”தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்” இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 1 ஈகி சங்கரலிங்கனாரின் ஆன்மா இராமதாசுகளை மன்னிக்குமா?

”வட வேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்”

– தொல்காப்பியத்திற்கான முன்னுரையில் பனம்பாரனார்

“தமிழகப் படுத்த விமிழிசை முரசின்

வருநர் வரையாப் பெருநாளி ருக்கை”

  – அகநானூறு 227 ஆவது பாடல்

“நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி

வடிநவில் அம்பின் வில்லோர் பெரும

கைவள் ஈகைக் கடுமான் கொற்ற

வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்”

– புறநானூறு 168 ஆவது பாடல் கருவூர் கதப்பிள்ளை சாத்தனார்

“இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்

தமிழ்முழு தறிந்த தன்மையன் ஆகி”

 -சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்

”நும் நாடு யாது என்றால்  தமிழ்நாடு என்றல்”

-தொல்காப்பத்தியத்திற்கு 11 ஆம் நூற்றாண்டில் உரையெழுதிய இளம்பூரணர்

வடவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரையான தமிழ் பேசும் உலகம் தமிழ்நாடு என்றும் தமிழகம் என்றும் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. பல்வேறு சிற்றரசுகள் இருந்தபோதும் ஒற்றை அரசின் கீழான ஆட்சிப்புலமாக இல்லாத போதும் இந்நிலப்பகுதியை ஒரே மொழி பேசும் மக்கள் – அதாவது தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதி என அடையாளப்படுத்தி இருப்பதைக் காணமுடிகிறது.

இத்தகைய வரலாற்றுப் பின்புலம் கொண்டிருப்பினும்  போகிற போக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் இராமதாசு ”சிறியவையே சிறப்பானவை” என்ற தலைப்பில் தமிழ்நாட்டை மூன்று மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார். மொழிவழி மாநிலங்கள் அமைந்த பிறகு உருவானப் பல்வேறு புதிய மாநிலங்களையும் இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தனி மாநிலக் கோரிக்கைகளையும் எடுத்துக்காட்டி ’வளர்ச்சிக்குவழி மாநிலங்களைத் துண்டாடி சிறிதாக்குவது’ என்று எளிய வாய்ப்பாடு ஒன்றை சொல்லியுள்ளார்.

அவர் முன்வைத்த எடுத்துக்காட்டுகளில்  பெரும்பாலானவை புதிய மாநிலங்கள் தேசிய இனக் கூறுகளைக் கொண்டவை. அந்த உண்மையை மறைத்துவிட்டு ’வளர்ச்சி, நிர்வாகம்’ குறித்த சிக்கலாக இதை சுருக்குகிறார் மருத்துவர். இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் 1997 இல் சிந்தனை செம்மல் கு.ச. ஆனந்தன் எழுதிய நூலில் தனி மாநிலக் கோரிக்கைகள் பற்றிய பகுதியில் ( பக் 163) பின்வருமாறு எழுதுகிறார்.

” தனித்தன்மைகளைக் கொண்ட இனக் கூறுகள், தத்தம் தேசியத்தின் அடிப்படையில், தனி மாநிலங்கள் கோரி நின்றால், அத் தனி மாநிலங்களைப் பெறுவதன் மூலமாக, அம்மக்கள் அதனதன் ‘தேசிய முன்னேற்றத்திலும்; இயற்கை வளங்களைச் சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தி வளர்ச்சியடையச் செய்வதிலும், மக்கள் மேம்பாட்டை முன்வைத்து அதனையடையவும் பல்வேறு பணிகளிலும் தம் பங்களிப்பைத் தருவதற்குரிய சீரிய வாய்ப்புகளை வழங்குமென்றால் அத்தனி மாநிலங்களைக் கோருவது, அம்மக்களுடைய ஜனநாயக உரிமையாகும். அதனை மறுப்பதற்கு மைய- மாநில அரசுகளுக்கு உரிமையில்லை.”

”தனி மாநிலக் கோரிக்கைகளில், தனி இனத் தன்மையை வெளிப்படுத்தக் கூடிய தீவிர வேட்கையும் பொருளியல் மேம்பாட்டு ஆர்வமும் உயிரோட்டமாக உள்ளன.”

இத்தகைய சனநாயக நோக்கு நிலையில் இருந்து தெலங்கானா தொடங்கி விதர்பம், கூர்காலேந்து போன்ற தனி மாநிலக் கோரிக்கைகளை ஆதரித்து வந்துள்ளோம். அங்கே தனி இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களும் மாநில அரசின் இன, மொழி, சாதிய சார்பு மேலாதிக்கமும் இருப்பதன் அடிப்படையில் தனி மாநில கோரிக்கைகள் ஆதரிக்கப்பட்டன. அத்தகைய தனி மொழி, இன, பண்பாட்டு வேறுபாடும் அதன் அடிப்படையிலான மேலாதிக்கமும் தமிழக அரசில் நிலவுகிறதா? என்று மருத்துவர் சொல்ல வேண்டும். ஆளும்வர்க்கப் பிரதிநிதிகளில்கூட பொது சொத்தைக் கொள்ளையடிப்பதில் இராயபுரம் ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமி, பெரியகுளம் பன்னீர்செல்வம் என வடக்கு, மேற்கு, தெற்கு தமிழகத்தில் இருந்துவந்தவர்கள் பங்குபோட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிலவுகிறதென்றால் அதற்கான காரணம் என்ன  என்று ஆய்ந்து தீர்வுகாண வேண்டும். 19.98 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தரபிரதேசத்திற்கு 125 அதிபர்கள் இருக்க வேண்டாமா? என்று நிர்வாக மேம்பாட்டிற்காக கவலைப்படுகிறார் மருத்துவர், 138 கோடி பேர் வாழும் ஏக இந்தியாவிற்கு எத்தனை பிரதமர்கள் இருக்க வேண்டும்? இவ்வளவு பெரிய நாட்டின் அதிகாரம் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாமல் மென்மேலும் நடுவண் அரசில் அதிகாரம் குவிக்கப்படுகிறதே!  இது வளர்ச்சிக்கு தடையில்லையா? மருத்துவரின் தர்க்கப்படி, சிறியதே சிறந்தது என்ற அடிப்படையில்  தமிழ்நாடு இந்தியாவின் பகுதியாக இல்லாமல் சிறிய, தனிநாடாக இருந்தால் வளர்ச்சி அடைவதற்கு வசதியாக இருக்கும் என்று அவர் கேட்பாரா? மாட்டார்.

ஏனெனில், வளர்ச்சிவாதம் என்பது தேசிய இனக் கோரிக்கைகளுக்கு எதிராக வலதுசாரிகள் பயன்படுத்திவரும் சொல்லாடலாகும். கடந்த ஆகஸ்டில் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பின்தங்கியதையும் இராசபக்சே கட்சியினர் தமிழர் தாயகப் பகுதியில் மூன்று இடங்களில் வெற்றிப் பெற்றதையும் சுட்டிக்காட்டி, மக்கள் வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளதாக துக்ளக் இதழில் அகமகிழ்ந்து எழுதினார் ஊடகவியலாளர் மாலன். அதுபோல்தான், தனி மாநிலக் கோரிக்கைகளையும் தமிழ்நாட்டைக் கூறு போடுவதையும் முடிச்சுப் போட்டு ’வளர்ச்சி’, ’நிர்வாகம்’ எனப் பல்லவிப் பாடியிருக்கிறார் மருத்துவர்.

பதவி அரசியலுக்காக தலித் அல்லாதோர் கூட்டமைப்புக் கட்டிய போது அதுவொரு பெருந்தவறல்ல என்று எண்ணியவர்கள்கூட இப்போது மருத்துவரைக் கண்டிக்க முன்வந்துள்ளனர். சாதியின் அடிப்படையில் மக்களிடம் பிரிவினை வளர்ப்பதை தமிழ்த்தேசியத்திற்கு எதிரான செயலாக அவர்கள் பார்க்கவில்லை போலும்! ஆனால், வளர்ச்சியின் பெயரால் தமிழ்நாட்டைப் பிரிக்க சொல்வது குற்றம் என்று கருதுகின்றனர். எனவே, தமிழ்த்தேசிய முகாமில் மருத்துவர் இராமதாசை விமர்சிக்க முன்வராதவர்கள்கூட இப்போது வாய்திறந்துள்ளனர். பதவிக்காக சாதி அரசியல் செய்பவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு மருத்துவர் சமகால எடுத்துக்காட்டு.

தன் மகன் அன்புமணி முதல்வராக வேண்டும் என்பதற்காக தலித் வெறுப்பு அரசியல் செய்தவர் இப்போது தமிழ்நாட்டை துண்டாடச் சொல்கிறார். பதவிக்காக எதையும் செய்யத் துணிந்தவர்களால்தான் வரலாற்றின் பக்கங்கள் நிரம்பி கிடக்கின்றன. ஆனால், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பதவியை தூக்கியெந்தவர்களின் நினைவுகளை மலை உச்சியில் ஒளிரும் அகல் விளக்குபோல் வரலாற்று அன்னைப் பாதுகாத்து நிற்கிறாள்.

அவரும் ஒரு மருத்துவர் தான். மருத்துவர் சன் யாட் சன்! சீனாவின் தேசத் தந்தை. 1911 இல் சீன தேசிய புரட்சிக்கு தலைமை தாங்கியவர். பதவிப் போட்டியில் சீனா துண்டாடப் பட்டுவிடக் கூடாது என்பதில் மருத்துவர் சன் யாட் சென் எந்தளவுக்கு அக்கறை கொண்டிருந்தார் என்று ”பூகோளவாதம் புதிய தேசியவாதம்” என்ற தலைப்பில் யாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் மு.திருநாவுக்கரசு எழுதியுள்ள நூலில் பக்கம் 30 இல் பின்வருமாறு எழுதுகிறார்.

”அப்புரட்சியின் போது அவர் இடைக்கால சீன ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தப்பட்டார். புரட்சி பாதி வெற்றியில் முடிந்தது. அப்போது சீனாவின் தென்பகுதி சன்யாட் – செனின் தலைமையில் கீழ் வந்தது. ஆனால், வட சீனா சக்கரவர்த்தியின் முதலமைச்சரான யூவான் – ஷிகை என்பவருக்கு விசுவாசமான ‘பியாங் இராணுவத்தின்’ ( Beiyang Army ) வசம் இருந்தது. இந்நிலையில் யூவான் – ஷிகையை ஜனாதிபதியாக்க அந்த இராணுவம் விரும்பியது. அப்போது சன்யாட் – சென் தான் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக வற்புறுத்திய போதிலும் சன்யாட் – சென் பின்வருமாறு முடிவெடுத்தார்.

வடசீனாவிற்கு யூவான் – ஷிகையும், தென்சீனாவிற்கு சன்யாட் – சென்னும் ஜனாதிபதியாவதன் மூலம் சீனா நிரந்தரமாக இரண்டாகப் பிளவுபட்டுவிடும் என்றும் யூவான் – ஷிகை பேராசை கொண்ட ஒரு ஜனநாயக விரோதியாக இருந்தாலுங்கூட சீனாவின் ஐக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவரையே ஜனாதிபதியாக ஆக்குவது என்றும் ஒருநாள் அவர் சீன தேசிய ஜனநாயகத்தின் பேரால் இறுதியில் வீழ்த்தப்படுவார் என்றும், ஆனால் அதை மீறி இரு பகுதிக்கும் இரு ஜனாதிபதிகள் எனப் பதவியேற்றால் அந்த அரசியல் தளத்தில் சீனா நிரந்தரமாக பிளவுபட்டு இரண்டு நாடுகளாக மாறிவிடும் என்றும் கணித்து, இதில் சீன தேசிய ஐக்கியத்திற்கு முதன்மை கொடுத்து தன் பதவியைத் துறப்பதே, சரியென்ற முடிவுக்கு வந்து அதன் அடிப்படையில் 1912 ஆம் ஆண்டு யூவான் – ஷிகைக்கு சன்யாட் – சென் தந்தியனுப்பி தன் பதவியைத் துறந்து பதவியைவிடவும் தேசம் முதன்மையானது என்பதற்கு முன்னுதாரணமானார்.”

கெடுவாய்ப்பாக நமக்கு வாய்த்த மருத்துவர்களில் சிலர் எதிரியின் காலடியில் சரணடைபவர்களாக இருக்கின்றனர். ஆனால், தமிழக அரசியலில் மருத்துவர் இராமதாசு ஒன்றும் விதிவிலக்கல்ல.  முதல்வர் பதவியின் தீரா வேட்கை கொண்ட எந்தவொரு தலைவரும் தமிழ்நாட்டைத் துண்டாடினால்தான் முதல்வராக முடியுமென்று நாட்டைத் துண்டாடுங்கள் என்று சொல்லத் தயங்கமாட்டார் என்பதை எந்த நாளும் மறந்துவிடக் கூடாது.

இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல் தமிழ்நாடு, தமிழகம் என்று தொல்காப்பியக் காலந்தொட்டு புழங்கி வந்தபோதும் சுதந்திர இந்தியாவில் நம் நாடு அப்படி அழைக்கப்படுவதற்குக்கூட ஈகி  சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு பட்டினிப் போர் நடத்தி 73 ஆவது நாளில் உயிர்விட நேர்ந்தது. அவர் பிறந்தது விருதுநகரில்; புதைக்கப்பட்டது மதுரையில்; கோரியதோ குமரி முதல் திருத்தனி வரையிலான ஆட்சிப்புலத்தை சென்னை மாகாணமென்று சொல்லாமல் தமிழ்நாடென அறிவிக்குமாறு. அப்படி இன்னுயிர் தந்து ஈட்டிய செல்வத்தைத்தான் வட தமிழகம், கொங்கு நாடு, தென் தமிழகம் என்று கூறு போடச் சொல்கிறார் மருத்துவர் இராமதாசு. ஈகி சங்கரலிங்கனாரின் ஆன்மா தமிழ்நாட்டை உடைக்கச் சொல்லும் இராமதாசுகளை மன்னிக்குமா?

– செந்தில்

ஒருங்கினைப்பாளர், இளந்தமிழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *