2ஜி தீர்ப்பும் அரசியல் நிலைப்பாடுகளும்

2 ஜி வழக்கிலிருந்து திரு ஆ.ராசா, திருமதி. கனிமொழி விடுதலையானது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் தீர்ப்பை விளக்குகின்ற வண்ணம்  அரசியல்  நிலைப்பாடுகள் எடுக்கப்படுகின்றன.  இந்திய ஆளும் வர்க்க அரசியல் எந்த திசையில் செல்கின்றது என்பதை இந்த தீர்ப்பினூடாகவும் மக்களுக்கு எடுத்துச் செல்வதே நமது பணியாகும்.  தேர்தல் களத்தில் தி.மு.க. வைப் பின்னுக்கு தள்ளுவதற்கு மத்திய பா.ச.க., மாநில அ.தி.மு.க. போன்ற ஆளும்வர்கக கட்சிகள் 2ஜி வழக்கைப் பயன்படுத்திக் கொண்டன. அவ்வகையில் இந்த வழக்கின் வழியாக அக்கட்சிகள் பலனடைந்தன என்பதை மறுப்பதற்கில்லை. அதே போன்று டெலிகாம் துறையில் கார்பரேட்களுக்கு இடையில் நடந்தப் போட்டியில் இந்த ஊழல் குற்றச்சாட்டும் வழக்கு நடவடிக்கையும் பயன்படுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 1 க்குப் பிறகு பெரிய அளவிலான ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் வலதுசாரி சக்திகளால் தொடங்கப்பட்டு இரண்டாவது ஆட்சியின் நிறைவில் ஆட்சி மாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. இதில் வலதுசாரி சக்திகளுக்கு மட்டுமல்லாது முன்னாள் அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்கள், என்.ஜி.ஓ. க்கள், தாராளவாத சக்திகள் என எல்லோருமே கைகோர்த்தனர். இறுதியில் இதன் பலன் பா.ச.க.வுக்கும் தில்லியில் ஆம் ஆத்மிக்கும் கிடைத்தது.
 2ஜி வழக்கு புனையப்பட்டு பூதாகாரமாக்கப்பட்ட போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 1 ஆட்சியின்  அமைச்சரவையில் செல்வாக்காக இருந்தது தி.மு.க.  அந்த ஆட்சியின் முடிவில், அடுத்த தேர்தலுக்கான கூட்டணியின் போது பேரம் பேசுவதற்கும் தி.மு.க. வைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கும் அமைச்சரவை எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் காங்கிரசாலும் தி.மு.க. வுக்கு எதிராக இந்த வழக்குப் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக  இந்த வழக்கு நடந்தேறிய சூழலில், பின்புல அரசியல் செயல்பாடுகள் நடைபெற்றன.
 இந்திய பொருளாதார அமைப்பு முறையில் சூறையாடும் முதலாளித்துவத்தினுடைய (crony capitalism) வளர்ச்சி என்பது ஏகபோக மூலதன சக்திகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் என்ற இந்த முக்கூட்டு, நாட்டினுடைய பொது வளங்களை, இயற்கை வளங்களைச் சூறையாடுவதனூடாகத்தான் எழுச்சிப் பெற்றது. இதுவே ஒரு கட்டத்தில் பன்னாட்டு மூலதனத்திற்கும் அன்னிய மூலதன நுழைவுக்கும் சிக்கலாகின்ற பொழுது நிர்வாக, ஆட்சி விவகாரங்களில் சீர்த்திருத்தங்களை அவர்கள் கோருகிறார்கள். புறநிலையில் அவர்கள் ஊழல் எதிர்ப்பு இயக்கங்களை அதற்குப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை நடத்துகிறார்கள். மூலதனம் இடுவதற்கான நட்பு நாடுகள் பட்டியல் மற்றும் ஒற்றைச் சாளர முறையின் தேவை போன்ற கருத்துகளைக் கட்டமைக்கிறார்கள். நீதிமன்றத்தைப் பொருளியல் கொள்கைகளுக்கும் அரசியல் நிலைமைக்கும் வர்க்க பலாபலன்களுக்கு அப்பாற்பட்ட துறையாகப் புனிதப் படுத்திக் காட்டுகிறார்கள்.   இதற்கு தூய்மைவாதம் பேசுகிற வலதுசாரி சக்திகளை அரசியல் ரீதியில் தலைமை ஏற்க தயார்படுத்துகிறார்கள். அதற்கு குஜராத் போன்ற முன்மாதிரிகளை அரசியல் தேர்வாக்க, மக்களிடம் கருத்துகள் விதைக்கப்படுகின்றன. மேற்கு நாடுகளில் விசா அனுமதி மறுக்கப்பட்ட மோடி போன்றவர்கள் பிரதமர் வேட்பாளருக்கான தகுதியுடையவர்களாக மாற்றப்படுகிறார்கள். இந்த சூழலில் தான், ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்த, மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளான திரு. ஆ.ராசா, திருமதி. கனிமொழி போன்றோர் அவர்களுக்குள்ளாகவே பலி ஆடுகளாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். ஏற்கெனவே இந்திய   சமூக, அரசியல் விவகாரங்களில் இருக்கின்ற பார்ப்பனிய மேலாதிக்கம் அதன் மாநில மற்றும் சாதிய வெறுப்பு மனோநிலை, இது போன்ற ஊழல் விவகாரங்களை கார்ப்பரேட்களின் துணையோடு பயன்படுத்திக் கொள்கிறது.
 
சமகால உலகின் பெரும்போக்காக இருக்கும் உலகமய, தாராளமயப் பொருளியல் கொள்கை பிசகின்றி அமல்படுத்தப்பட்டிருக்கும் மேற்கத்திய நாடுகளில் இது போன்ற பரிவர்த்தனை முறைகேடுகள் எல்லாம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவிலும் வோடோஃபோன் முறைகேடு, நோக்கிய ஆலை மூடல் போன்றவை சட்டப்பூர்வமாக ஆனதை அறிவோம். 2ஜி வழக்கில் தொடர்புடைய திரு ஆ.ராசா, திருமதி கனிமொழி மற்றும் எஸ்.ஆர். குழுமத்தினர், அனில் அம்பானி குழுமத்தினர் எனப் பலரும் விடுவிக்கப்பட்ட இன்றைய தீர்ப்பு என்பது, வருங்காலத்தில் 2ஜியில் நடந்தேறியது போன்ற பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமாக்கப்படும் என்பதற்கான ஒரு முன்னோட்ட்ம் தான்.  உலகமய, தாராளமயக் கொள்கை இன்னும் முமு வீச்சில் அமலாகும் பொழுது இவை நடக்கும்.
 ’2 ஜி வழக்கு  ஏர்டெல் மற்றும் சங் பரிவாரக் கூட்டணியால் கிளப்பிவிடப்பட்டது என்று திரு. ஆ.ராசாவே அரசியலாக குற்றஞ்சாட்டுகிறார். பார்ப்பனியம் மட்டுமல்ல கார்ப்பரேட்களும் பிரச்சனை என்பது வெளிப்படையானது. இதை திரு. ஆ.ராசாக் கூட மறுக்கவில்லை.  வலதுசாரி, தாராளவாத அரசியல் சக்திகள் எனப் பலத் தரப்பாருடனும் கூட்டணி வைக்கும் கார்ப்ரேட்கள்,    அவ்வப்போது சிலரைப் பாதுகாத்தும் சிலரைப் பலியிட்டும் தமது நலனை உறுதி செய்துகொள்கின்றனர். ’குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை’ என்று திரு அ.ராசாவும் திருமதி கனிமொழியும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதால் இவர்களும் சரி இந்த அமைப்பும் சரி புனிதமாகிவிடாது.  Crony Capitalism த்திற்கு வழிவகை செய்யும் இந்த அமைப்பே குற்ற அமைப்பாகும்.    அதானியைப் பாதுகாக்கும் பா.ச.க. வும் அம்பானிகளை வளர்த்துவிடும் காங்கிரசும் இக்கட்சிகளோடு கைக்கோர்த்து ஆட்சிக் கட்டிலில் இருந்து தேனெடுத்தவர்களும் புறங்கையை நக்கியவர்களும் குற்ற அமைப்பின் பகுதிதான். பார்ப்பனிய எதிர்ப்பின் பெயராலும் மாநில உரிமைகளின் பெயராலும் இந்தத் தீர்ப்புக்காக அகமகிழ்ந்து போவது,   கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்தும் அறியாமையில் இருந்தும் வெளிக்கொண்டு வருவதற்கு பயன்படுத்த வேண்டிய நமது  மக்களின் பொது சொத்தை, வளங்களை ஏப்பம் விடும் crony capitalism என்ற குற்ற அமைப்பை பாதுகப்பதற்கே துணை செய்யும்.  பார்ப்பனிய எதிர்ப்பும் மாநில உரிமை உணர்வும் சனநாயக உணர்வின் பாற்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால்,  அதன் பெயரால் ஊழலை பொறுத்துக் கொள்வதும் ஊழல் செய்வதில் சாதி, தேசிய சமத்துவத்தைக் கோருவதும் அதே சாதி, தேசிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் வர்க்க மக்களுக்கு  இழைக்கும் தீங்கு என்பதை இத்தீர்ப்பை வரவேற்போர் நினைவில் கொள்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *