தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்

தோழர் செம்மணி காவல்நிலைய சித்திரவதை..கார்டூனிஸ்ட் தோழர் பாலா கைது.. தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்.

கேலிச் சித்திரம் வரைந்தால் கைது, நூல் எழுதினால் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு, காவல் நிலைய சித்திரவதை என தமிழக அரசின் சர்வாதிகாரப் படலம் தொடர்கதையாகி வருகிறது. நெல்லையில் கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளாகி காவல்துறை, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தவறியதால் தற்கொலைக்கு தள்ளப்பட்டது இசக்கி முத்துவின் குடும்பம். இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் இரு பச்சிளங் குழந்தை என நால்வர் நாடே பார்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமக்குத் தாமே தீயிட்டுக் கொண்டு வெந்து தணிந்தனர். இதுவரை தமிழ்நாடு அரசின் அதீத வட்டிக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களது தற்கொலைக்கு காரணமான காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால், இதை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த காரணத்திற்காக கார்டூனிஸ்ட் தோழர் பாலாவை நேற்று நவம்பர் 5 மதியம் 1:30 மணியளவில் அவரது இல்லத்தில் நெல்லை காவல்துறையைச் சேர்ந்த நால்வர் கைது செய்துள்ளனர். மேலும் அவரது கணிணி, ஹார்டிஸ்க், கைப்பேசி ஆகியவற்றையும் பறித்துச் சென்றுள்ளனர். நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் புகார் தந்ததன் பெயரால் தோழர் பாலா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67 மற்றும் ஒருவருடைய நன்மதிப்பைக் கெடுப்பது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 501 ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடுத்துள்ளனர். அதனடிப்படையிலே அவரைக் கைதும் செய்துள்ளனர்.

கேலிக்கூத்து ஆட்சி நடத்துபவர்களுக்கு கேலிச் சித்திரத்தை சகித்துக் கொள்ளக்கூட சனநாயக உணர்வு இல்லை என்று இந்த கைது நடவடிக்கை மூலம் காட்டியுள்ளனர். கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர்களை விமர்சித்ததிற்கே கைது என்றால் இரு பச்சிளங் குழந்தைகள் உள்ளிட்ட நால்வரைத் தற்கொலைக்கு தள்ளிய அரசு அதிகாரிகளை என்ன செய்திருக்க வேண்டும்?

இதற்கு இரு நாட்களுக்கு முன் நவம்பர் 3 அன்று நெல்லை மாவட்டத்தைச் சேர்த்த வழக்கறிஞர் தோழர் செம்மணி என்ற இராஜரத்தினத்தை ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் பழனி, பழவூர் காவல் உதவி ஆய்வாளர் விமல் குமார் ஆகியோர்

தலைமையில் சென்ற காவலர் குழு வள்ளியூர் மாறன்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கடத்தி வந்துள்ளனர். கைது செய்ய பிடிவாரண்ட் எதுவும் அவர்களிடம் இல்லை. தோழர் செம்மணி கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது தமிழக அரசால் ஆயிரக்கணக்கில் போடப்பட்டுள்ள வழக்குகளை நடத்திக் கொண்டிருப்பவர். தோழர் செம்மணி தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினரும், தமிழக மக்கள் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளரும் ஆவார். அவரது வீட்டில் இருந்து கடத்திச் செல்லும் பொழுது செம்மணியின் துணைவியாரை மிரட்டியும் கையைப் பிடித்து திறுகியும் கைப்பேசியைப் பறித்தும் சென்றுள்ளனர். அதிகாலை நேரத்தில் அவரை இராதாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். அவரது இடது கால் பாதம் முறிக்கப்பட்டு, பெருவிரல் சிதைக்கப்பட்டு, நகம் கிழிக்கப்பட்ட நிலையில் உவரி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இறுதியாக, நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரிலேயே அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

நவம்பர் 2 அன்று அறப்போர் இயக்கத்தின் பொருளாளர் தோழர் நக்கீரனைப் பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தனர். ’நதிநீர் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற தலைப்பிலான நூலை எழுதியதற்காக மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் களத்தில் நிற்கும் பேராசிரியர் செயராமன் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது தமிழக அரசு.

கைதுகள், காவல் நிலையச் சித்திரவதை, தேசப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் என தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கு அன்றாடம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மன்னர்காலப் பாணியிலான சிறச்சேதத்தை மட்டும்தான் இன்னும் இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை. மற்றதனைத்தும் மன்னர் காலத்தின் டிஜிட்டல் பிரதியாக நடந்துக் கொண்டிருக்கின்றன. மத்திய பா.ச.க. அரசின் நிழல் அரசாக செயல்படுகிறது எடப்பாடி அரசு. மத்திய அரசின் சர்வாதிகார நிழல் எடப்பாடி அரசின் வழியாக தமிழகத்தின் மீதும் பரவுகிறது.

’கால் கண்டார் காலே கண்டார்’ என்பது போல் நேற்றுவரை ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்து இன்று மோடியின் கால்களைப் பற்றிக் கொண்டு நிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கருத்துரிமை, பேச்சுரிமை, மனித உரிமை என்று பேசினால், ’இவையெல்லாம் எங்கே கிடைக்கும்? கிலோ எத்தனை ரூபாய்? என்று கேட்பார் போலும். மீண்டும் எம்.எல்.ஏ. வாகக் கூட தேர்வாக முடியாதென்பதால் சுருட்ட முடிந்தவரை சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள் என அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் பேசிவருகிறார். மக்கள் பணத்தை சுருட்டுவதோடு மக்கள் விரோதக் கொள்கைகளையும் ஆட்சியாளர்களையும்

அம்பலப்படுத்துவோர் மீதும் விமர்சிப்போர் மீதும் அடக்குமுறையை ஏவிவருவதால் இனி ஒருபோதும் சட்டமன்றத்திற்குள் இன்றைய ஆட்சியாளர்கள் போக முடியாது என்பதை உணர வேண்டும்.

கார்டூனிஸ்ட்தோழர் பாலா மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். தோழர் செம்மணியைக் கடத்திச் சென்று தாக்கிய காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தன்னுடைய சர்வாதிகாரப் போக்கின் மூலம் முற்றாக மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கிறது என்பதை எடப்பாடி அரசு அம்பலப்படுத்திக் கொள்கிறது. தமிழக அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

தோழமையுடன்,

செந்தில்,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *