சமையல் எரிவாயுக்கான மானியம் ரத்து: மக்கள் மீது மோடி அரசு நடத்தும் ’சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ்’ – இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்.

சமையல் எரிவாயுக்கான மானியத்தை 2018 மார்ச் மாதத்திற்குள் முற்றாக ரத்து செய்யும்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இதை மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தனது எழுத்துப்பூர்வ பதிலின் மூலம் உறுதிசெய்துள்ளார். அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் மாதம் 4 ரூ அளவுக்கு உயர்த்திக் கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது.

18.11 கோடி பேர் மானிய விலையில் சமையல் எரிவாயு பெற்று வருகின்றனர். பிரதம மந்திரி உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் 2.5 கோடி ஏழை பெண்கள் இலவச எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். பா... ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டு வருமானம் 10 இலட்சம் ரூபாய் மேல் இருப்போரின் குடும்பங்களுக்கு எரிவாயு மானியத்தை ரத்து செய்தது. அது மட்டுமின்றி 1 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை தாமாக முன் வந்து மானியத்தில் இருந்து விலக்குப் பெற்றார்கள் என்றும் அதனால் சுமார் 22,000 கோடி ரூ அரசுக்கு மிச்சமானது என பொய்ப் பரப்புரையை மேற்கொண்டது அரசு. ஆனால், உண்மையில் 2000 ரூ கோடிதான் நேரடி பணப் பரிவர்த்தனை வழியாகவும் தாமாக முன் வந்து விலகியமையாலும் அரசுக்கு மிச்சமான பணம் என மத்திய தணிக்கை குழு ஜுலை 2016 இல் போட்டுடைத்தது. இப்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மானியத்தை ரத்து செய்துவிட்டது பா... அரசு.

கடந்த நவம்பர் 8 தொடங்கி இன்றைக்கு வரை அடுத்த அடுத்த பொருளாதார தாக்குதலை மக்கள் மீது தொடுத்து வருகிறது பா... முதலில் கறுப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் 500 ரூ, 1000 ரூ செல்லாதென அறிவித்தது. பின்னர் ஒரே வரி, ஒரே தேசம், ஒரே சந்தை என்ற பெயரில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு சென்றது. பா... ஆட்சியில் கிடுகிடுவென வளர்ந்துவரும் அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளைத் தவிர ஏனைய அனைத்து பிரிவினரும் பா... வின் கார்பரேட் பயங்கரத்தில் வாயடைத்துப் போயிருக்கும் வேளையில் எரிவாயு மானியம் ரத்து என்று அறிவித்துள்ளது பா... அரசு. முதலில் சுனாமி அதை தொடர்ந்து சூறாவளி அதை தொடர்ந்து நிலநடுக்கம் என வந்தால் ஒரு நாடு தாங்குமா? அப்படி தான் இருக்கிறது பா... வின் பொருளாதார சீர்திருத்தங்கள். ஜி.எஸ்.டி. யால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதெனப் பூரிப்புடன் மனதின் குரலில் ( ‘மன் கீ பாத்’) நேற்று முன் தினம் பேசுகிறார் மோடி. அடுத்த நாளே எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்கிறார். வளர்ச்சிப் பற்றி வாய்ப் பந்தல் போட்டுக் கொண்டே வயிற்றில் அடிக்கும் வல்லமை மிக்கவராக மோடி இருக்கிறார்.

பெரும்கடன் சுமையில் இருக்கும் மூன்றாம் உலக நாடுகள் தமது நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், விவசாயம், அத்திவாசியப் பொருட்கள் ஆகியவற்றிற்கு வழங்கி வரும் மானியத்தை வெட்டுமாறு பன்னாட்டு நிதி நிறுவனங்கள் நிர்பந்தித்து வருகின்றன. உலக வங்கி, உலக வர்த்தக மையம் போன்ற ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களைப் பொருத்தவரை மானியங்கள், இலவசங்கள் யாவும் செலவினங்களின் பட்டியலில் வருகின்றன. இப்படி நிர்பந்தித்திற்கு உள்ளாகும் நாடுகள் செலவினங்கள் குறைப்பு நடவடிக்கைகள் (austerity measures) மேற்கொள்ள வைக்கப்படுகின்றன. மானியங்கள் நீக்கப்பட்டு மக்கள் அடிப்படை தேவைகளுக்கு திண்டாடிய எடுத்துக்காட்டுகளை கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் கண்டோம். இந்தியாவிலும் மானியங்களை வெட்டி, மக்கள் நல அரசு என்ற வேசத்தைக் கலைப்பதை நோக்கி இந்திய ஆளும் வர்க்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், எரிவாயு சிலிண்டருக்கான மானிய வெட்டு, நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகத்தைப் படிப்படியாக குறைத்தல், விவசாயிகளுக்கான மானிய வெட்டு என ஒவ்வொன்றாய் அமல்படுத்தி வருகின்றது அரசு. பெருமுதலாளிய ஆளும்வர்க்கத்திற்கோ நீர், நிலம், மின்சாரம் என யாவும் மானியத்தில் தந்து வரிச் சலுக்கை, ராயல்டி தொகை குறைப்பு, தொழிலாளர் நலச் சட்டத் சீர்த்திருத்தங்கள் என எத்தனை எத்தனை சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுகின்றன. இந்த அரசு யாருக்கானது என்பதை ஒவ்வொரு நாளும் வெளிச்சம் போட்டுக் காட்டிவருகிறது.

மலையளவு கொள்ளையடித்துவிட்டு அதில் கடுகளவு கிள்ளிக் கொடுப்பது தான் மானியமும் இலவசங்களும் ஆகும். மக்கள் மொழியில் சொல்வதானால் ‘அவன் அப்பன் ஊட்டு காசில இருந்து கொடுக்குகிறானா?’. தேசத்தின் வளங்களை சூறையாடியதில் இருந்தும் மக்களின் உழைப்பை சுரண்டி பெறப்பட்ட உபரியிலிருந்தும் தான் மக்களுக்கு சொற்பமாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

எனவே, மானியத்தை செலவினம் என்று கருதாமல், மக்களிடம் இருந்து சுருட்டியதைத் திருப்பிக் கொடுக்கிறோம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஒருபக்கம் வரியைத் தலையில் ஏற்றிவிட்டு மறுபக்கம் மானியங்களை ரத்து செய்து மக்களை வாட்டி வதைப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பா... வா? காங்கிரசா? அல்லது மோடியா? ராகுலா? என்று பார்த்தது போதும். முதலாளித்துவமா? சோசலிசமா? என்று தெளிந்து தெரிவு செய்ய வேண்டிய காலமிது என்பதையும் இவ்வறிக்கையின் வாயிலாக பகிர்கிறோம்.

தோழமையுடன்,

செந்தில்,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *