தோழர் ஓவியர் வீரசந்தானம் மறைவு! இளந்தமிழகத்தின் வீரவணக்கம்!

தமிழீழ விடுதலையை தமிழ்நாட்டு விடுதலையையும் பெரிதும் நேசித்த தோழர் ஓவியர் வீர சந்தானம் நேற்று மறைந்தார். அவருக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் வீரவணக்கம்!
                                                                 .
ஓவியர், சிற்பக் கலைஞர், நடிகர் என பன்முகம் அவருக்கு உண்டு. அவரது கலை ஆற்றலை  மக்களின் விடுதலைக்காக உவப்புடன் தந்த மனிதர்.  இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து அவரது அரசியல் பயணம் தொடங்குகிறது. தமிழ்ச் சமூகத்தில் ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும் விடுதலை அரசியலுக்கு பங்களிப்பு செய்யக் கூடிய கலை, இலக்கிய துறையினர் மிகக் குறைவு. அவ்வகையில் ஓவியரை இழந்தது நம் மக்களுக்கு  ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.  தமிழகத்தில் படைப்பூக்க மிக்க இளம் கலைஞர்கள் இவ்விழப்பை ஈடு செய்வதற்கு முன்வர வேண்டும்.
ஓவியரின் ஒவ்வொரு பேச்சிலும் அறச்சீற்றம் பொங்கி வரும். நமது போராட்ட வடிவங்கள் மீது அவருக்கு விமர்சனம் உண்டு. வீரஞ் செறிந்த போராட்டங்கள் தமிழ் மண்ணில் வளர வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. வருங்காலத்தில் நம்முடையப் போராட்டங்கள் அவர் விரும்பிய வகையில் வளர்ச்சியடைந்து முன்னேறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனெனில் எதிரி அத்தனை மூர்க்கமானவன், கொடூரமானவன்.
ஓவியர் உடலால் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். ஆனால், அவரது மூச்சுக் காற்று முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் தமிழ் மண்ணின் விடுதலை வானிலும் நிரம்பி இருக்கிறது.  அவருடைய, நம்முடைய இலட்சியங்கள் நிறைவேறும் வரை அது நம்மை உந்தித் தள்ளும், உசுப்பி விடும், உறங்க விடாது!
தோழர் ஓவியர் வீரசந்தானத்திற்கு வீர வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *