சிறிலங்காவுக்கு எதிராக பன்னாட்டுப் புலனாய்வு கோரும் தீர்மானத்தை நடந்துகொண்டிருக்கும் ஐநா மாந்த உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்திய அரசு முன்மொழிய வேண்டும்.

   தமிழர்களுக்கு எதிரானக் குற்றங்கள் தொடர்பில்  சான்றுகள் திரட்டிவரும் மாந்த உரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்தின்(OCHRC) பணிக்கு இந்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும். 

சிறிலங்காவுக்கு எதிராக பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் தீர்மானத்தைக் கொண்டுவர இந்திய அரசையும் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையின் உறுப்பு அரசுகளையும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கடிதம் எழுத வேண்டும்,  மீண்டும் அமைச்சரவை தீர்மானம் ஒன்றை இயற்ற வேண்டும். 

        ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை. 

  கடந்த 2021 மார்ச் மாதம் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் சிறிலங்காவில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல்,  மாந்த உரிமைகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின்படி, சிறிலங்காவில் இதன் தொடர்பில் நடந்தது என்ன? என்பதை ஆய்ந்தறிந்து  மாந்த உரிமைகளுக்கான ஐ.நா. உயராணையர் மிசேல் பசலே சிறிலங்காவில் மாந்த உரிமைகளின் நிலை தொடர்பான தமது அறிக்கையை செப் 6 அன்று வெளியிட்டார். செப் 12 இல் இருந்து அக் 6 வரை  பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் நடக்கவிருக்கிறது. 

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன் கணித்திடாத பொருளியல் நெருக்கடியில் இருந்து மீள்வதும் மாந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் பிரித்துப் பார்க்கவியலாத ஒன்று என்று மிசேல் பசலே சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பொருளியல் நெருக்கடிக்கு சிறிலங்கா அரசு செய்துவரும் படைச்செலவு ஒர் முக்கிய காரணம், சிறிலங்கா அரசு தமது மொத்த வரவுசெலவு திட்டத்தில் 15% ஐ படைச்செலவுக்கு செய்து கொண்டிருக்கிறது. ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் இல்லை. அதன் பகுதியாகவே மோசமான மாந்த உரிமை மீறுல்களுக்கான தண்டனையின்மை அமைகிறது. இது ஊழலுக்கும் அதிகார அத்துமீறலுக்குமான சூழலை உருவாக்கியுள்ளது.

2009 இல் போர் முடிந்து இருந்தாலும் படையினரின் இருப்பு வடக்குகிழக்கு பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. சோதனை சாவடிகள், ஆளணிகள், போதை தடுப்புப் பணிகள், வேளாண்மை, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடக்குகிழக்கில் வாழும் தமிழர்கள், இஸ்லாமியர்களின் நெடுநாள் குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்ப்பதற்கு தேசிய உரையாடலுக்கான புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதையும் ஆணையர் அடையாளப்படுத்தியுள்ளார். 46/1 தீர்மானத்தின் 6 ஆவது பத்தியில் குற்றங்களுக்கான சான்றுகளை திரட்டி, தொகுத்து, பகுப்பாய்ந்து பாதுகாப்பது என்று மாந்த உரிமைப் பேரவை தீர்மானித்தது. அதற்கென அமைக்கப்பட்ட குழு மே 2022 இல் தான் முழுமையான ஆளணிகளோடு முழு செயற்பாட்டுக்கு வந்தது. இதற்காக சிறிலங்காவிற்கு செல்ல அனுமதி கேட்ட பொழுது தாம் அத்தீர்மானத்தை ஏற்கவில்லை என்பதால் நாட்டுக்குள் வர அனுமதிக்க முடியாதென சிறிலங்கா அரசு 2022 ஜூலை 18 அன்று பதிலளித்துவிட்டது.
பல்வேறு அறிக்கைகளின் பொருட்டு திரட்டப்பட்ட சான்றுகளைப் பெற்று, அவற்றை தொகுப்பதை ஆணையர் அலுவலகம் செய்து கொண்டிருக்கிறது. இப்பணிக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்று அவர் சொல்லியுள்ளார்.

ஒப்புக்கொண்டவற்றை செயல்படுத்துவதற்கான காலவரையறையுடன் கூடிய திட்டத்துடன் பொறுப்புக்கூறலுக்கும் நிலைமாற்ற நீதிக்குமான பரந்த உத்தி ஒன்றை தயாரிக்குமாறும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை அறிக்கைகளை முழுவதுமாக வெளியிடுமாறும் படைச்செலவைக் குறைக்குமாறும் வடக்குகிழக்கு மாகாணங்களில் படையினர் இருப்பைக் குறைக்கவும் அன்றாட வாழ்வில் படையினர் தலையீட்டுக்கு முடிவுகட்டவும் நடவடிக்கை எடுக்குமாறும் படையினர் வைத்துள்ள தனியார் நிலங்கள் உள்ளிட்ட அனைத்து நிலங்களையும் மீளக் கொடுக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

உலகளாவிய மேலுரிமை(Universal Jurisdiction) கோட்பாடுகளின்படி பன்னாட்டுக் குற்றங்களுக்கான புலனாய்வுக்கும் வழக்கு தொடுப்பதற்கும் ஒத்துழைக்கும்படியும் மாந்த உரிமைகளில் தாக்கம் செலுத்தியுள்ள பொருளியல் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கும் திருடப்பட்ட சொத்துகளை தேடவும் மீட்கவும் சிறிலங்காவுக்கு ஆதரவு தருமாறும் ஐ.நா. உறுப்பரசுகளுக்கு ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். முந்தைய அறிக்கையின் முடிவுகள் வரும் பகுதியில், சிறிலங்கா அரசு செய்த குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு ஐ.நா. உறுப்பரசுகள் பரிந்துரைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 28 அன்று சிறிலங்காவுக்கான இணைத் தலைமை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இதே கோரிக்கையை முன்வைத்து ஈழத்தை சேர்ந்த முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், சமயப் பெரியவர்கள் இணைந்து ஒரு மடலை அனுப்பியுள்ளனர்.

செப்டம்பர் 12 அன்று மாந்த உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி தமது கருத்துரையை வழங்கினார். அதில் இறைமையின் பெயரால் சான்றுகள் திரட்டுவதையும் பொருளியல் குற்றங்கள் பற்றி ஆணையர் பேசுவதையும் கடுமையாக எதிர்த்தார். கூடவே, போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புதிய தலைமுறை ஒன்று அவர்களுக்கே உரிய அரசியல் வேட்கைகளோடு வந்திருக்கின்றனது என்றும் பேசியுள்ளார். அதாவது, பொறுப்புக்கூறலிலும் மீளிணக்கத்திலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதை அவர் ஏற்கவில்லை. மாறாக, 13 ஆண்டுகளுக்கு பின்பும் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கத் தொடங்கியுள்ளார். யூத இனவழிப்பு நடந்து முடிந்து இத்தனை ஆண்டுகாலம் ஆன பின்பும் நாஜிப் படைகளில் பங்குபெற்ற யாரேனும் ஓர் அதிகாரி உயிருடன் இருப்பது தெரிய வந்தால் அவர் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் நடைமுறை இன்றைக்கும் இருந்து வருகிறது. எனவே, முள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிந்து 13 ஆண்டு காலம் ஆகிவிட்டது, இது பழைய கதை என்றெல்லாம் சிறிலங்கா அரசு பேசுவதை ஏற்க முடியாது.

செப்டம்பர் 12 அன்றே, ஆணையரின் அறிக்கை மீது கருத்து தெரிவித்த இந்திய அரசோ, சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது சட்டத்திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்தியும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தும் மாகாணத் தேர்தல்களை ஆகக் கூடிய விரைவில் நடத்தியும் இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை என்பது பற்றி குறிப்பிடுவதாக சொல்லியுள்ளது. அதேநேரத்தில், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பது பற்றி எப்போதும் போலவே பேசவில்லை.

அமைதியும் நீடித்த வளர்ச்சியும் பொருளியல் நிலைத்தன்மையும் மாந்த உரிமைகளில் இருந்து பிரித்துபார்க்க முடியாதது என்று ஆணையர் சொல்லியிருக்கிறார். அதேபோல் பொறுப்புறக்கூறலும் மீளிணக்கமும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதது. அதாவது, சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராக செய்த போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் பொருட்டு குற்றவியல் நீதியும் ஈடுசெய் நீதியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப் பார்க்க முடியாதது. நீதி இல்லையேல் அரசியல் அதிகாரப் பகிர்வும் இருக்கப் போவதில்லை.
13 ஆவது திருத்தம் செய்யப்பட்டு 33 ஆண்டுகளாகியும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னான 13 ஆண்டுகளாகியும் சிங்கள அரசு அதை செயல்படுத்த வில்லை என்பதோடு மாகாணங்களையே கலைக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு காலவரையறை ஏதுமின்றி இந்திய அரசு 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்திக் கொண்டிருப்பது ஓர் அடையாள நடவடிக்கையாகவே தெரிகின்றது. இன்னொருபுறம், 13 ஆவது திருத்தத்தை ஈழத் தமிழர்கள் ஏற்காத நிலையில் அவர்கள் மீது அதை திணிப்பதும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசியல் தீர்வுகாண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் அதை பன்னாட்டரங்கில் புறக்கணிப்பதும் இந்திய அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கடந்த 2021 மார்ச் இல் சிறிலங்கா அரசின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க மறுத்து வாக்களிப்பதில் இருந்து விலகி நின்றது தமிழர்களின் நினைவைவிட்டு அகலாமல் இருக்கிறது. இம்முறையும் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இரண்டகமாகவும் செயல்படப் போகிறதா? என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.
இந்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாது ஈழத் தமிழர்களின் நீதிக்கானப் போராட்டத்திற்கும் இதன் தொடர்பில் தமிழ்நாட்டு தமிழர்களின் நிலைபாட்டிற்கும் மதிப்பளிக்க வேண்டும். அரசியல் தீர்வு காண்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் ஆகியவற்றிற்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு பரிந்துரைக்கச் சொல்லும் தீர்மானம் ஒன்றை தனித்தோ அல்லது பிற நாடுகளுடன் இணைந்தோ இந்திய அரசு கொண்டு வர வேண்டும் என்பதே நம் நெடுநாள் கோரிக்கை. இந்திய அரசு சிறிலங்காவுக்கு எதிரானப் பன்னாடுப் புலனாய்வு கோரும் தீர்மானத்தை தனியாகவோ அன்றி கூட்டாகவோ கொண்டு வர வேண்டும் அல்லது வேறு யாராலும் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமே ஒழிய எதிர்த்தோ அன்றி வாக்களிக்காமலோ விடக்கூடாது.
பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு சான்றுகளைத் திரட்டி பாதுகாப்பதென்று முந்தைய(46/1) தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒரு குழுவை மாந்த உரிமைப் பேரவை அமைத்துள்ளது.

அப்பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்று ஆணையர் உறுப்பரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மூன்று உறுப்பரசுகள் நிதி கொடுப்பதாக முன்வந்துள்ளன. சிறிலங்காவை பொருளியல் நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு இந்த ஆண்டு மட்டும் இந்திய ஆரசு சுமார் 30,000 கோடி ரூபாய் கொடுத்துள்ள நிலையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மோசமான குற்றங்களுக்கான சான்றுகளைப் பாதுகாக்கும் பணி முடங்கிக் கிடப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது. இந்திய அரசு இனவழிப்பாளர்களைக் காப்பாற்றும் தன் தவறான கொள்கையைக் கைவிட்டு தமிழர்களுடைய நீதிக்கானப் போராட்டத்திற்கு துணைநிற்கும் வகையில் சான்றுகளை திரட்டிவரும் மாந்த உரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்தின் பணிக்கு நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு ஈழத்தமிழர் விசயத்தில் வாளாவிருக்குமாயின் இந்திய அரசு தன் விருப்பம் போல் ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையாண்டுவிடும். எனவே, தமிழ்நாடு இனவழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தில் இருந்து விலகி நிற்கக்கூடாது. 2013 ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு கோரியும் இனவழிப்புக்கு பன்னாட்டுப் புலனாய்வை வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தை நினைவுப்படுத்தி இந்திய அரசுக்கும் ஐ.நா. உறுப்பரசுகளுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் எழுத வேண்டும், மீண்டும் ஒரு தீர்மானத்தை அமைச்சரவையில் இயற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,
கொளத்தூர்தா.செ.மணி ஒருங்கிணைப்பாளர், ஈழத்தமிழர்
வாழ்வுரிமைக் கூட்டமைப்பு
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தொடர்புக்கு: 99433 59666

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *