செப் 2022 – ஐ.நா. மாந்த உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரும் சிறிலங்காவின் நிலைப்பாடும் இந்திய – தமிழக அரசுகள் செய்ய வேண்டியதும்


கடந்த 2021 மார்ச் மாதம் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் சிறிலங்காவில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மாந்த உரிமைகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின்படி, சிறிலங்காவில் இதன் தொடர்பில் நடந்தது என்ன? என்பதை ஆய்ந்தறிந்து மாந்த உரிமைகளுக்கான ஐ.நா. உயராணையர் மிசேல் பசலே சிறிலங்காவில் மாந்த உரிமைகளின் நிலை
தொடர்பான தமது அறிக்கையை செப் 6 அன்று வெளியிட்டார். செப் 12 இல் இருந்து அக் 6 வரை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் நடகக்விருக்கிறது.


ஆணையர் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன் கணித்திடாத பொருளியல் நெருக்கடியில் இருந்து மீள்வதும் மாந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் பிரித்துப் பார்க்கவியலாத ஒன்று என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பொருளியல் நெருக்கடிக்கு சிறிலங்கா அரசு செய்துவரும் படைச்செலவு ஒர் முக்கிய காரணம், சிறிலங்கா அரசு தமது மொத்த வரவுசெலவு திட்டத்தில் 15% ஐ
படைச்செலவுக்கு செய்து கொண்டிருக்கிறது. ஆட்சி நிர்வாகத்தில்
பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் இல்லை.

அதன் பகுதியாகவே மோசமான மாந்த உரிமை மீறுல்களுக்கான தண்டனையின்மை அமைகிறது.
இது ஊழலுக்கும் அதிகார அத்துமீறலுக்குமான சூழலை உருவாக்கியுள்ளது.
சிறிலங்காவின் மாந்த உரிமை ஆணையம் பன்னாட்டு மதிப்பீட்டில் ‘A’ தகுநிலையை இழந்துள்ளது. போராட்டக்காரர்கள் மீதான அரசின்
அடக்குமுறையைக் கண்டித்திருக்கும் அதேவேளையில் மாந்த உரிமை செயற்பாட்டாளர் ஒருவரை கண்டித்ததன் மூலம் கலவையான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்கள்
போதுமானவை அல்ல. புதிய பயங்கரவாத தடை சட்டம் ஒன்றை
கொண்டுவர இருப்பதாக சிறிலங்கா அரசு ஆணையரிடம் சொல்லியுள்ளது.

படைமயம்:
சிறிலங்கா அரசு 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 373.1 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கி இருக்கிறது. அதேநேரத்தில், நலவாழ்வு அமைச்சகத்திற்கு வெறும் 158 பில்லியன் ரூபாய்கள்தான் ஒதுக்கியுள்ளது. கோவிட் பெருந்தொற்று நெருக்கடி இருக்கும்போதும் கடந்த ஆண்டைவிட 6 பில்லியன் ரூபாய்கள் குறைவாக ஒதுக்கி இருக்கிறது. வெளிநாட்டுக் கடன் தொடர்பிலான தற்சார்பான வல்லுநர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு, அண்மைய ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களை படைத்துறைக்கான
வரவுசெலவு திட்டம் எதிரடிக்கிறதா? என்பது பற்றி விவாதிப்பதற்கு
ஊக்குவிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்
முன்னாள் , இந்நாள் படை அதிகாரிகளை 28 அமைச்சரவைப் பொறுப்புகளில் அமர்த்தியிருந்தார் கோத்தபய.

சிறிலங்காவின் அரசு இயந்திரம் முழுக்கமுழுக்க படைமயமாகி இருந்தது. இப்போது அதிபர் பொறுப்புக்கு வந்துள்ள இரணில் விக்ரமசிங்கேவும் ஒய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னாவை படைத்துறை செயலராகவும் ஜெனரல் சவேந்திர சில்வாவை
பாதுகாப்புத் துறை தலைவராகவும் அமர்த்தியுள்ளார். இவ்விருவரும் மாந்த உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டோர் என்பது அவரது முந்தைய
அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மேலும் பதவிக்கு வந்தவுடன் 42 துறைகளை பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வந்துள்ளார் இரணில். சட்டம் ஒழுங்கு, ஆட்சி நிர்வாகம், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் படையினரின் பங்கு குறிப்பாக வடக்குகிழக்கு சிறிலங்காவில் மிக அதிகமாக
உள்ளது. 2009 இல் போர் முடிந்து இருந்தாலும் படையினரின் இருப்பு அங்கே குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. சோதனை சாவடிகள், ஆளணிகள், போதை தடுப்புப் பணிகள், வேளாண்மை, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளடக்கமும் மீளிணக்கமும் ( Inclusion and Reconciliation )
சிங்கள பெளத்த பெரும்பான்மை கருத்தியலை படையினதும் பெளத்த துறவிகளினதும் துணையுடன் கோத்தபய இராசபக்சே ஊக்குவித்தார். பெளத்த பலசேனாவின் தலைவரும் தீவிரவாத துறவியுமான ஞானசார தேரரின் தலைமையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பதற்கான செயலணியை கோத்தபய உருவாக்கியிருந்தார். அச்செயலணி ஜூன் 2022 இல் தமது அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த முன்னெடுப்பை தொடர்வதில்லை என்று ரணில் பொதுவெளியில் சொல்லியுள்ளார்.
வடக்குகிழக்கில் வாழும் தமிழர்கள், இஸ்லாமியர்களின் நெடுநாள்
குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்ப்பதற்கு தேசிய உரையாடலுக்கான புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை மீளிணக்கத்திற்கும் அமைதிக்கும் உதவும்.


முன்னாள் போராளிகள், குடிமைச் சமூகம், பாதிக்கப்பட்டோருக்கு எதிரான மிரட்டலும் அச்சுறுத்தல்களும்:
மாந்த உரிமைக் காப்பாளர்கள், ஊடகவியலாளர்கள்,
காணாமலாக்கப்பட்டோரது குடும்பங்கள், இறந்தோரை நினைவுகூர முற்படுவோர் உளவுத்துறை, காவல்துறை, படைத்துறையினரால் கண்காணிக்கவும் மிரட்டவும் துன்புறுத்தவும் படுவதாக தொடர்ந்து அறிக்கைகள் வருகின்றன. முன்னாள் போராளிகளும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றனர். அடிப்படையான பாதுகாப்புதுறை சீர்திருத்தங்கள், படை நீக்கம் ஆகியவை
இல்லையெனில் கண்காணிக்கும் பண்பாடும் ஒடுக்குமுறை சூழலும் வடக்குகிழக்கு பகுதிகளில் தொடரும் என்று ஆணையர் அச்சம் தெரிவித்துள்ளார்.
போராட்ட இயக்கம் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் விலகியே இருந்தனர் என்றாலும் சிறைப்படுத்தல், துப்பாக்கிப் பயன்படுத்தல், கடத்துதல், மிரட்டுதல் ஆகியவை நடப்பதை சுட்டிக்காட்டி புதிய ஆட்சி அமைந்த பிறகு போராட்டக்காரர்களை வன்முறையான தீவிரவாதிகள் என்று சுட்டுவது தொடங்கியுள்ளது. இது குறித்து வெளிப்படையான, முழுமையான , தற்சார்பான புலனாய்வு மேற்கொள்ளுமாறு ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மீளிணக்கமும் பொறுப்புக்கூறலும் 40/1 தீர்மானத்தை விட்டு சிறிலங்கா விலகி உள்நாட்டு பொறியமைவு
ஏற்படுத்துவதாக சொல்லி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்
மீளிணக்கத்திற்கும் பொறுப்புக்கூறலுக்கும் வழிவகுக்கும் நிலைமாற்ற நீதியை நோக்கிய நம்பத்தகுந்த வீதிவரைபடம் ஒன்றை முன்வைக்கவில்லை.
மாறாக கடந்தகால குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செயல்வழிகள் மறிக்கப்பட்டதும் குற்றமிழைத்தோர் ஜனாதிபதியிடம் மன்னிப்புப் பெற்றதும்
காணாமற்போனோர் அலுவலகமும் இழப்பீட்டுக்கான அலுவலகமும் பாதிப்புற்றோர் எதிர்பார்க்கும் தீர்வுகளை வழங்குவதில் தோல்வியடைந்ததும் நடந்துள்ளது. மே 2022 இல் காணாமற்போனோர் அலுவலகத்தின்
ஆணையர்களில் ஒருவரான சிராசு நூர்தீன் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கும் வகையில் சுதந்திரமாக செயல்பட முடியாமை காரணமாக தாம் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். முந்தைய அறிக்கைகளை ஆய்வு செய்வதற்கு கோத்தபயவால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் (
Commsission of Inquiry) பாதிக்கப்பட்டோரது நம்பிக்கையையும் பெறவில்லை, வெளிப்படைத்தன்மையும் இல்லை, வரம்புக்குட்பட்ட ஆணையையே பெற்றுள்ளது.
இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஆணையர்களது பதவிக்காலம் மார்ச் 2022 ஓடு முடிந்துவிட்டது. தேச ஒற்றுமைக்கும் மீளிணக்கத்திற்குமான அலுவலகம் சமூக ஒன்றுகலத்தலுக்கான நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளது. கூடவே புலம்பெர்ந்த சிறிலங்கா குடிமக்கள் மீண்டு சிறிலங்கா வருவதற்கும்
முதலீடு செய்வதற்கும் அரசாங்கம் அழைப்புவிடுத்துள்ளது.
காட்டுவளப் பாதுகாப்பு, பெளத்தம் சார்ந்த தொல்லியல் திணைக்களப்பாதுகாப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய நிலப் பூசல்கள் குறிப்பாக வடக்குகிழக்கு மாகாணங்களில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ளமை மீளிணக்கத்தைக் குழப்பி புதிய பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற வழக்குகள் பத்தாண்டுகளுக்கு மேலாக கிடப்பிலேயே உள்ளன. வழக்கு விசாரணையைத் தள்ளிப்போடுவது, வழக்குகளைத் திரும்பப்பெறுவது, குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு தண்டனைப் பெற்றோருக்கு மன்னிப்பு வழங்குவது வாடிக்கையாக உள்ளது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வெளியிட அரசு முன்வர
வேண்டும். அதேபோல் ஏராளமான ஊழல் வழக்குகளும் அதனுடன்
தொடர்புடைய பொருளியல் குற்ற வழக்குகளும் விசாரிக்கப்படாமல் உள்ளன.
சிறிலங்கா அரசாங்கங்கள் மோசமான மாந்த உரிமை மீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் பன்னாட்டு மாந்தநேய சட்டங் மீறல்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தோல்வியடைந்திருக்கும் நிலையில், இதில் குற்றஞ்சாட்டப்பட்டோர் அரசு தரப்பாக(State Agents) இருக்கின்றனர்.
எனவே, இக்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைப் பாதுகாப்பதும்
பகுப்பாய்வதும் பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கு முகமையானதாகும் என்பதை அறிந்தேற்று 46/1 தீர்மானத்தின் 6 ஆவது பத்தியில் சான்றுகளை
திரட்டியும் தொகுத்தும் பகுப்பாய்ந்தும் பாதுகாப்பது என்று மாந்த உரிமைப் பேரவை தீர்மானித்தது. அதற்கென அமைக்கப்பட்ட குழு மே 2022 இல் தான் முழுமையான ஆளணிகளோடு முழு செயற்பாட்டுக்கு வந்தது. இதற்காக சிறிலங்காவிற்கு செல்ல அனுமதி கேட்டப்பொழுது தாம் அத்தீர்மானத்தை
ஏற்கவில்லை என்பதால் நாட்டுக்குள் வர அனுமதிக்க முடியாதென
சிறிலங்கா அரசு 2022 ஜூலை 18 அன்று பதிலளித்துவிட்டது. பல்வேறு அறிக்கைகளின் பொருட்டு திரட்டப்பட்ட சான்றுகளைப் பெற்று, அவற்றை தொகுப்பதை ஆணையர் அலுவலகம் செய்து கொண்டிருக்கிறது. இப்பணிக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது.
நம்பத்தகுந்ததும் உருப்படியானதுமான உள்நாட்டு தீர்வுகள் (remedies) எதுவும் இல்லாத நிலையில், 2021 நவம்பர், அக்டோபரில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு தொடுப்பவரிடம் சிறிலங்கா அரசு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசு ரோமாபுரி உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும் பாதிக்கப்பட்டோர் வாழக்கூடிய அந்தஅந்த
நாடுகளில் பகுதியளவான குற்றங்கள் நடந்ததாக கருதி அச்செய்திகள் பார்க்கப்பட்டன.


அமெரிக்க அரசு மூன்று சிறிலங்கா அலுவலர்களுக்கு பயணத்தடை
விதித்துள்ளது. மேலும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளைப் போடச் சொல்லி அரசுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
உலகளாவிய மேலுரிமையை (Universal Jurisdiction) பயன்படுத்தி
சிறிலங்காவினது குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் வழக்கு தொடரவும் உறுப்பு அரசுகள் முயல வேண்டும்; அத்தகைய குற்றச்சாட்டு உடையவர்கள் மீது குறிவைக்கப்பட்ட தடைகளை விதிக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசு அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு தரும் அரசுறவியல் சார்ந்த பாதுகாப்பை நீக்க வேண்டும். சான்றுகளை திரட்டுவதற்கு மாந்த
உரிமைப் பேரவைக்கு உதவ வேண்டும் என்று ஆணையர்
கேட்டுக்கொண்டுள்ளார்.


முடிவுகள் மற்றும் பரிந்துரைகள்:
”சட்டத்தின் ஆட்சிக்கும் மீளிணக்கத்திற்கும் சிறிலங்காவின் நீடித்த
அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஒரு மைய தடைக்கல்லாக குற்றங்களுக்கு தண்டனையின்மை இருந்துவருகிறது, அக்குற்றங்கள் மீண்டும் நிகழும் ஆபத்திற்கான மையக் காரணியாகவும் அது உள்ளது. போர் முடிந்து 13
ஆண்டுகள் ஆன நிலையில், கடந்தகால மாந்த உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோர் உண்மைக்கும் நீதிக்கும் காத்துக் கிடப்பவர்களாக உள்ளனர். அடுத்தடுத்த அரசாங்கங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த சிறிலங்கா அரசும்
உருப்படியான நிலைமாற்ற நீதிச் செயல்வழியை முன்னெடுத்து மோசமான மாந்த உரிமை மீறல்களை செய்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் உண்மை, நீதி, இழப்பீடு கோரும் உரிமையை உயர்த்திப்பிடிப்பதில் தொடர்ச்சியாக தவறியுள்ளது.

மாறாக, பொறுப்புக்கூறலுக்கு எதிரான அரசியல் தடைகளை உருவாக்கி, போர்க்குற்றச் சாட்டுகள் கொண்ட சில படையதிகாரிகளை அரசின் அதியுயர் பொறுப்புகளுக்கு பதவி உயர்த்தியுள்ளனர். இத்தகைய குற்றங்களுக்கு தண்டனையின்மை (impunity) மாந்த உரிமைகளை மீறுவோருக்கு துணிவுதந்து
ஊழலுக்கும் அதிகார அத்துமீறலுக்கும் வளமான விளைநிலத்தை
உருவாக்கியுள்ளது. உருப்படியான வடிகட்டும்(vetting) செயல்வழியும் பாதுகாப்புத் துறையில் பரந்த
சீர்திருத்தங்களும் செய்யாமல்விட்டால், மோசமான மாந்த உரிமை
மீறல்களுடனும் கொடிய குற்றங்களுடனும் தொடர்புடையவர்கள் என்று நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை கொண்ட அரசு இயந்திரமும் அதில் தொடர்புடைய சில உறுப்பினர்களும் இருப்பதால் மோசமான மாந்த உரிமை மீறல்களும் பொருளியல் குற்றங்களும் மீண்டும் நிகழும் அபாயம் உள்ளது”
என்ற முடிவை ஆணையர் வந்தடைந்துள்ளார்.
சிறிலங்கா அரசுக்கும் ஐ.நா. உறுப்பு அரசுகளுக்கும் முந்தைய அறிக்கையில் சொன்ன பரிந்துரைகளோடு கூடுதலான சில பரிந்துரைகளையும் ஆணையர் வழங்கியுள்ளார்.
ஒப்புக்கொண்டவற்றை செயல்படுத்துவதற்கான காலவரையறையுடன் கூடிய திட்டத்துடன் பொறுப்புக்கூறலுக்கும் நிலைமாற்ற நீதிக்குமான பரந்த உத்தி
ஒன்றை தயாரிக்குமாறும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை அறிக்கைகளை முழுவதுமாக வெளியிடுமாறும் படைச்செலவைக் குறைக்குமாறும் வடக்குகிழக்கு மாகாணங்களில் படையினர் இருப்பைக் குறைக்கவும் அன்றாட வாழ்வில் படையினர் தலையீட்டுக்கு முடிவுகட்டவும் நடவடிக்கை எடுக்குமாறும் படையினர் வைத்துள்ள தனியார் நிலங்கள் உள்ளிட்ட அனைத்து நிலங்களையும் மீளக் கொடுக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
உலகளாவிய மேலுரிமை கோட்பாடுகளின்படி பன்னாட்டுக் குற்றங்களுக்கான புலனாய்வுக்கும் வழக்கு தொடுப்பதற்கும் ஒத்துழைக்கும்படியும் மாந்த உரிமைகளில் தாக்கம் செலுத்தியுள்ள பொருளியல் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கும் திருடப்பட்ட சொத்துகளை தேடவும் மீட்கவும் சிறிலங்காவுக்கு
ஆதரவு தருமாறும் ஐ.நா. உறுப்பரசுகளுக்கு ஆணையர் பரிந்துரை
செய்துள்ளார். மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தன.
முந்தைய அறிக்கையின் முடிவுகள் வரும் பகுதியில் சிறிலங்கா அரசு செய்த குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு ஐ.நா. உறுப்பரசுகள் பரிந்துரைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். சிறிலங்காவை பன்னாட்டுக் குற்றவியல்
நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 20 முன்னாள் ஐ.நா. அலுவலர்கள், 4 முன்னாள். மாந்த உரிமைகளுக்கான ஐ.நா ஆணையர்கள், 9 ஐ.நா. சிறப்பு பிரதிநிதிகள், முன்னாள் ஐ.நா. செயலர் பான் கீ மூன் உருவாக்கிய மூவல்லுநர் குழுவில் பங்குபெற்ற மூன்று வல்லுநர்கள் அடங்கிய பலரும் திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தனர். கடந்த ஆகஸ்ட் 28 அன்று சிறிலங்காவுக்கான இணைத் தலைமை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இதே கோரிக்கையை
முன்வைத்து ஈழத்தை சேர்ந்த முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற
உறுப்பினர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், சமயப் பெரியவர்கள் இணைந்து ஒரு மடலை அனுப்பியுள்ளனர்.
சிறிலங்காவின் எதிர்வினை.
செப்டம்பர் 12 அன்று மாந்த உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர்
தொடங்கிய நிலையில் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி தமது கருத்துரையை வழங்கினார். அதில் 46/1 தீர்மானத்தை தாமும் பிற உறுப்பரசுகளும் எதிர்த்து வாக்களித்த நிலையில் அதில் சொல்லப்பட்டுள்ள பத்தி 6 இன் படி சான்றுகளை திரட்டுவது, பாதுகாப்பது ஆகியவை சிறிலங்காவின் இறைமைக்கு எதிரானது என்றும் அந்த பத்தி தொடர்பான எந்த செயல்படுத்தலையும் கண்டிப்பாக மறுதலிக்க வேண்டியவர்களாக இருப்பதாகவும் பொருளியல் குற்றங்கள் பற்றி பேசுவதற்கு ஐ.நா. மாந்த
உரிமைப் பேரவைக்கு ஆணை இல்லை என்றும் தெரிவித்தார். கூடவே, போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புதிய தலைமுறை ஒன்று அவர்களுக்கே உரிய அரசியல் வேட்கைகளோடு வந்திருக்கின்றனது. பொறுப்புக்கூறலுக்கும் மீளிணக்கத்திற்குமான பிரச்சனைகளை உள்நாட்டு செயல்வழியின் மூலம் ஒருங்கிணைந்த வகையில் எதிர்கொண்டு வருவதாகவும் பத்தாண்டுகளாக இப்பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும்
தீர்மானத்தின் வழித்தடத்தை மெய்யான வகையில் எதிரடிக்க
வேண்டியுள்ளது என்றும் சிறிலங்காவின் மக்களுக்கு எவ்வகையில் இது பயன்பட்டுள்ளது என்று மெய்யான மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார். அதாவது, பொறுப்புக்கூறலிலும் மீளிணக்கத்திலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதை அவர் ஏற்கவில்லை. மாறாக, 13 ஆண்டுகளுக்கு பின்பும் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கத் தொடங்கியுள்ளார். யூத இனவழிப்பு நடந்து முடிந்து இத்தனை
ஆண்டுகாலம் ஆன பின்பும் நாஜிப் படைகளில் பங்குபெற்ற யாரேனும் ஓர் அதிகாரி உயிருடன் இருப்பது தெரிய வந்தால் அவர் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் நடைமுறை இன்றைக்கும் இருந்து வருகிறது. எனவே, முள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிந்து 13
ஆண்டு காலம் ஆகிவிட்டது, பழைய கதை என்றெல்லாம் சிறிலங்கா அரசு பேசுவதை ஏற்க முடியாது.


இந்திய அரசினது கருத்து:
செப்டம்பர் 12 அன்றே, ஆணையரின் அறிக்கை மீது கருத்து தெரிவித்த இந்திய அரசோ, சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது சட்டத்திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்தியும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தும் மாகாணத் தேர்தல்களை ஆகக் கூடிய விரைவில் நடத்தியும்
இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக கொடுக்கப்பட்ட
உறுதிமொழிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை என்பது பற்றி குறிப்பிடுவதாக சொல்லியுள்ளது. அதேநேரத்தில்,
போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பிலும் எவ்வித
முன்னேற்றமும் இல்லை என்பது பற்றி வழமைப் போலவே பேசவில்லை.


நமது கோரிக்கை:
அமைதியும் நீடித்த வளர்ச்சியும் பொருளியல் நிலைத்தன்மையும் மாந்த உரிமைகளில் இருந்து பிரித்துபார்க்க முடியாதது என்று ஆணையர் சொல்லியிருக்கிறார். அதேபோல் பொறுப்புறக்கூறலும் மீளிணக்கமும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதது. அதாவது, சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராக செய்த போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்பு குற்றங்கள் பொருட்டு குற்றவியல் நீதியும ஈடுசெய் நீதியும் ஒன்றில் இருந்து ஒன்று பிரித்துப் பார்க்க முடியாதது. நீதி இல்லையேல் அரசியல் அதிகாரப் பகிர்வும் இருக்கப் போவதில்லை. பொறுப்புக்கூறல் தொடர்பில் காலவரையறைக்கு உட்பட்ட திட்டமொன்றை
சிறிலங்கா அரசு வழங்க வேண்டும் என்று ஆணையர் சொல்லியுள்ளதை மீளிணக்கத்திற்கும் அதாவது அரசியல் அதிகாரப் பகிர்ர்வுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். ’ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் ஓர் ஆணையத்தை ஏற்படுத்தி அதற்கு தலைவராக பெளத்த பலசேனா
அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் பணியமர்த்தப்பட்டு அவர்கள் ஓர் அறிக்கையை முன்வைத்துள்ளனர். அந்த ஆணையம் அமைக்கப்பட்ட போதே மாகாணங்களைக் கலைக்க வேண்டும் என்ற தன் கருத்து தேரர் வெளிப்படுத்தி இருந்தார். சிங்கள பெளத்த பேரினவாதிகளில் ஒருசாரார் மாகாணங்கள் என்ற ஏற்பாடே இருக்கக்கூடாது என்று கருதுகின்றனர். 13 ஆவது திருத்தம் செய்யப்பட்டு 33 ஆண்டுகளாகியும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னான 13 ஆண்டுகளாகியும் சிங்கள
அரசு அதை செயல்படுத்த வில்லை என்பதோடு மாகாணங்களையே கலைக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு காலவரையறை
ஏதுமின்றி இந்திய அரசு 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்திக்
கொண்டிருப்பது ஓர் அடையாள நடவடிக்கையாகவே தெரிகின்றது.

இன்னொருபுறம், 13 ஆவது திருத்தத்தை ஈழத் தமிழர்கள் ஏற்காத நிலையில் அவர்கள் மீது அதை திணிப்பதும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசியல் தீர்வுகாண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் அதை புறக்கணிப்பதும் இந்திய அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது.
கடந்த 2021 மார்ச் இல் சிறிலங்கா அரசின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க மறுத்து வாக்களிப்பதில் இருந்து விலகி நின்றது தமிழர்களின் நினைவைவிட்டு அகலாமல் இருக்கிறது.
இம்முறையும் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இரண்டகமாகவும் செயல்படப் போகிறதா? என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.
இந்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாது ஈழத் தமிழர்களின் நீதிக்கானப் போராட்டத்திற்கும் இதன் தொடர்பில் தமிழ்நாட்டு தமிழர்களின் நிலைபாட்டிற்கும் மதிப்பளிக்க வேண்டும். அரசியல் தீர்வு காண்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐநாவில் வலியுறுத்த வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் ஆகியவற்றிற்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு பரிந்துரைக்கச் சொல்லும் தீர்மானம்
ஒன்றை தனித்தோஅல்லது பிற நாடுகளுடன் இணைந்தோ இந்திய அரசு கொண்டு வர வேண்டும் என்பதே நம் நெடுநாள் கோரிக்கை. இந்திய அரசு சிறிலங்காவுக்கு எதிரானப் பன்னாடுப் புலனாய்வு கோரும் தீர்மானத்தை தனியாகவோ அன்றி கூட்டாகவோ கொண்டு வர வேண்டும் அல்லது வேறு யாராலும் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமே ஒழிய எதிர்த்தோ அன்றி வாக்களிக்காமலோ விடக்கூடாது.

பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு சான்றுகளைத் திரட்டி
பாதுகாப்பதென்று முந்தைய(46/1) தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒரு குழுவை மாந்த உரிமைப் பேரவை அமைத்துள்ளது. அப்பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்று ஆணையர் உறுப்பரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மூன்று
உறுப்பரசுகள் நிதி கொடுப்பதாக முன்வந்துள்ளன. சிறிலங்காவை
பொருளியல் நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு இந்த ஆண்டு மட்டும் இந்திய அரசு சுமார் 30,000 கோடி ரூபாய் கொடுத்துள்ள நிலையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மோசமான குற்றங்களுக்கான சான்றுகளைப் பாதுகாக்கும் பணி முடங்கிக் கிடப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது. இந்திய அரசு இனவழிப்பாளர்களைக் காப்பாற்றும் தன் தவறான கொள்கையைக் கைவிட்டு
தமிழர்களுடைய நீதிக்கானப் போராட்டத்திற்கு துணைநிற்கும் வகையில் சான்றுகளை திரட்டிவரும் மாந்த உரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்தின் பணிக்கு நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


தமிழ்நாடு ஈழத் தமிழர் விசயத்தில் வாளாவிருக்குமாயின் இந்திய அரசு தன் விருப்பம் போல் ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையாண்டுவிடும். எனவே, தமிழ்நாடு இனவழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தில் இருந்து விலகி நிற்கக்கூடாது. 2013 ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு கோரியும் இனவழிப்புக்கு பன்னாட்டுப் புலனாய்வை வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில்
ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தை நினைவுப்படுத்தி இந்திய அரசுக்கும ஐ.நா. உறுப்பரசுகளுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் எழுத வேண்டும், மீண்டும் ஒரு தீர்மானத்தை அமைச்சரவையில் இயற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *