“இந்து இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை எனில் இது கவலரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்

’இந்து இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை எனில் இது கவலரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்.

நேற்று முன் தினம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, ”இந்து அமைப்பினருக்கும் பா.ச.க.வினருக்கும் பாதுகாப்பில்லை என்றும் மாநில அரசு இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும், இந்து இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும், இல்லை எனில் இது கவலரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்று சொல்லியுள்ளார். மத்திய அமைச்சரே இப்படி பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது மட்டுமின்றி எளிதில் கடந்துபோகக் கூடியது அல்ல. ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அந்த கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சர் இப்படி பேசுவது என்பது வரலாற்றின் கருப்பு அத்தியாயங்களைத் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு கொண்டு வருகிறது. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கவலரங்கள் நடத்தப்பட்ட 1970 கள் மற்றும் 1980 களின் முன் பாதியில் அந்த கலவரங்களைத் தூண்டிவிட்டவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான காமினி திசநாயக்கா, லலித் அதுலத் முதலி போன்றோரும் அடங்குவர். அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனின் பேச்சு அவர்களுடைய பேச்சையே நமக்கு நினைவுபடுத்துகிறது.

மூன்றாண்டு கால மோடி ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள், கிராமப்புறக் கூலி தொழிலாளர்கள், நகர்ப்புறத் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் புரிவோர், சிறுகுறு வணிகர்கள், மீனவர்கள், தலித் மக்கள், இஸ்லாமியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையினர் என எவரும் விட்டுவைக்கப்படாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மோடியின் முகத்தைக் காட்டி பா.ச.க.வினரால் தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியாது என்பதை பா.ச.க.வினர் உணர்ந்துவிட்டனர். தமிழகத்தில் உள்ள குறிப்பான நிலைமையாக, இஸ்லாமிய இயக்கங்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் இயக்கங்கள் சனநாயகப் போராட்டங்களில் முன்னரங்கில் நிற்கின்றன. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பேரழிவுத் திட்டங்கள் எதிர்ப்பு,

இந்தி சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மீனவர் படுகொலை எதிர்ப்பு, ஈழ விடுதலை ஆதரவு என தமிழகத்தின் அனைத்து உரிமைப் போராட்டங்களிலும் உணர்வுப்பூர்வமாக பங்கேற்பது மட்டுமின்றி மழை வெள்ளம், வர்தாப் புயல் போன்ற பேரிடர் தருணங்களில் தன்னிகரில்லா மீட்பு பணியில் ஈடுபட்டு தமிழ் மக்களின் மனங்களை வென்றிருக்கும் புறநிலைமை பா.ச.க. வினர் மதவெறியைத் தூண்டி அரசியல் செய்வதற்கு பெரும் தடையாக இருக்கிறது. இந்திய அளவில் பார்த்தால், இப்படியான ஓர் அரசியல் வெளியை உருவாக்கி முன்னுதாரணமிக்க சமூக அரசியல் சக்தியாக தமிழ்நாட்டின் இஸ்லாமிய பெருமக்கள் இருக்கின்றனர். இந்த நிலைமையில் மக்களைப் பிரித்து அரசியல் செய்யத் துடிக்கும் கழிசடைக் கூட்டத்தின் கடைசிப் புகலிடமாக கலவரங்களைத் தூண்டிவிட்டு அதில் பிழைப்பு நடத்துவதை ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. வினர் கையிலெடுத்து வருகின்றனர் என்பதைத் தான் பொன்.இராதாகிருஷ்ணனின் பேச்சு நமக்கு உணர்த்துகின்றது.

State sponsored riots என்று சொல்லப்படும் அரசால் ஊக்குவிக்கப்பட்டு நடத்தப்படும் கலவரங்களில் காவல்துறை, அரசு அதிகாரிகள், சங் பரிவார் அமைப்புகள், பா.ச.க. அமைச்சர்கள் என எல்லோரும் கைகோர்த்துதான் செயல்படுவர். அதிலும் குறிப்பாக கோவை, திருப்பூர், திண்டுக்கல், இராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் காவி பயங்கர சக்திகள் காலூன்றி இருக்கும் பகுதிகளாக இருக்கின்றன. கடந்த செப்டம்பரில் இந்து முன்னணியைச் சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த சசிகுமார் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்துத்துவ வெறியர்கள் கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களைக் கட்டுப்பாட்டில் எடுத்து கலவரம் செய்ததும் அதை காவல்துறை வேடிக்கைப் பார்த்ததும் அண்மைய உதாரணமாகும்.

இந்நிலையில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனின் முன்னறிவிப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்துத்துவ வெறி கும்பலை அம்பலப்படுத்தி பொது சமூகத்திடம் இருந்து தனிமைப்படுத்துவதே நமது மூலவுத்தியாக அமைய வேண்டும். அந்த இந்துத்துவ மதவெறிக் கும்பல் கலவரங்களை முன்னெடுப்பதற்கான தருணம் பார்த்து காத்து இருக்கிறார்கள். எந்தவொரு சிறு வாய்ப்பையும் பயன்படுத்துவதற்குரிய தயாரிப்புகள் அவர்களிடம் உள்ளது. எனவே, அவர்களுக்கு வாய்ப்பெதுவும் வழங்கிவிடக் கூடாது. அவர்கள் தமிழர்களைப் பிரித்தாள வாளேந்தி வந்தால் ஒற்றுமையைக் கேடயமாக்க வேண்டும் நாம். சமூக ஊடங்கங்களில் இருக்கும் அரசியல் உணர்வு பெற்றவர்கள்

தமக்கு வரும் செய்திகளை முன்னணுப்பும் போது(forward) அவற்றை ஒன்றிற்கு பலமுறை சரி பார்த்துப் பிறகு அனுப்ப வேண்டும். ஏனென்றால் வதந்திகள் தான் இந்துத்துவ வெறியர்களால் முதலில் பரப்பப்படும். அதற்கு சமூக அக்கறையுடையோர் எவரும் பலியாகிவிடக் கூடாது. ஊடங்களுக்கு ஒரு முக்கியக் கடமையுள்ளது. குறைந்தபட்சம் தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் விசயத்திலாவது ஊடக அறத்தைக் கடைபிடிக்க வேண்டும். அரசு மற்றும் உளவுத்துறையினரின் நிர்பந்தங்களுக்கு இசைந்து கொடுக்காமல் உண்மையை தமிழ் உலகத்திற்கு அறியச் செய்ய வேண்டும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் போன்ற சமூகப் பிரிவினர் ஒற்றுமையையும் மக்களையும் பாதுகாப்பதில் முகாமையானப் பாத்திரத்தை வகிக்க முன்வர வேண்டும்.

எல்லா முரண்பாடுகளும் ஒருபுள்ளியில் இரு அணிகளாகப் பிரிகின்றன என்பது இயங்கியலில் ஒரு விதி. அதன்படி, சாவர்க்கரும், கோல்வால்கரும், வல்லபாய் படேலும் ஒருமுகாமென்றால் ’ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு’ என்ற புள்ளியில் அம்பேத்கரும், பெரியாரும், பகத் சிங்கும், காந்தியும், காயிதே மில்லத்தும் இன்னொரு முகாம் என்பதைப் பருந்து பார்வையில் வரலாற்றைப் பார்த்தால் புரிந்துகொள்ள இயலும். இப்போது நாம் கைக்கொள்ள வேண்டிய செயலுத்தி இதுதான்.

வழிபாட்டுத் தளத்தை இடித்தவர்கள், பச்சைப் படுகொலைகளுக்கு கொஞ்சமும் அஞ்சாத ஆர்.எஸ்.எஸ்.-பா.ச.க. முகாமைச் சேர்ந்த இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனின் பேச்சைக் கண்டிப்பதோடு அதை எளிதில் கடந்த செல்லக் கூடியதாகக் கருதாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *