துவாராகா என்ற பெயரில் ஆள்மாறாட்டம்! இது ஈழ அரசியலைக் குழப்பி சிங்கள அரசுக்கு சேவை செய்யும் வேலை! இளந்தமிழகம் இயக்கத்தின் செய்தியறிக்கை
கடந்த நவம்பர் 27 அன்று ’இன்ப தமிழ் ஒளி’ வலைதளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா மாவீரர் நாள் உரையாற்றுவது போல் ஒரு பதிவு செய்யப்பட்ட காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக, துவாரகா உயிருடன் உள்ளார், தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் பேசுகிறார், ’அப்பாவும் அம்மாவும் நலமுடன் உள்ளனர்’ என்று சொன்னார், மாவீரர் நாள் அன்று தோன்றுவார் என்றெல்லாம் பேசப்பட்டது.
ஈழத்தில் உள்ள கட்சிகள், அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் என எவரும் ’துவாரகாவின் வருகையை’ நம்பியதாக தெரியவில்லை.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஐயா பழ.நெடுமாறனும் கவிஞர் காசி அனந்தனும் இவர்களது கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் சிலரும் மாவீரர் நாள் அன்று பேசியது துவாராகாதான் என்றும் தலைவர் பிரபாகரனும் மதிவதனி அம்மையாரும் உயிருடன் உள்ளனர் என்றும் பேசி வருகின்றனர். வேறு எந்த கட்சிகளும் அமைப்புகளும் இதை நம்புவதற்கு அணியமாக இல்லை.
’துவாரகாவுடன் பேசினேன்’ என்று அவரது தாயார் மதிவதனியின் அக்கா அருணா கூறினார். ”அப்படி அவர் உயிருடன் இருந்தால் எங்களைத் தொடர்பு கொண்டு பேசியிருப்பார், நான் அவர் உயிருடன் இருப்பதாக சொல்வதை நம்பவில்லை’ என பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் சொன்னார்.
துவாராகா என்ற பெயரில் தோன்றியவர் வேறு ஒருவர் என்றும் அவரது பின்புலம் தொடங்கி அவரது சுவிட்சர்லாந்து அடையாள அட்டை வரை புலம்பெயர் வாழ் தமிழர்கள் வெளியே கொண்டு வந்துள்ளனர்.
இதுவொரு ஆள் மாறாட்ட வேலை என்றும் மாவீரர் நாளில் துவாராகா என்ற பெயரில் அறிக்கை வாசிக்கப்பட்டதை தாம் நிராகரிப்பதாகவும் புலம்பெயர் நாடுகளில் செயல்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் போராளிகள் கட்டமைப்பும் அறிவித்துள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை, ’போலி துவாரகா’ என்று சொன்ன நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் போராளிகள் கட்டமைப்பையும் கண்டித்துள்ளது.
பாலச்சந்திரன் மற்றும் பிரபாகரனின் உயிரற்ற உடலின் படங்கள் வெளிவந்தது போல் துவாரகா விசயத்தில் எதுவும் வெளிவரவில்லை. இது அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற ஐயத்தை எழுப்புவதற்கு ஏதுவாக இருக்கிறது. மதிவதனி அம்மையாரின் உயிரற்ற உடலைக் காட்டும் புகைப்படத்தை 59 ஆவது படையணியில் இருந்த மேஜர் அசித சிறிவர்தனா கடந்த ஓராண்டுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
பழ.நெடுமாறனும் காசி அனந்தனும் ’துவாரகா உயிருடன் இருக்கிறார்’ என்று மட்டும் சொல்லியிருந்தால் அது குறித்து ஆராய்ந்து முடிவுசெய்ய வேண்டிய தேவை இருந்திருக்கும். ஆனால், தலைவர் பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லும்போது எல்லாம் வடிகட்டினப் பொய் என்ற முடிவுக்கு எளிதில் வந்துவிட முடிகிறது.
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை சிங்களர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது சிங்கள அரசின் தேவை. பிரபாகரனின் உடலைக் காட்டாமல் புலிகளுக்கு எதிரானப் போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று இராசபக்சே அறிவிக்க முடியாது.
’பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’ என்றொரு செய்தியை ஈழ, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது இந்திய உளவுத் துறையின் தேவையாக இருக்கக் கூடும். ஏனெனில், பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தி அன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய உளவுத் துறை கருதியிருக்கக் கூடும்.
2009 மே மாதத்தில் இருந்தே இந்த குழப்ப நிலையை பழ.நெடுமாறனும் காசி அனந்தனும் அவருக்குப் பின்னால் இருக்கும் புலம்பெயர் வாழ் ஆற்றல்களும் பேணி வருகின்றனர். “தலைவர் வரும்வரை காத்திருப்போம்’, “நிறைவாகும் வரை மறைவாக இரு” ”தலைவர் நலமுடன் உள்ளார். ஐந்தாம் கட்ட ஈழப் போர் வெடிக்கும்” என்ற வசனங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பேசப்பட்டு வருகின்றன. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு சான்று காட்ட வேண்டிய தேவையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.
பாலச்சந்திரன் படமும் பிரபாகரன் படமும் சானல்-4 காணொளியில் வெளிவந்தது. அவை குறித்த காலத்தில் குறித்த இடத்தில் எடுக்கப்பட்டவைதான் , அதில் வெட்டிஒட்டியவை எதுவும் இல்லை என்று ஆய்வு செய்ததன் அடிப்படையில் சானல்-4 நிறுவனம் அப்போதே அறுதியிட்டு சொல்லியிருந்தது. ’பிரபாகரன் உயிருடன் உள்ளார்’ என்று சொல்வோர் அந்த காணொளி பொய்யானது என்று மெய்ப்பிப்பதற்கு எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்கான சான்றாவணத்தை 2010 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு இந்திய அரசின் நடுவண் புலனாய்வுக் கழகத்திடம் கொடுத்துவிட்டதென அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருந்தார்.
’பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’ என்ற கூற்றை நாம் கேள்விக்குள்ளாக்கினால், அவர் ஈழம் என்ற கோரிக்கையின் ஆளுருவம், அவர் உயிருடன் இல்லை என்றானால் ஈழப் போராட்டத்தைக் முன் கொண்டு செல்ல முடியாது என்று அதற்கொரு பதிலையும் தந்து வந்தனர்.
இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரியில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்தபடி பிரபாகரன் உயிருடன் உள்ளாரென பழ. நெடுமாறனும் காசி அனந்தனும் ஊடகங்களுக்கு அறிவித்தனர். அப்போது அதை யாரும் நம்பவில்லை. அந்த பொய்யின் இன்னொரு நீட்சியாகவும் அதை உண்மையாக்கும் முயற்சியாகவும்தான் துவாரகா என்று சொல்லி யாரோ ஒருவரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர்..
பழ நெடுமாறன், காசி அனந்தன் ஆகியோருக்குப் பின்னால் இருக்கும் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த ஆற்றல்கள்தான் இந்த வேலையை செய்துள்ளனர் என்பதை எளிதில் அடையாளம் காண முடியும்.
”பிரபாகரன் உயிருடன் உள்ளார்” என்று சொல்வதும் அதை தொடர்ந்து ஐந்தாம் கட்ட ஈழப் போர் வெடிக்கும் என்று சொல்வதும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும்.
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேறும்போது அதற்கு தலைமை தாங்கிய தந்தை செல்வநாயாகத்தின் மறைவுக்குப் பின் ஈழ விடுதலை இயக்கம் முடிந்துவிடவில்லை. அது பிரபாகரனுக்கும் பொருந்தும்.
தலைவர் மறைந்துவிட்டார் என்பதால் உலகில் எந்த ஒரு போராட்டமும் முடிந்து போய்விடுவதில்லை. இது தமிழீழ் மக்களின் உணர்வையும் தமிழீழக் கோரிக்கையின் தேவையையும் குறைத்து மதிப்பிடுவதாகும். இந்த காரணத்தின் பெயரால் ’பிரபாகரன் இருக்கிறார்’ என்று தெரிந்தே பொய் சொல்வது தமிழீழ மக்களின் போராட்ட உணர்வையும் மாவீரர்களின் ஈகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும்.
இரண்டாவது, ஈழ விடுதலைப் போராட்டம் முதல் 30 ஆண்டுகள் தந்தை செல்வநாயகம் தலைமையில் அறவழியில் நடந்தது என்றும் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைமையில் ஆயுத வழியில் நடந்தேறியது என்றும் சொல்லப்படுவது உண்டு. முள்ளிவாய்க்காலுக்குப் பின் தமிழீழத் தாயகக் களம் அனுமதிக்கும் வகையில் கேப்பாபிலவுப் போராட்டம், காணாமற் ஆக்கப்பட்டோர் தம் உறவுகளின் போராட்டம், பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபயணம், தையிட்டிப் போராட்டம் என பல்வேறு வடிவங்களில் மக்கள் போராடி வருகின்றனர்.
2009 க்குப் பின் போராட்ட வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை தீர்மானித்து செயல்பட்டு வருவது தாயகத்தில் வாழும் மக்களே. வன்முறையான போராட்ட வடிவங்களை முன்னெடுப்பதாயினும் அது குறித்து முடிவு செய்ய வேண்டியதும் அவர்களே.
மாறாக, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் இருந்து கொண்டு ஐந்தாம் கட்டப் போர் வெடிக்கும் என்று போராட்ட வடிவத்தை தமிழர்கள் மீது திணிப்பது சரி அன்று. படைப்பூக்கமிக்க வழியில் களத்தில் உள்ளோர் இப்போராட்டத்தை முன்கொண்டு செல்வார்கள். அவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் எத்தன்மைத்தாயினும் அதற்கு தோள் கொடுத்து துணை நிற்பதே களத்திற்கு வெளியே நிற்கும் ஆதரவாளர்களின் கடமையாகும்.
காசி அனந்தனும் பழ நெடுமாறனும் பணத்திற்காக பொய்ப் புரட்டு வேலை செய்பவர்களோ அல்லது சிங்கள – இந்திய அரசுகளின் கைக்கூலிகளோ அல்ல. அவர்கள் தாம் செய்யும் இந்த பித்தலாட்ட வேலையால் போராட்டத்திற்கு நன்மை விளையும் என்று உண்மையாகவே நம்பக் கூடும்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்தி, பயங்கரவாதத்தை வீழ்த்த தமக்கு வாக்களிக்குமாறு சொல்லி அதிபராக முடிசூட்டிக் கொண்டார் கோத்தபய. சிங்கள ஆட்சியாளர்கள் துவாரகா ”மாவீரர் நாள் உரை” என்ற செய்தியை சிங்கள மக்களிடையே புலி அச்சுறுத்தலாக காட்டி வாக்கு அறுவடை செய்வதற்கு முயலக் கூடும். தமிழர் தாயகப் பகுதிகளில் படைக்குவிப்பையும் இந்தியாவில் புலிகள் மீதான தடையையும் தொடர்வதற்கு இவற்றையெல்லாம் ஒரு காரணமாக காட்டுவர். இந்த வகையில் இது எதிரிக்கு சேவை செய்யும் வேலையாகும். எனவே, இங்கு ஒரு செயல் நல்ல நோக்கத்தின் பெயரால் செய்யப்பட்டிருப்பது முக்கியமல்ல, அது ஏற்படுத்தக் கூடிய விளைவுதான் முக்கியமனது. அந்த விளைவின் அடிப்படையில்தான் அது மதிப்பிடப்படும்.
போலி துவாரகா அரங்கேற்றம் என்பது மக்களை மிகவும் முட்டாளாக மதிப்பிட்டு செய்த ஒரு நாடகம். அது ஏற்படுத்தக் கூடிய விளைவில் இருந்துதான் அதற்குப் பின்னால் இருந்தவர்களின் செயல் மதிப்பிடப்பட வேண்டும். புத்திசாலியான எதிரியைவிடவும் முட்டாள்த்தனமான நண்பன் மிகவும் ஆபத்தானவன் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
இந்த ஆள்மாறாட்ட வேலை என்பது ஆயுத போராட்டம்தான் முதன்மையான அரசியல் வழி என்று நம்புவோர் அதை மக்கள் மீது திணிப்பதற்கு செய்த பித்தலாட்ட வேலையாகும். அதன்மூலம் இதற்குப் பின்னால் இருக்கும் ஆற்றல்கள் போராட்டத்தின் தலைமையைக் கைப்பற்ற எண்ணுகின்றனர்.
எனவே, இவர்கள் பிரபாகரனையும் துவாரகாவையும் உயிர்த்தெழுப்ப முயல்வதை அரசியல் வழி பற்றிய பிரச்சனையாக கருதிப் பார்க்க வேண்டியுள்ளது. அரசியல் வழி பற்றிய பிரச்சனை என்ற மட்டத்திற்கு இதை உயர்த்தி இந்த விவாதத்தை முன்னெடுக்க முனைந்தால் அது போராட்டத்திற்கு வலுசேர்ப்பதாக அமையும்.
மேலும் இன்றைய மாறிய சூழலுக்கு ஏற்ற அரசியல் வழி என்ன என்பதை நடைமுறையில்தான் ஈழத் தமிழ் மக்கள் கண்டடையப் போகிறார்கள். இவ்விசயத்தில் அவர்களுக்கு முடிந்த உதவிகளை வழங்கி, துணை நிற்க வேண்டியதே தமிழ்நாடுத் தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் கடமையாகும்.
இது போன்ற ஆள்மாறாட்ட வேலை ஈழ அரசியலைக் குழுப்பும் என்பதை கருதிப் பார்த்து இது போன்ற மட்டமான உத்திகளை செயல்படுத்துவதை நம்மவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படிக்கு,
தோழர். செந்தில்,
இளந்தமிழகம் இயக்கம்.
9941931499