ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ்(FITE) பொதுக்குழு கூட்டம் – நிகழ்வறிக்கை

ஐடி துறையில் நிலவி வரும் சட்ட விரோத பணிநீக்க நடவடிக்கைகளை எதிர்ப்போம், போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்

வெற்றிகரமாக தொழிற்சங்கமாக பதிவு செய்யப்பட்டதிற்கு பின்னர் ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ் – தமிழ்நாடு இன் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை, அடையாறு, நிலா பார்ட்டி ஹாலில், கடந்த 07/01/2018 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சங்கத்தின் தலைவர் பரிமளா அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுச் செயலாளர் சதீஸ் அவர்கள் கடந்த 2017ம் ஆண்டிற்கான சங்கத்தின் நடவடிக்கைகளை ஆண்டறிக்கையாக சமர்ப்பித்தார். இணைச் செயலர் பாரதிதாசன் அவர்கள் கடந்த 2017ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதியறிக்கையை தாக்கல் செய்தும், தொழிற்சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு வலுவான நிதி ஆதாரத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ் பொதுக்குழு தனது உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் சங்கத்தின் மூன்றாண்டு நிறைவு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு பல்வேறு தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளது. 2017 ஆண்டுக்கான நிதியறிக்கையை,ஆண்டறிக்கையை பொதுக்குழு ஆய்ந்து ஒப்புதல் வழங்கியது. சில குறிப்பிட்ட நிறுவனங்களின் மீது 2k எனப்படும் கூட்டு தொழிற் தகராறு மூலம் அந்நிறுவன தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை தொழிலாளர் துறையில் சமர்ப்பித்து,அக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட உறுதி ஏற்று இருக்கிறது. மேலும் தொழிற்சங்கத்தின் சீரான இயக்கத்திற்காக 11 நபர்களைக் கொண்ட புதிய செயற்குழுவையும் அதன் நிர்வாகிகளையும் பொதுக்குழு ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளபடி மாநில அளவில் இயங்கும் நமது தொழிற்சங்கத்தை இந்திய அளவிலான தொழிற்சங்கமாக மாற்றவும், அதன் பொருட்டு பெங்களூரு, ஹைதிராபாத், கொச்சி, பூனே, தில்லி, கொல்கத்தா போன்ற இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள ஐடி ஊழியர்களை தொழிற்சங்கத்தில் இணைக்க பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உறுப்பினர்களின் ஏமாற்று வேலைகளை பொதுக்குழு கண்டிப்பதோடு, அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளது. சம காலத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தனது முழு ஆதரவையும் ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ் பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது. மேலும் வரும் நாட்களில் ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ் தொழிற்சங்கத்தை ஐடி துறையினர் மத்தியில் வெகுவாக கொண்டு செல்லவும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பொதுக்குழு முடிவு செய்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள்:

பரிமளா, தலைவர்.

திருவடி பாலாஜி, துணைத் தலைவர்.

சதீஸ், பொதுச் செயலாளர்.

பாரதிதாசன், இணைச் செயலர்.

இராதாகிருஷ்ணன், பொருளாளர்.

நன்றி.

பரிமளா, தலைவர்.

சதீஸ், பொதுச் செயலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *