மை எதிர்ப்பவர் மீது மோடி ஏவிவிடும் வெறிநாய்களாக ஆகிவிட்டன. தலைமை அமைச்சரின் அலுவலகமே நாட்டின் அதிகார மையம். அதிபரை போல் முடிவுகளை அறிவிக்கும் மோடி.

செல்லாக் காசு அறிவிப்போ அல்லது 138 கோடி மக்கள் வாழும் நாட்டை முடக்குவதாகட்டும் தொலைக்காட்சியில் தோன்றி அதிரடியாய் அறிவிக்கிறார் மோடி. சுளையிருக்க பழத்தை விழுங்குவது போல் அரசமைப்பு சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதற்குப் பெயர் தான் குடியரசா?

மாநிலங்களை ஒழித்துக்கட்டுவதற்குப் பெயர் புதிய இந்தியாவா?இது புதிய இந்தியா என்கிறார் மோடி –அதாவது, மொழிவழி மாநிலங்கள் இல்லாத இந்தியா – மெய்நடப்பில் இருக்கும் இந்துராஷ்டிரம்.. மாநிலங்களை ஒன்றிய ஆட்சிப் புலமாக்கி, உடைத்து, அதிகாரத்தைப் பறிப்பதற்கு எடுத்துக்காட்டு காசுமீர். சட்டப்பேரவை கொண்ட ஒன்றிய ஆட்சிப்புலங்களில் துணைநிலை ஆளுநரைக் கொண்டு அலைக்கழிப்பதற்கு தில்லியும் புதுச்சேரியும் எடுத்துக்காட்டு.

சட்டப்பேரவை இல்லாத ஒன்றிய ஆட்சிப்புலங்களில் இந்துராஷ்டிர கொள்கைகளை அமலாக்கிப் பார்ப்பதற்கு இலட்ச தீவுகள் எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இன் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பாசகவின் தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு இணையாக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்த முயல்கிறார்.

இந்தியாவை 75 நிர்வாக அலகுகளாகப் பிரித்து மொழிவழி மாநிலங்களை இல்லாதொழிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் இலட்சியத்தை நோக்கி மோடி நாட்டை இழுத்து செல்கிறார். இந்த புதிய இந்தியா மாநிலங்களை முழு அடிமை ஆக்குகிறது. இதை ஏற்கவே முடியாதெனில் பிறகெப்படி இதை கொண்டாட முடியும்?

சிறுபான்மையினரின் இனப்படுகொலைக்கா இந்த சுதந்திரம்?1921 இல் ’புரட்சி வாழ்க – இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று காங்கிரசு மாநாட்டில் முழங்கியவர் அசரத் மொகானி. ’ஜெய் ஹிந்த்’ என்ற முழகக்த்தை 1941 இல் உருவாக்கியவர் ஆபித் அசன் சப்ரானி.

இப்படி இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு இழையிலும் இஸ்லாமியர் இரண்டறக் கலந்திருக்கக் காணலாம். ஆனால், இன்று காவிப் பாசிஸ்டுகள் இஸ்லாமிய இனவழிப்புக்கு அறைகூவல் விடுக்கின்றனர். தெருக்களில் நாயைப் போல் அடித்துக் கொல்கின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பொய் வழக்கில் சிறையில் அடைத்துவைதுள்ளனர்.

பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கி அவ்விடத்தில் இராமர் கோயில் கட்டுவதை தேசியப் பெருமிதம் என்கின்றனர். குடியுரிமையைப் பறித்து முகாம்களில் அடைக்கப் பார்க்கின்றனர். அன்னியர்களுக்கு எதிரான போராட்டத்தில் துரும்பைக்கூட கிள்ளிப் போடாத ஆர்.எஸ்.எஸ். இன்று மண்ணின் மைந்தர்களை ’அன்னியர்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

கொல்லத் துடிப்பவரும் துடிதுடிக்க கொல்லப்படுபவரும் எப்படி சேர்ந்து கொண்டாடுவது சுதந்திரத்தை?மிசனரிகளை தனது ஐம்பெரும் எதிரிகளில் ஒன்றாக அறிவித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது பரிவாரங்களைக் கொண்டு ஒரிசாவில் உள்ள கந்தமாலில் கிறித்தவருக்கு எதிராக நடத்திய வன்முறை இன்னமும் மனக்கண்ணில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மண்டைக்காடு கலவரத்தை நடத்தி கட்சி வளர்த்த காவிக் கும்பல் மைக்கேல்பட்டி விவகாரத்தைப் பயன்படுத்தி கலவரங்களுக்கு வித்திட முயன்றது. வழிபாட்டுச் சுதந்திம், கருத்து சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், உணவு, திருமணத்தில் சுதந்திரம் என யாவற்ரையும் மறுப்பதை கொள்கையாக கொண்ட சங் பரிவாரக் கும்பல் போலித்தனமான நாட்டுப் பற்று கூச்சலையும் சுதந்திர தின ஆரவாரங்களையும் செய்து வருகின்றன.

மோடி – அமித் ஷா உருவாக்கியுள்ள இந்துராஷ்டிரம் – கார்ப்பரேட் ராஜ்ஜியம், இஸ்லாமியர்களையும் தேசிய இனங்களையும் இல்லாது ஒழிக்கும் இந்துத்துவ ராஜ்ஜியம், புதிய மொந்தையில் பழைய கள்ளைக் கொடுப்பது போல் பட்டாடைப் போர்த்தி வரும் பார்ப்பன மேலாதிக்க ராஜ்ஜியம். அலங்காரப் பதவிகள் பார்ப்பன அடிமைகளுக்கு. அதிகாரமுள்ள பதவிகள் பார்ப்பனர்களுக்கு.

முதலில் இந்தியை விருப்பப் மொழியாக்கி பின்பு அதை கட்டாயமாக்குவது, பின் இந்தியின் இடத்தில் சமற்கிருதத்தைக் கொண்டு வருவது என்ற தொலைநோக்கு திட்டம். வைதீகப் பண்பாடே இந்தியாவின் ஒற்றைப் பண்பாடென நிலைநிறுத்தும் ஆதிக்கம். ஒற்றை தேசம், ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு என்னும் இந்த புதிய இந்தியாவை எப்படி கொண்டாட முடியும்?

பாசிச பாசக ஆட்சிஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைக் கார்ப்பரேட்கள் பாசகவுக்கு கொட்டிக் கொடுக்கின்றன. எதிர்க்கட்சி பிரமுரகர்களை விலைக்கு வாங்கவும், தன்னுடைய கட்சி வளர்ச்சிக்கும் அந்த பணத்தை பாசக அள்ளி இறைக்கப்படுகின்றது. அடங்க மறுக்கும் எதிர்க்கட்சிகளை முடக்கி சிதறடிப்பது. மம்தா பானர்ஜியை திணறடிக்க மேற்கு வங்கத்திற்கு அமலாக்க துறையை அனுப்பி வைக்கும் மோடி.

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரேவின் ஆட்சியை குடைசாய்க்க ஏக்நாத் சிண்டேக்களை விலைக்கு வாங்கும் மோடி – அமித் ஷா கூட்டணி.அதையும் மீறி எதிர்ப்போருக்கு எதிராய் பாயும் அடக்குமுறை சட்டங்கள். அன்று ரெளலட் சட்டம். இன்று ஊபா. அன்று சுதேசமித்திரனுக்கு தடை விதித்த பிரிட்டிஷ் அரசாங்கம்.

இன்று உண்மையை அம்பலப்படுத்தும் ஜுபைர், சித்திக் கப்பான், சித்தார்த் வரதராசன் போன்ற ஊடகர்கள் மீது பொய் வழக்கும், சிறைப்படுத்தலும்.மக்களின் பக்கம் நிற்கும் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர், அறிவாளிகள் மீது பொய் வழக்கு, சிறை, பிணை மறுப்பு, பீமா கோரேகான் பொய் வழக்கில் 13 பேர் ஆண்டுகணக்கில் சிறையில் உள்ளனர். அது சிறுக சிறுக சட்டப்படி செய்யப்படும் படுகொலை. இதே வழக்கி சிறையில் அடைக்கப்பட்டு ஏற்கெனவே பாசிசத்தின் பலிபீடத்தில் அருட்தந்தை ஸ்டேன் சாமிக் கொல்லப்பட்டுவிட்டார்.

2002 ஆம் ஆண்டு குசராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவழிப்புக் குற்றத்திற்கு காரணம் மோடியே என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். ’வெல்ல முடியாதவர்களை கொல்’ என்பதை ஓர் உத்தியாக கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். காந்தியைக் கொன்ற தோட்டாக்களைப் பயன்படுத்தி கெளரி லங்கேசு, கல்புர்கி, தபோல்கர், பன்சாரே போன்ற சித்தாந்த எதிரிகளின் கதையை முடித்தது.

பார்வையாளரா? பங்கேற்பாளரா? பாசிச பாசக அரசு இந்நாட்டு குடிமக்களுக்கு எதிராய் போர் தொடுத்திருக்கும் இவ்வேளையில் எல்லோர் முன்னும் எழுந்துள்ள கேள்வி நாம் பார்வையாளராக இருக்கப் போகிறோமா? இல்லை பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பாளராக இருக்கப் போகிறோமா? என்பதுதான்” நான் ஒரு மெளன சாட்சி அல்லன். ” என்று அநீதிக்கு எதிராய் அமைதியாய் களம் கண்டார் ஸ்டேன் சாமி.

ஸ்டேன் சாமியை தலோஜா சிறையில் அடைத்து கொல்ல முடிந்த மோடியால் அவரது வாழ்வும் சாவும் நமக்கு விட்டுச் சென்றுள்ள செய்தியைக் கொல்ல முடியாமல் இருக்கிறது. பாசிசத்திற்கு எதிராக சனநாயகத்திற்காகவும் அமைதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் சமத்துவத்திற்காகவும் உண்மையான சுதந்திரத்திற்காகவும் நடந்துக் கொண்டிருக்கும் இந்தப் புனிதமான போராட்டத்தில் நாம் மெளன சாட்சியாய் இல்லாமல் ஏதேனும் ஒருவழியில் பங்கேற்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த செய்தி.

இதுவே இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உழைத்த, உயிரைக் கொடுத்த ஈகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையும் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *