தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ் – தொழிற்சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் 04.01.2018 முதல் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 65 விழுக்காட்டிற்கும்  மேலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் மொத்தம் 1.4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தமிழ்நாட்டையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மே திங்களில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் தங்களுக்கு தரப்படவேண்டிய நிலுவைத் தொகை ரூ.7500 கோடியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை உடனடியாக செலுத்திடக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கான போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, காப்பீட்டுத் தொகை முதலிய தொழிலார்களின் ஊதியத்திலிருந்து பிடித்து வைத்த நிதியைக் கொண்டு போக்குவரத்துத் துறையை இயக்கும் அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்த வைத்த காப்பீட்டுத் தொகையை முறையாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு செலுத்தாதன் காரணமாக தொழிலாளர்கள்  தங்கள் அவசர மருத்துவச் தேவையைக்கூட பெறும் வழியின்றி தவிக்கின்றனர். இவ்வாறாக எந்தவித நெருடலும், குற்ற உணர்வுமின்றி போக்குவரத்துத் துறையின் நிதிச் சுமையை அப்பாவித் தொழிலாளர்களின் தலையில் ஏற்றுவது இழி செயலாகும்.
                                                         
அனைத்து மக்களுக்குமான  பொது போக்குவரத்து சேவையை செய்துத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும். பொது போக்குவரத்தின் மூலம் பெருமளவில் பயனடையும் பயனாளிகள் என்ற அடிப்படையில், தமிழக அரசின் இந்த பொறுப்பற்ற தனத்தை கண்டிக்கவும், கேள்வி கேட்கவும், சமூகத்தில் சக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டி கேட்கவும் ஒவ்வொரு ஐடி தொழிலாளருக்கும் தார்மீக பொறுப்புண்டு.
போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் தங்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19500 வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தபோதும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்கள்  வெறும் 2.44 விழுக்காடு மட்டும் உயர்த்தி ரூ.17700 என அறிவித்து இருக்கிறார். இதுமட்டுமின்றி நிலுவையிலுள்ள ரூ.7000 கோடி பற்றி அமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. சென்ற ஆண்டு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்குப் பின் ரூ.1500 கோடியை அரசு கொடுத்துள்ள போதிலும் இன்று வரை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியையும் காப்பீட்டுத் தொகையையும் பயன்படுத்துவதை  போக்குவரத்துத் துறை நிறுத்தியபாடில்லை. இப்படியாக தொடர்ந்து போக்குவரத்துத் துறை தொழிலாளர்களை வஞ்சித்து வரும் தமிழக அரசையும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறையையும் ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக அரசே, போக்குவரத்துத் துறையே,
* உடனடியாக நிலுவையிலுள்ள ரூ.7000 கோடியை வழங்கிடு!
* தமிழ்நாடு போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடு!
* நட்டத்தில் இருந்து போக்குவரத்துத் துறையை மீட்க தொழிற்சங்கங்கள் கொடுத்துள்ள பரிந்துரைகளை உடனே அமல்படுத்தி, அனைவருக்குமான தரமான பொது போக்குவரத்தை உறுதி செய்க!
பரிமளா,
தலைவர்,
ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ்(FITE) – தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *