மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம்!
ஆங்கிலத் திணிப்புக்கெதிரான மொழிப் போருக்கும் உறுதியேற்போம்!
மொழி விடுதலைப் போரையும் அரசியல் விடுதலைப் போரையும் இணைப்போம்!
கீழப்பளுவூர் சின்னச்சாமி தனது 27 வது அகவையில் இதே நாளில் தான் 1964 ஆம் ஆண்டு திருச்சி பொன்மலை தொடர் வண்டி நிலையத்தில் ’தமிழ் வாழ்க’ என்ற முழக்கத்துடன் தீக்குளித்தார். இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிராய் தன் உடலை விறகாக்கி உயிரால் தீ மூட்டினான் அந்த மாவீரன். அவரைத் தொடர்ந்து கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சிவகங்கை இராஜேந்திரன், பீளமேடு தண்டபானி என்று தமிழுக்காகத் தம்மைப் பலிகொடுத்தவர்களின் பட்டியல் இது. இவை மட்டுமல்ல, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். அவரைத் தொடர்ந்து போராடும் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறையால் ஐநூறுக்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதே மொழிப் போரின் ஈக வரலாறு. இத்துணை ஈகத்தை மொழியுரிமைக்காக செய்த இனம் தமிழினம். இன்றைக்கு மொழியுரிமைத் தளத்தில் நம் நிலை என்ன?
இந்த ஈகத்தையும் போராட்டத்தையும் அறுவடை செய்த ’முன்னேற்றக் கழகங்கள்’, அதிகாரத்தில் இருந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் இந்த ஈகத்திற்குப் பொறுப்புக் கூறுபவர்களாக நடந்து கொள்ளவில்லை. ’தமிழ் வாழ்க’ என்பதை மறந்துவிட்டு ’இந்தி எதிர்ப்பு’ என்பதோடு போராட்டத்தின் இலக்கை சுருக்கிக் கொண்டனர். தமிழருக்கு ஒரு சிக்கல் உண்டு. ’இந்தி ஒழிக’ என்று சொல்லிவிட்டு அவ்விடத்தில் ஆங்கிலத்தை அமர வைக்க அனுமதிப்போம். அணு உலை வேண்டாம் என்போம் ஆனால் மாற்று என்ன என்பதில் தெளிவிருக்காது, கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கையை எதிர்ப்போம், ஆனால் மாற்று வளர்ச்சிக் கொள்கை எப்படியிருக்க வேண்டும் என்று சொல்லத் தவறுவோம். இந்துத்துவத்தை, இந்தி தேசியத்தை எதிர்ப்ப்போம், ஆனால் அதற்கு மாற்றான தமிழ்த்தேசியத்தை நிறுவத் தவறுவோம். இப்படி எதிர்ப்பு அரசியலோடு நின்றுவிட்டு இலக்கு நோக்கிய முழக்கங்கள், போராட்டங்கள் ,கொள்கை வகுப்பு, நடைமுறை என்பதில் தவறவிட்ட வரலாற்றில் ஒன்றாக மொழிப் போராட்டமும் ஆகிவிட்டது.
இன்று ஆட்சி மொழியாய்த் தமிழ் இல்லை, கல்வி மொழியாய்த் தமிழ் இல்லை, வழக்காடு மொழியாய்த் தமிழ் இல்லை, வழிபாட்டு மொழியாய்த் தமிழ் இல்லை! என்ன வளம் இல்லை தமிழ் மொழியில் என்று பெருமை பேசிய தமிழர்கள், தமிழ்நாட்டில் தமிழ் எங்குமே இல்லை என்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார். இந்த அரைவேக்காட்டுக் கழக கண்மணிகள் தமிழ்நாட்டை அயல் முதலீட்டுக்கான திறந்த வீடாக்கும் பொருளியல் கொள்கை கொண்டிருப்பதால் மொழிக் கொள்கையில் ஆங்கிலத்தை அடுப்பங்கரை வரை கொண்டு வருவதை தவிர வேறு என்ன செய்வார்கள்?
”வெள்ளையனே வெளியேறு” என்றோம், ”அன்னியப் பொருட்களைப் புறக்கணிப்போம்” என்றோம். அன்றைக்கு இதை தேசப் பற்று என்றார்கள். இன்றோ அயல்முதலீட்டை எதிர்த்தால், ஹைட்ரோகார்பன் திட்டத்தை, ஸ்டெர்லைட்டை எதிர்த்தால் தேசத் துரோகி என்கிறார்கள். இப்படி நிலைமை தலைகீழாய் மாறிப் போயிருக்கிறது. சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்க ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தும் இந்திய ஆளும் வகுப்பு ஆங்கிலத்தை வெற்றிகரமாக திணித்து விட்டது. நடந்து முடிந்த அயல் முதலீட்டாளர் மாநாட்டில் அமைச்சர் நிர்மலா சீதாரமன் தமிழ்நாட்டு இளைஞர்களைப் பார்த்து ஜப்பானிய மொழியையும் கொரிய மொழியையும் படிக்கச் சொல்கிறார். எந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சுக்காரரையும் போர்த்துகீசியரையும் விரட்டியடித்தோமோ அந்தக் கொடிகள்தாம் அயல் முதலீட்டாளர் மாநாட்டின் விளம்பரங்களில் பளபளக்கின்றன. பிரெஞ்சு, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் என பன்னாட்டுக் கொடிகளை வணங்கி அவர்களுக்கு விருந்து வைப்பதுதான் வளர்ச்சியாம்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புக்கு அடிப்படையாய் ஆரிய, பார்ப்பனிய எதிர்ப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு அமைந்தது. ஆங்கிலத் திணிப்பை எதிர்க்க வேண்டுமென்றால் வல்லாதிக்கப் பொருளியல், அரசியல் எதிர்ப்பு அடிப்படையாய் அமைய வேண்டும். எப்படி தமிழ்ச் சமூகம் வடவர் ஆதிக்க எதிர்ப்பில் ஊறித் திளைத்திருக்கிறதோ அப்படியே வல்லாதிக்க எதிர்ப்பிலும் ஊறித் திளைத்தாக வேண்டும். சுனாமி போல் எழும் வல்லாதிக்கப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிராய்ப் போர்க்கொடி தூக்க வேண்டும்.
கழக ஆட்சிகள் செய்த தீமைகளில் எல்லாம் உச்சமாய்த் தாய்ப்பாலில் நஞ்சு கலக்கும் தகப்பன் போல் ஆங்கில வழிக்கல்வியை அரசுப் பள்ளியில் செயல்படுத்தி வருகிறது. கல்வியின் அடிப்படையைத் தகர்க்கும் கயமையை செய்து வருகின்றனர். அணு மின்சாரத்தை விட்டொழித்து ஐரோப்பியர் வேறு வழிகளை நோக்கி நகர்ந்துவிட்டனர். ஆனால், அவர்கள் தூக்கி வீசும் அணு உலைக் குப்பைகளுக்கான களமாகத் தமிழகத்தைக் கழகங்கள் மாற்றி வருகின்றன. போட்டித் தேர்வுகளை விட்டு மேற்குலகம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், இங்கே நீட், நெட், டெட் எனப் போட்டித் தேர்வுகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் திணிக்கின்றன தில்லி கார்ப்பரேட் அரசுகள். 1960 களிலேயே காப்பர் உருக்கு ஆலைகள் அமைப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொண்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கொள்கை முடிவெடுக்க மறுக்கிறது அடிமை எடப்பாடி அரசு. அந்த வரிசையில் ஆங்கில வழிக் கல்வியை ஆரம்பக் கல்வியிலேயே புகுத்தியுள்ளது தமிழக அரசு. குழந்தைகளுக்கு அயல் மொழியில் பாடம் கற்பிப்பது, பகுத்தறிவுக்கோ, அறிவியலுக்கோ ஒவ்வாத வன்முறை அல்லவா? இப்படி உலகம் விட்டொழித்த சேற்றை எல்லாம் வாரி, தமிழ்நாட்டின் மீது பூசிக் கொண்டிருக்கின்றது இந்திய அரசு. அந்த இந்திய அரசிடம் தமிழர் உரிமைகளை அடகு வைப்பதற்குப் போட்டி போடுவதாகவே முன்னேற்றக் கழகங்கள் இருந்து வருகின்றன.
மொழிப் போர் ஈகியர் நாளில், ”ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சந்தை, ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மதம்” என தமிழ்நாட்டை உலகமய, காவிமயத்தில் கரைக்கப் பார்க்கும் ஒற்றைமைய அரசியலை முறியடிக்க உறுதி ஏற்போம். காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரக் கூட்டணியை முறியடிக்க உறுதியேற்போம். இந்தக் கூட்டணிக்குப் பல்லக்குத் தூக்கும் இங்குள்ள நரிகளை விரட்டியடிப்போம். தமிழ்நாட்டிற்குத் தலைமை ஏற்கும் சீர்த்திருத்தவாத அரசியலை முறியடித்தாலொழிய மொழிப் போர் ஈகத்திற்கு வரலாற்றில் நீதி செய்ய முடியாது. முன்னேற்றக் கழகம் என்று வந்தாலும் சரி நாமெல்லாம் தமிழரென்று சொல்லி வந்தாலும் சரி சந்தர்ப்பவாதத் தேர்தல் பதவி அரசியலால் தில்லியின் காலடியில் வீழ்ந்துக் கிடப்பதை இனியும் ஏற்க முடியாதென மொழிப் போர் ஈகியரின் பெயரால் சூளுரைப்போம்!