முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு இளந்தமிழகம் இயக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது.

நேற்று(ஆகஸ்ட் 7) மாலை 6:10 அளவில் தேனாம்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கலைஞர் மு.கருணாநிதி தனது 94 ஆவது அகவையில் சிகிச்சை பலனின்றி உயிர்விட்டுள்ளார். அவரது மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள தி.மு.க. வினருக்கும் சமூகநீதிப் பற்றாளர்களும்  உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது இளந்தமிழகம்.

நாகை மாவட்டத்தில் திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் சமூக மற்றும் பொருளியல் நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணியில் பிறந்து அரசியலில் மாபெரும் வெற்றிகளை ஈட்டியவர். சுமார் 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை! 5 முறை முதல்வர் பொறுப்பு.! 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என தமிழக அரசியல் வானில் நிரம்பிக்கிடக்கிறார்.  இரண்டாம் உலகப் போரையும் அதற்குப் பிந்தைய  பனிப் போர் காலத்தையும் இரசியா வீழ்ந்த 1990 க்குப் பிந்தைய உலகமய, தாராளமய உலகத்தையும் கண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தக் கூடியவராய் இருந்தவர். சோவியத் ரசியாவின் அதிபராய் இருந்த ஸ்டாலின் மீதிருந்த பற்றிலேயே தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

நேரு தொடங்கி ராகுல் காந்தி வரை, ஷ்யாம் பிரசாத் முகர்ஜி தொடங்கி மோடி வரை என இந்திய அரசியலின் தலைமுறை தாண்டிய கால ஓட்டத்தில் தமிழகத்தின் அரசியல் தலைமையாய் வேரூன்றி நின்றவர். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா, சுதந்திரத்திற்குப் பிந்தைய மொட்டுவிட்ட இந்தியா, எமர்ஜென்சி இந்தியா, உலகமய, தாராளமயக் கொள்கையால் விழுங்கபட்ட இந்தியா என எல்லா மாறுகாலங்களிலும் தமிழக அரசியல் படகில் பயணித்த தலைவர். பெரியாரும், அண்ணாவும் இணைந்திருந்த காலம், பெரியாரை விட்டு அண்ணா பிரிந்த காலம், பெரியாருடன் அண்ணா நட்பைப் புதிப்பித்துக் கொண்டதொரு குறுகிய காலம், அண்ணா மறைந்து பெரியார் மட்டும் உயிர்ந்திருந்த சில ஆண்டு காலம், பெரியாரும் அண்ணாவும் நெடுங்இல்லாத காலம் என தமிழகத்தில் மேற்படி அரசியல் ஆளுமைகளின் தொடர்ச்சியாய் தி.மு.க. வின் தலைவர் கலைஞரை தமிழினத்தின் அறிவார்ந்த பிரிவினரில் ஒரு பகுதியினர் பார்க்கின்றனர்; அதே நேரத்தில், பார்ப்பனிய மேலாதிக்கம், ’இந்தி, இந்து, இந்தியா’ என்ற ஆதிக்க உணர்வு நிலை கொண்ட சனநாயக மறுப்பு சக்திகள் அண்ணா, பெரியார் மீது தாம் கொண்டிருந்த வெறுப்பைக் கலைஞர் மீது கக்கியதைக் கண்டோம். காமராசரை எதிர்த்து அரசியல் செய்வதில் தொடங்கிய பயணம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய்காந்த் வரை என நீண்டு சென்று தமிழக அரசியலின் தலைப்புச் செய்தியாக சுமார் அரை நூற்றாண்டுகாலம் நீடித்தார்.  இந்தி திணிப்பு எதிர்ப்பு, எமர்ஜென்சி எதிர்ப்பு, இலங்கைக்குப் போன இந்திய அமைதிப் படை போன்ற போராட்டங்களில் அழியாத தடம் பதித்தவர் கலைஞர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகெங்கும் மக்கள் நல அரசுகள் எழுந்த காலப் பகுதியில், சுதந்திர இந்தியாவின்  நலன்புரி நாட்களில் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் படைப்பூக்கமிக்க பல திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர். சமத்துவ புரம், உழவர் சந்தை, அனைத்து சாதியினரும் அர்ச்சகரலாம், பெண்களுக்கு சொத்துரிமை, கிராமப் புற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என இப்பட்டியல் நீள்கிறது. மேலிருந்து கீழ் என்பதற்கு பதிலாக கீழிருந்து மேல் என்ற சமூக நீதிப் பார்வை தமிழக அரசியலின் பிரிக்க முடியாத பண்பாக மாறியதில் திராவிட இயக்க அரசியலுக்கு அளப்பரிய பங்கு உண்டு. சமூக நீதி என்பது சாதியடிப்படையிலான ஏற்றத் தாழ்வு எதிர்ப்பு என்பதிலிருந்து  பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என கலைஞரின் சிந்தனையிலும் செயலிலும் சிறகு விரித்துப் பறக்கக் கண்டோம். விதவை, ஊனமுற்றோர், அரவாணி போன்ற சொற்கள் தமிழ் மக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு அவ்விடத்தில் கைம்பெண், மாற்றுத்திறனாளி, திருநங்கை போன்ற சொற்களை அறிமுகப்படுத்தி சனநாயகப் பண்பாட்டை வளர்த்தவர். விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட போது மட்டுமல்ல சதாம் உசேன் வட அமெரிக்காவால் தூக்கில் போடப்பட்ட போதும் கலங்கியவர்.

அயராத உழைப்பு, தேர்தல் கூட்டணிகளில் கடைபிடித்த மதி நுட்பம், முரண்பாடுகளைக் கையாளும் ஆளுமை ,ஒப்பற்ற நினைவாற்றல், சிறந்த எழுத்தாற்றல், மாபெரும் பேச்சாற்றல், சினிமா வசனகர்த்தா, இலக்கியவாதி   என இவையாவும் ஒருங்கே பெற்ற ஆளுமையாக இருந்தபடி  ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த சிறப்புக்கு உரியவர் கலைஞர்.  தமிழ்ச் சமூகத்தின் புதுமக் காலப் பகுதியில் பத்திரிக்கை, சினிமா, எழுத்துத் துறை, மேடைப் பேச்சுப் ஆகியவற்றில் புதிய தடம் பதித்து மேட்டுக்குடிகளின் கைகளிலிருந்து தட்டிப் பறித்து வெகுமக்களின் கைகளுக்கு கொண்டு சேர்த்தவ்ர்களில் கலைஞர் குறிப்பிடத்தக்கவர். அவரது நாத்திகக் கொள்கைக்காக இந்துத்துவ அரசியல் சக்திகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருபவர். பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ்ப் பற்று, சமூக நீதி, மாநில உரிமைப் போன்ற உணர்வுகளை தமிழ்நாட்டு வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கலைஞர் என்பதாலேயே கடும்போக்காளர்களால் காழ்ப்புணர்ச்சியோடு விமர்சிக்கப்பட்டு வருபவர். இன்னொரும்புறம் தனது சொல்லுக்கு செயலுக்கு இருந்த முரண்பாடுகளாலும் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்.

அரைகுறை சனநாயமான இந்திய அரசமைப்பு சட்டமும் அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் சீர்திருத்தப்பாதையும் கலைஞரின் செயல்பாட்டு எல்லைகளைத் தீர்மானித்தன. கடந்த 70 ஆண்டுகளில் தமிழ்நாட்டு தமிழ்ச் சமூகத்தின் பெரும்போக்காக இன்றுவரை தேர்தல் சீர்திருத்தப்பாதையே இருந்து வருகிறது. இதில்  பதவி அரசியல், புகழ் விருப்பம், மன்னராட்சி விழுமியங்கள், குடும்ப சொத்து, வாரிசு அரசியல், ஊழல், சந்தர்ப்பவாத கூட்டணிகள், கொள்கை சமரசங்கள் போன்றவற்றை ஒருவரும் கடக்க வில்லை என்பதற்கு கலைஞரும் விதிவிலக்கல்ல. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது தொடங்கி ஆளும் வர்க்கத்தின்  நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தும், பதவிப் பற்றுக்கும் குடும்பப் பாசத்திற்கும் கொள்கை சமரசம் செய்ததால் சிறுபான்மையினர் உரிமை, மாநில உரிமை, இன-மொழி நலன்கள் என தாம் உயர்த்திப் பிடித்த அனைத்து அரசியல் களங்களிலும் ஏற்பட்ட சறுக்கல்களின் பட்டியலும் நீண்டு கிடக்கிறது.

மொத்தத்தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகள் அழுத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தில், அதில் இருந்துமாறி முதலாளித்துவ உறவுகள் வளரத் தொடங்கிய வரலாற்றுப் பக்கங்களில் கலைஞர் முதல்வராயிருந்துள்ளார். முதலாளித்துவ வளர்ச்சிப்  போக்கில் ஏகாதிபத்திய பொருளியலோடு பின்னிப்பிணைந்த மாற்றங்களிலும் கலைஞர் முதல்வராயிருந்துள்ளார். எனவே, கருப்புசிவப்பு இலட்சியத்தோடு தொடங்கியப் பயணம் கருப்பு வெள்ளையாக மாறியதால்  அவரது அரசியல் பக்கங்கள் கருப்பும்வெள்ளையும்  கலந்ததொரு கலப்பு வண்ணமாக  காட்சி தருவதில் முடிந்துள்ளது.

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்பது வள்ளுவம். ஆனால், மிகை எது? குணமா? குற்றமா? என்பதைக்கூட காலமும் இடமும் தளமும் தீர்மானிக்கிறது. அதாவது சீர்த்திருத்தவாத தளமா? புரட்சிகர தளமா? என்பதை பொருத்து மிகையெது என்பது அறியப்படும். மக்களைப் பொருத்தவரை அவரவர் சமூகப் பொருளாதார வாழ்நிலைக்கு ஏற்ப, அவரவர் தழுவியுள்ள சித்தாந்தத்திற்கு ஏற்ப இந்த தளம் மாறுபடுகிறது. ஆனால், உண்மையெனும் உரைகல்லைத் தவிர வேறெதுவும் அறியாத வரலாற்றின் அளவைத் தளம் என்பது புரட்சிகர தளமே ஆகும். ஆயினும், அவர் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து,  சமூக நீதி, சாதி ஒழிப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, மாநில உரிமை, இந்துத்துவ எதிர்ப்பு, மக்கள் நல திட்டங்கள் ஆகியவற்றுக்காகவே கலைஞரை பாராட்டக் காண்கிறோம் . எனவே, வெகுமக்களிடம் மேற்படி கொள்கைகள் மீண்டுமொருமுறை கலைஞரின் பெயராலும் திராவிட இயக்கத்தின் பெயராலும் பதிப்படுவது என்பது கலைஞர் செய்யத் தவறியதையும் கைவிட்டவைகளையும் செய்து முடிப்பதற்கு  துணை செய்யும்.

இந்திய ஆளும் வர்க்கக்த்தின் கடும்போக்காளர்களுக்கும் அதன் தாராளவாத சனநாயக சக்திகளுக்குமான முரண்பாடு  வெடிக்கும் ஒரு காலப் பகுதியில் கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எடப்பாடி அரசின் வழியாக முட்டுக்கட்டைப் போடக் கண்டோம். ஐந்துமுறை முதல்வராயிருந்த ஒருவரை மெரினாவில் அடக்கம் செய்வது இந்த எழுபது ஆண்டுகளில் இந்திய தேர்தல் அரசியலில் பேணப்பட்டு வந்த மரபுக்கு முரணானதல்ல. செய்நுட்பத் தன்மையிலான காரணங்களைச் சொல்லி பா.ச.க.வின் வழிநடத்தலில் தமிழக அரசு இந்த காழ்ப்புணர்ச்சி அரசியலை மேற்கொண்ட போது அதை நீதிமன்றத்தில் முறியடித்து மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணாவுக்கு அருகில் கலைஞர் ஓய்வு கொள்ளவிருக்கிறார் என்பது ஆறுதல் தருகிறது.

கரகரத்த குரலோடு அரை நூற்றாண்டுகாலம் தமிழ் நெஞ்சங்களைக் கட்டிப் போட்ட கலைஞரே, பதவி  சுமையின்றி,  சொத்து சுகமின்றி, சொந்த பந்தங்களின் தொந்தரவின்றி, பெரியாரின் தொண்டராக, அண்ணாவின் தம்பியாக வளர்ந்த உங்களுடைய இளமைக் காலத்தைச் செதுக்கிய அந்த மாசற்ற இலட்சியங்களை நோக்கி தமிழ்மக்கள் பீடுநடைபோடுவதைக் காண்பதற்கு தமிழர் கடலாம் மெரினா கடற்கரையில் உங்கள் அரசியல் வழிகாட்டி அண்ணாவின் சதுக்கத்தில்  ஓய்வெடுப்பீராக!

கலைஞரின் மறைவால் கலங்கி நிற்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் தி.மு.க. வினருக்கும் இளந்தமிழகம் இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *