ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது

இன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் அடையாறில் காந்தி கஸ்தூரி பாய் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் உள்ள கள அதிகாரியிடம்  ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஒழுங்குசெய்யப்பட்டிந்த இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் பார்வேந்தன்,  மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அனைத்திந்திய துணைத் தலைவர் பேராசிரியர் சரசுவதி, உரிமைத் தமிழ்தேசத்தின் ஆசிரியர்  தோழர் தியாகு, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன், மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சேக்  , தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவர் ச.குமரன், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் நிர்வாகி கோவேந்தன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யுனிசெப் அலுவலகத்தில் இருந்து கள அதிகாரியிடம் ஈழத் தமிழர் துயரத்தை எடுத்துச் சொல்லி ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனுவைக் கையளித்தனர். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஈழத் தமிழர்கள் சந்தித்து வரும் காணாமலடிக்கப்பட்டோர் பிரச்சனைப் பற்றியும் அது குறித்து நிலவி வரும் சர்வதேச மெளனத்தை எடுத்துக் காட்டினர்.
விடுதலைப் போராட்டம் நடக்கும் பல்வேறு நாடுகளில் காணாமலடிக்கப்படும் அவலம் நீடிக்கின்ற போதிலும் உலகில் எங்குமே இலங்கையில் நடந்தது போல் சரணடைந்தவர்கள் காணாமலடிக்கப்பட்டது கிடையாது. அப்படி சரணடைந்து காணாமலடிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர். சரணடைந்த குழந்தைகளைக் காணாமலடித்திருக்கும் அவலம் உலகில் எங்குமே இல்லை. இந்த உண்மைகள் ஊடகத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது.
கோரிக்கை மனு மற்றும் புகைப்படங்களை இணைப்பில்…
 
தோழமையுடன்
செந்தில்,
இளந்தமிழகம்
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *