அக்னிபத் – இந்துக்களை இராணுவமயமாக்கும் இராணுவத்தை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் கனவுத் திட்டம்அக்னிபத் – இந்துக்களை இராணுவமயமாக்கும் இராணுவத்தை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் கனவுத் திட்டம்

அக்னிபத் – வட இந்தியாவில் போராட்ட நெருப்பைப் பற்ற வைத்திருக்கும் பாசக தலைமையிலான ஒன்றிய அரசின் புதிய திட்டம். பதினேழரை அகவையில் இருந்து இருபத்தியொரு அகவைக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு இராணுவத்தில் 4 ஆண்டுகால ஒப்பந்தப் பணி. இந்த 4 ஆண்டுகளில் முதல் 6 மாதம் பயிற்சிக்காலம். நான்காண்டு முடிந்த பின் பணிசெய்ததற்கான சான்றிதழ் உண்டு, ஆனால், ஓய்வூதியம் எதுவும் கிடையாது. 25% பணியில் தக்கவைத்துக் கொள்ளப்படுவர். நான்காண்டுகளுக்குப் பிறகு மத்திய காவல் படை உள்ளிட்ட உள்நாட்டுப் படை அமைப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும், தொழில் தொடங்க வங்கிக் கடன், மேற்படிப்புக்கு சிற்சில சலுகைகள் எனப் பலவாறும் சமாதானம் சொல்லப்பட்டாலும் போராட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இராணுவத்தை இளமைத்துடிப்புள்ளதாக மாற்றுவது, படைச்செலவில் சம்பளத்திற்கு போகும் தொகையைக் குறைத்து நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்க செலவிடுவது, ஆட்களைவிட தொழில்நுட்பம் சார்ந்த படையாக மாற்றுவது, ஒழுக்கமும் திறமையும் தேசப் பற்றும் கொண்ட இளைஞர் பட்டாளத்தை உருவாக்குவது என அரசு சொல்லும் அக்னிபத் ஆதரவு காரணங்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவில்லை.
பீகார், அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் போராட்டம் நடக்கிறது. இராணுவ வேலை என்பது நிரந்தர பணி என்றில்லாமல் தற்காலிகப் பணியாக மாற்றப்படுவதற்கு எதிராகவே அவர்கள் போராடுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் புதிய ஆட்சேர்ப்பு இல்லாத நிலையில், இவ்வாண்டு முப்படைக்கும் சேர்த்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆளெடுப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இடிவிழுந்துள்ளது.
நான்கு ஆண்டு மட்டுமே பணி என்பதால் அர்ப்பணிப்பு இருக்காது, ஆறு மாத காலப் பயிற்சி போதாது, தலைமைக்கு கீழ் படியும் இராணுவ ஒழுங்கு சீர்குலையும் இராணுவ இரகசியங்களைத் தெரிந்தவர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக இருப்பது தேச நலனுக்கு ஏற்றதல்ல உள்ளிட்ட காரணங்களை திட்டத்தை எதிர்ப்போர் சொல்கின்றனர்.
இவற்றுக்கு அப்பால் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து, ஆர்.எஸ்.எஸ். மூலவர்களான சாவர்க்கர், மூஞ்சே, ஹெட்கவர், டியோரஸ் ஆகியோரது’ இந்துக்களை இராணுவமயமாக்கும்’ கனவை நினைவாக்குகிறது அக்னிபத். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியப் படையில் இந்துக்கள் சேர வேண்டும் என்று சாவர்க்கர் பரப்புரை செய்ததற்கு காரணம் இராணுவ பயிற்சிப் பெற்ற இந்துக்கள் கிடைப்பார்கள். அவர்கள் உள்நாட்டு எதிரிகளை அதாவது இஸ்லாமியர்களோடு சண்டைபோட உதவுவார்கள் என்று நம்பினார்.
ஆர்.எஸ்.எஸ். ஐ தோற்றுவித்த ஹெட்கவேரின் குருவும் இந்துமகாசபையின் தலைவருமாகிய மூஞ்சே இத்தாலிக்கு சென்று பாசிச இயக்கத்திடம் இருந்து பாடம் கற்று வந்தார். அதை தொடர்ந்து 1934 இல் மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்தை உருவாக்கினார். அதன் குடையின் கீழ் 1937 இல் நாசிக்கில் போன்சாலா இராணுவப் பள்ளியையும் தொடங்கினார். பின்னர் அது கல்லூரியாக விரிவடைந்தது. இராணுவத்தில் சேருவதற்கு பயிற்சி வழங்கும் வேலையை இப்பள்ளி செய்கிறது. 2008 இல் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த புரோகித், மேஜர் இரமேஷ் உபாத்யாயா ஆகியோர் மாட்டிக் கொண்டனர். போன்சாலா இராணுவப் பள்ளியின் பெயரும் அந்த வழக்கில் அடிபட்டது. ஒய்வுபெற்ற இராணுவ வீரர்கள், தளபதி சங் பரிவார அமைப்புகளை நோக்கியும் அதன் சதித்திட்டங்களை நோக்கியும் ஈர்க்கப்படுவது ஏற்கெனவே நடந்துவருகிறது.
சிறிலங்காவில் சிங்கள பெளத்தப் பேரினவாதம்தான் இலங்கை தேசியம் என்று மாறிப் போன போது சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு இயந்திரமாக செயல்பட்டது. அது போல் இந்துத்துவம்தான் தேசப் பற்று என்ற பரப்புரையில் சங் பரிவாரங்கள் வெற்றிப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்க செலவில் இராணுவப் பயிற்சி பெற்று நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, இராணுவத்தில் இருந்து வெளியே வந்தபின், சங் பரிவார படையணியில் நிரந்தர வீரர்களாக அக்னிவீரர்கள் இருப்பார்கள் என்பதுவே அக்னிபத்தின் ஆகப் பெரிய ஆபத்து.